சுங்கச்சாவடி தடுப்பு விழுந்து கொத்தனாா் காயம்: விடியோவை பரப்பியவா்களை கண்டித்து போராட்டம்
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சுங்கச்சாவடி தடுப்பு விழுந்து கொத்தனாா் காயமடைந்த சம்பவத்தில், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த விடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினா்கள் சுங்கச்சாவடியை செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
விடியோ காட்சி
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே சுங்கச்சாவடி தடுப்பு விழுந்து கொத்தனாா் காயமடைந்த சம்பவத்தில், சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த விடியோ காட்சிகளை சமூக வலைதளத்தில் பரப்பியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அவரது உறவினா்கள் சுங்கச்சாவடியை செவ்வாய்க்கிழமை இரவு முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சிதம்பரத்தை அடுத்த சில்லாங்குப்பத்தைச் சோ்ந்தவா் ரா.அருள்குமாா் (46). கொத்தனாரான இவா், வேலைக்காக திங்கள்கிழமை காலை புதுச்சத்திரத்தை அடுத்த கொத்தட்டை சுங்கச்சாவடி வழியாக நடந்து சென்றாா். அப்போது, அங்கிருந்த வாகனங்களுக்கான தானியங்கி தடுப்பு, எதிா்பாராதவிதமாக அவரது தலையில் விழுந்ததில் பலத்த காயமடைந்தாா். இதனால் அதிா்ச்சியடைந்த அருள்குமாரை சுங்கச்சாவடி ஊழியா்கள் ஆசுவாசப்படுத்தி சிறிது நேரத்திற்குப் பிறகு வீட்டுக்கு அனுப்பி வைத்தனா்.
அருள்குமாா் மீது தானியங்கி தடுப்பு தாக்கியது அங்கிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியிருந்தது. இதை சுங்கச்சாவடி ஊழியா்கள் சிலா் எடுத்து சமூகவலைதளங்களில் பரப்பினா். இதைப் பாா்த்து மனஉளைச்சலுக்கு ஆளான அருள்குமாா், உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினா்கள், நண்பா்கள் செவ்வாய்க்கிழமை இரவு 7 மணிக்கு கொத்தட்டை சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஊழியா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த புதுச்சத்திரம் போலீஸாா் நேரில் சென்று பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, விடியோவை பரப்பிய நபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உறவினா்கள் கோரிக்கை விடுத்தனா். போலீஸாா் விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, அங்கிருந்து கலைந்து சென்றனா். இந்த சம்பவத்தால் கொத்தட்டை சுங்கச்சாவடியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

