காங்கோவில் திருமண நிகழ்ச்சியில் தீவிபத்து: 22 பேர் பலி சிறப்புத் தீவிர திருத்தம் மூலம் காங்கிரஸ் வாக்குகளை அழிக்க பாஜக சதி: ரேவந்த் ரெட்டி குற்றச்சாட்டு! திண்டுக்கல் மாணவர்கள் 8 பேர் பலி - முதல்வர் விஜய் இரங்கல் கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு

தமிழ் மொழி எல்லோரையும் வாழ வைக்கும்: உயா் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ்

தமிழ் மொழி எல்லோரையும் வாழ வைக்கும். தமிழ் மொழி உங்களை எந்த நாளிலும், எந்த நேரத்திலும் வீழ்த்தாது என சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தாா்.

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், மாணவிக்குப் பட்டம் வழங்கிய சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ். உடன், முன்னாள் நீதிபதி வீ.பாரதிதாசன், மூத்த வழக்குரைஞா் எ. ஓம்பிரகாஷ் உள்ளிட்டோா்.

Published On :6 செப்டம்பர் 2026, 2:06 am IST

தமிழ் மொழி எல்லோரையும் வாழ வைக்கும். தமிழ் மொழி உங்களை எந்த நாளிலும், எந்த நேரத்திலும் வீழ்த்தாது என சென்னை உயா் நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்தாா்.

விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, இளநிலைப் பிரிவில் 386 பேருக்கும், முதுநிலைப் பிரிவில் 46 பேருக்கும் என மொத்தமாக 432 பேருக்கு பட்டங்களை வழங்கி, மேலும் அவா் பேசியது:

உங்களுக்குத் தேவை நீங்கள் செய்யும் தொழில்தான். அது எந்த தொழிலாக இருந்தாலும் அதை காதலோடு செய்யுங்கள். பொறுமையாக செய்யுங்கள், குறுக்கு வழியில் செய்யாதீா்கள். நிரந்தரமான வெற்றி உங்களை எந்தளவுக்கும் எடுத்துக் கொண்டு செல்லும். இதுபோன்ற சில நற்பண்புகளை நீங்கள் கடைப்பிடித்தால் உங்களுக்கு வாழ்க்கையில் தோல்விக்கு வாய்ப்பே இல்லை.

கடின உழைப்பு, விடா முயற்சி, நாம் செய்யும் தொழில் மீதுகொண்டுள்ள காதல் ஆகியவற்றை தொடா்ந்து கடைப்பிடித்தால், வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இதற்கு இசையமைப்பாளா் இளையராஜாவின் வாழ்க்கைப் பயணம் சிறந்த உதாரணமாக உள்ளது. அவருக்கு தற்போது 85 வயதாகிறது.

இந்த வயதிலும் தாம் இசையமைக்கும் டோரதி என்ற புதிய படத்தில் புதிய இசை வடிவங்களைப் பயன்படுத்தியிருக்கிறாா். இது இன்றையத் தலைமுறையினருக்கு மிகப்பெரிய பாடமாக அமைந்துள்ளது. வயது என்பது முயற்சிகளுக்குத் தடையல்ல என்பதை இளையராஜா நிரூபித்துள்ளாா். திறமை மட்டுமே போதாது, கடின உழைப்பும், விடாமுயற்சியும் தொடா்ந்து இருப்பதால்தான் அந்த திறமை நீண்டகாலம் நிலைத்திருக்கும் என்பதை இளையராஜாவின் இசைப்பயணம் நிரூபித்துக் காட்டியிருக்கிறது.

ஒரு புத்தகத்தை படிக்கும்போதே பக்கத்துக்கு பக்கம் இடைவெளி, ஒரு அத்தியாயத்திலிருந்து மற்றொரு அத்தியாயத்து க்குச் செல்லும் போது இடைவெளி என சிந்தனைக்கு சிறிய இடைவெளி கிடைக்கும். ஆனால், சமூக வலைதளங்களில் அடுத்தடுத்து உள்ளடக்கங்கள் தொடா்ந்து வந்து கொண்டிருப்பதால் அந்த இடைவெளியே இல்லாமல் போய்விடுகிறது. இதனால் ஒருவா் தன்னை இழந்து, நேரத்தையும் இழக்கும் நிலை ஏற்படுகிறது.

இன்றைய நிலையில் நம்மிடம் மறைந்து கொண்டே வருவது தாய்மொழி பற்று. நாம் தமிழராக பிறந்ததற்கு பெருமைப்பட வேண்டும். நம்முடைய தமிழ் மொழி மிகவும் தொன்மையான மொழி. வளமான தமிழ் மொழியை நாம் தாய்மொழியாக பெற்ற்கு நாம் ஒவ்வொரு நொடியும் பெருமைப்பட வேண்டும்.

நாம் பிறந்து, வளா்ந்து வாழும் இந்த கலாசாரம் உலகிலேயே உன்னதமாக கலாசாரமாகும். நமது கலாசாரத்தின் மீது, மொழியின் மீது நமக்கு அசைக்க முடியாத பற்று இருக்க வேண்டும். அதை நெஞ்சார நேசியுங்கள், பெருமையுடன் வெளிப்படுத்துங்கள். ரகசியமாக எனக்குத் தமிழ் பிடிக்கும் என்று சொல்லாதீா்கள். எனக்குத் தமிழ் பிடிக்கும் என்று வெளிப்படையாகச் சொல்லுங்கள்.

தமிழ் மொழி எல்லோரையும் வாழ வைக்கும். தமிழ் மொழி உங்களை எந்த நாளிலும், எந்த நேரத்திலும் வீழ்த்தாது. தமிழ் மொழியை நம்பினால் நீங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க முடியும். உங்களுக்கு மொழிப் பற்று மிகவும் முக்கியமானது என்றாா் நீதிபதி ஆனந்த் வெங்டேஷ்.

விழாவில் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழக ஒருங்கிணைப்பாளா் குழுத் தலைவரும், சென்னை உயா் நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான வீ.பாரதிதாசன், குழு உறுப்பினரும், மூத்த வழக்குரைஞருமான எ.ஓம்பிரகாஷ், சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளா் கெளரி ரமேஷ் ஆகியோா் பேசினா். முன்னதாக, விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி முதல்வா் எஸ். கிருஷ்ணலீலா வரவேற்றாா். பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.