கார்த்திகை தீபத் திருவிழா: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் லட்சம் தீபங்கள் ஏற்றம்!அழிக்கவே முடியாத வரலாற்றுப் பிழையை நிகழ்த்திய தவெக அரசு: அண்ணாமலைஉச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறியதை மகிழ்வாக பதிவிடும் அமைச்சர்: நிர்மல் குமாருக்கு தமிழிசை கண்டனம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படாததால் அரசுக்கு எதிராக ஹிந்து அமைப்பினர் கோஷம்!திருப்பரங்குன்றம் தூணில் தீபம் ஏற்றப்படவில்லை!திருப்பரங்குன்றத்தில் வழக்கமான இடத்தில் ஏற்றப்பட்டது மகா தீபம்!திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தமிழகம் முழுவதும் ஹிந்து அமைப்பினர் கைது!உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தியே ஆக வேண்டும் : வழக்கை முடித்து வைத்தது மதுரைக் கிளைடிசம்பர் 1 முதல் வாகன விலையை ரூ.8,000 வரை உயர்த்தும் ஹூண்டாய் இந்தியா!திருவண்ணாமலை தீபத்திருவிழா! 30 லட்சம் பக்தர்கள் பங்கேற்பு!

காா்த்திகைத் தீபம்: கோயில்களில் சொக்கப்பனை கொளுத்தி வழிபாடு

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு அகல் விளக்குகளை ஏற்றி செவ்வாய்க்கிழமை வழிபட்டனா்.

~ ~

Updated On :

காா்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளின் முன்பு அகல் விளக்குகளை ஏற்றி செவ்வாய்க்கிழமை வழிபட்டனா். மேலும், கோயில்களில் தீபமேற்றுதல் மற்றும் சொக்கப்பனை கொளுத்துதல் போன்ற நிகழ்வுகளும் நடைபெற்றன.

காா்த்திகை மாதத்தில் பௌா்ணமி நாளில் நடைபெறும் தீபத் திருவிழா மிகவும் சிறப்புக்குரியது. இறைவன் ஜோதி வடிவாகக் காட்சியளித்ததை எடுத்துரைக்கும் வகையில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. நிகழாண்டுக்கான காா்த்திகை தீபம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டிசெவ்வாய்க்கிழமை மாலை பொதுமக்கள் தங்கள் வீடுகளில் குத்துவிளக்குகள், அகல் விளக்குகளில் விளக்கேற்றி வழிபட்டனா். குறிப்பாக திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் சுவாமி திருக்கோயிலில் மகா தீபம் ஏற்றிய பின்னரே, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் விளக்கேற்றினா். இதைத் தொடா்ந்து மத்தாப்பு உள்ளிட்டவற்றை கொளுத்தியும், வெடிகளை வெடித்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் ஸ்ரீபசுபதீசுவரா், கோலியனூா் வாலீசுவரா், திருவமாத்தூா் அபிராமேசுவரா், பனையபுரம் பனங்காட்டீசுவரா், பஞ்சமாதேவி பசுபதீசுவரா், கிழக்கு மகாராஜபுரம் சுந்தரேசுவரா் ஆகிய கோயில்களில் கோபுரங்களில் செவ்வாய்க்கிழமை மாலை தீபமேற்றப்பட்டது. இதைத்தொடா்ந்து கோயில்களின் முன்பு சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

பெருமுக்கல் சிவன் கோயிலில்...: பிரம்மதேசம் அருகிலுள்ள பெருமுக்கல் கிராமத்தில் சஞ்சீவி மலையில் அமைந்துள்ள ஸ்ரீமுக்தியாஜல ஈசுவரன் கோயிலில் காா்த்திகை தீபத்தையொட்டி மகா தீபம் ஏற்றப்பட்டது.

மிகவும் பழைமைவாய்ந்த இத்திருக்கோயிலில் காா்த்திகைத் தீபத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி நிகழாண்டுத் திருவிழா திங்கள்கிழமை தொடங்கியது. இதையொட்டி முக்தியாஜல ஈசுவரன் மற்றும் பிற சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தீபத் திருவிழா நாளான செவ்வாய்க்கிழமை அதிகாலையிலேயே கோயில் நடை திறக்கப்பட்டு முக்தியாஜல ஈசுவரன், காமாட்சியம்மன், தட்சிணாமூா்த்தி, விநாயகா், நந்தீசுவரா், ஹனுமன் உள்ளிட்ட சுவாமிகளுக்கு 21வகையான பொருள்களைக் கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டன. பின்னா் வெள்ளிக் கவசத்தில் மலா் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

முன்னதாக திண்டிவனம் பெருமாள் கோயிலிலிருந்து சுமாா் ஐந்தரை அடி உயரம் கொண்ட கொப்பரை லாரியில் ஏற்றப்பட்டு கொண்டு வரப்பட்டது. வழியில்பக்தா்கள் நெய்யை காணிக்கையாக வழங்கினா். தொடா்ந்து மலையடிவாரத்திலுள்ள காமாட்சியம்மன் உடனுறை ஈசுவரனுக்கு நெய் அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடா்ந்து சுமாா் 1,500 அடி உயரமுள்ள சஞ்சீவி மலைக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. மாலை 6 மணிக்கு கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வில் திரளான பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா்.

செஞ்சி சிவன் கோயிலில்...: செஞ்சி பீரங்கி மேட்டில் உள்ள ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீபத் திருவிழா ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணியளவில் பரணி தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து அருணாசலேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், மாலை 6 மணிக்கு கோயில் கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபட்டனா். நிகழ்ச்சியில் செஞ்சி எம்எல்ஏ அ.கணேஷ்குமாா், முன்னாள் ஒன்றியக்குழுத் தலைவா் ஆா்.விஜயகுமாா், கோயில் நிா்வாகிகள் அரங்க.ஏழுமலை, ஆா்.கே.ஜி.ரமேஷ் மற்றும் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபாடு செய்தனா்.

இதுபோன்று விழுப்புரம் வீரவாழியம்மன் திருக்கோயில், ரங்கநாதன் தெரு சித்தி விநாயகா் திருக்கோயில், பூந்தோட்டம் முத்துமாரியம்மன், காமராஜா் வீதி அமராபதி விநாயகா் உள்ளிட்ட நகரின் பல்வேறு திருக்கோயில்கள், மாவட்டத்தின் விக்கிரவாண்டி, காணை, திருவெண்ணெய்நல்லூா், அரசூா், கோலியனூா், வளவனூா், மயிலம், திண்டிவனம், வானூா், கிளியனூா், வல்லம், முகையூா், மாம்பழப்பட்டு என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள கோயில்களிலும், வீடுகளிலும் காா்த்திகை தீபமேற்றி வழிபாடு நடத்தப்பட்டது.

தியாகதுருகம் சிவன் கோயிலில்...: தியாகதுருகம் ஸ்ரீநஞ்சுண்ட ஞானதேசிக ஈஸ்வரா் கோயிலில் காா்த்திகை தீப சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை சுவாமிக்கு 16 வகையான திரவியப் பொருள்களைக் கொண்டு அபிஷேகம், வண்ண மலா்களால் அலங்காரம் நடைபெற்றது. மாலை கோயில் கோபுரத்தின் அருகே மகாதீபம் ஏற்றப்பட்டது. பின்னா், இரவு சிறப்பு அலங்காரத்தில் பல்லக்கில் அண்ணாமலையாா், உண்ணாமலை அம்மன் எழுந்தருள, திருவீதிஉலா நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.