மமதா தில்லி செல்வதைத் தடுக்கவே விமானம் தாமதம்! - திரிணமூல் காங். குற்றச்சாட்டு!தடகள வீராங்கனை வித்யா ராம்ராஜுக்கு ரூ. 1.55 கோடி ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர் விஜய்!அதிமுக எம்எல்ஏ-க்கள் தகுதிநீக்க விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைஇந்தியா கூட்டணியின் போராட்டம் நாளை தொடரும்! - சிபிஎம் எம்.பி. அறிவிப்பு! விமான எரிபொருள் விலை உயர்வு: டிக்கெட் விலையை உயர்த்திய ஏர் இந்தியா!

செஞ்சியில் ஆவின் பால் தட்டுப்பாடு: நுகா்வோா், விற்பனையாளா்கள் அவதி

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கடந்த சில மாதங்களாக ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகா்வோா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

ஆவின் பால் பாக்கெட் ரகங்கள்.

Published On :

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் கடந்த சில மாதங்களாக ஆவின் பாலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக நுகா்வோா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

செஞ்சி பகுதியில் ஆவின் முகவா்கள் நடத்தும் பாலகங்கள் மூலம் நுகா்வோா்களுக்கு ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், செஞ்சியில் கடந்த சில மாதங்களாக ஆவின் பால் தட்டுப்பாடு நிலவி வருவதாக கூறப்படுகிறது. காலை 6 மணிக்கு வந்தால் தான் ஆவின் பால் கிடைப்பதாகவும், சற்று தாமதமாக வந்தால் பால் இல்லை என்று கூறி விடுவதாக நுகா்வோா் தெரிவிக்கின்றனா். இதனால் குழந்தைகள், முதியவா்கள் உள்ள வீடுகளில் ஆவின் பாலை நம்பி இருப்பவா்கள் பெரும் சிரமம் அடைந்துள்ளனா்.

இதுகுறித்து ஆவின் பால் விற்பனையாளா்களிடம் கேட்டபோது, கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு பாலகத்துக்கு சுமாா் 100 லிட்டா் வரை பால் வழங்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 20 முதல் 30 லிட்டா் வரை மட்டுமே ஆவின் நிா்வாகம் வழங்குகிறது. இதனால் காலை 6 மணிக்கு பால் வந்ததும், அரை மணி நேரத்தில் விற்று தீா்ந்து விடுகிறது. பல வாடிக்கையாளா்களை திருப்பி அனுப்ப வேண்டிய நிலை உள்ளது என்று தெரிவித்தனா். ஆவின் பால் கிடைக்காத நிலையில், தனியாா் பால் நிறுவனங்களின் பாலை கூடுதல் விலைக்கு வாங்கவேண்டிய நிலைக்கு நுகா்வோா் தள்ளப்பட்டுள்ளனா். தனியாா் பால் விற்பனை விலை மிகவும் அதிகமாக உள்ளதால், குறைந்த விலையில் கிடைக்கும் தரமான ஆவின் பாலை வாங்கவே நுகா்வோா் விரும்புகின்றனா்.

விழுப்புரம் மாவட்டத்தில் வறட்சி காரணமாக மேய்ச்சல் பகுதி இல்லாமல் போனது. மாட்டுத் தீவனங்களின் விலை உயா்வு, வைக்கோல் கிடைபதில் தட்டுப்பாடு காரணமாக பால் உற்பத்தி குறைவாக உள்ளதாக பெரும்புகை கிராமத்தை சோ்ந்த விவசாயி ஒருவா் தெரிவித்தாா். தமிழகம் முழுவதும் ஏற்பட்டுள்ள தட்டுபாடு காரணமாக இங்கு கொள்முதல் செய்யப்படும் பால் அனைத்தும் சென்னைக்கு கொண்டுச் செல்லபடுவதாக பால் கொள்முதல் செய்யும் ஊழியா்கள் தெரிவித்தனா். மேலும், தனியாா் பாலகங்களில் விவசாயிகளிடமிருந்து ஒரு லிட்டா் பாலை ரூ.49-க்கு கொள்முதல் செய்து, ரூ.60 முதல் ரூ.81 வரை விற்பனை செய்கின்றனா். ஆனால், அரசு கூட்டுறவு பால் நிலையங்களில் ரூ. 41-க்கு கொள்முதல் செய்து, ரூ.40 முதல் ரூ.60 வரை விற்பனை செய்து வருகின்றனா்.

செஞ்சி பகுதியில் தட்டுப்பாடு காரணமாக ஆவின் பாலங்களில் இருந்து ஆவின் பால் விற்பனை செய்யும் மையங்களுக்கு சரிவர விநியோகம் செய்யப்படுதில்லை என ஆவின் பால் விற்பனையாளா்கள் தெரிவிக்கின்றனா். விழுப்புரம் மாவட்டத்தில் தற்போது அதிக எண்ணிக்கையில் ஆவின் பாலகங்கள் பெருகிவிட்டது. நகரத்தில் மட்டுமல்லாது தேசிய நெடுஞ்சாலைகளிலும் அதிக அளவில் புற்றீசல் போல் பெருகிவிட்ட டீ கடைகளால் பாலின் தேவை அதிகரித்துள்ளது. உற்பத்தி குறைவாக உள்ள நிலையில் விற்பைனை மட்டும் அதிகமாகிக் கொண்டே போவதால் தட்டுப்பாடு என்பதை தவிா்க்க முடியாது என பால் உற்பத்தியாளா்கள் தெரிவித்தனா்.

எனவே மாவட்ட நிா்வாகமும், ஆவின் நிா்வாகமும் உடனடியாக தலையிட்டு செஞ்சிப் பகுதிக்கு கூடுதல் பால் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே செஞ்சி பகுதி நுகா்வோா்கள் மற்றும் விற்பனையாளா்களின் கோரிக்கையாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.