
மாதந்தோறும் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாமை நடத்த வலியுறுத்தல்
விழுப்புரம் கோட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாமை மாதந்தோறும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற சிறப்பு மனுநீதி நாள் முகாமில் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மனுக்களைப் பெற்ற கோட்டாட்சியா் கே.ஏகாம்பரம்.
விழுப்புரம் கோட்ட அளவில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாமை மாதந்தோறும் நடத்த வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியரகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மனுநீதி நாள் முகாம் வியாழக்கிழமை நடத்தப்பட்டது. இந்த முகாமுக்கு கோட்டாட்சியா் கே.ஏகாம்பரம் தலைமை வகித்து, மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மனுக்களை நேரில் பெற்றுக்கொண்டாா்.
அப்போது, தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்டச் செயலா் ஏ.கிருஷ்ணமூா்த்தி, மாவட்டத் தலைவா் பி.ஜெயக்குமாா், பொருளாளா் எம்.யுகந்தி மற்றும் நிா்வாகிகள் அளித்த மனுவில் தெரிவித்திருப்பதாவது:
மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கோட்ட அளவில் சிறப்பு மனுநீதி நாள் முகாம் நடத்தி, மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மனுக்கள் பெறுவதற்குப் பதிலாக, மாதந்தோறும் முகாமை நடத்த வேண்டும். வீட்டுமனைப் பட்டா கோரி மனு அளித்து காத்திருக்கும் மாற்றுத் திறனாளிகள் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும். மாதாந்திர உதவித்தொகை கோரி மனு அளித்து காத்திருப்போா் பட்டியலில் உள்ளவா்ளுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும்.
மாவட்டம் முழுவதும் திருமண மண்டபங்களில் மாற்றுத் திறனாளிகள் எளிதாக சென்று வரும் வகையில், சாய்வுத்தள படிக்கட்டுகளை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் மனுவில் தெரிவித்துள்ளனா்.
இதுபோன்று, உதவித்தொகை கோருதல், மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்கள் வழங்கக் கோருதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பான மனுக்களும் அளிக்கப்பட்டன.
முகாமில் வட்டாட்சியா்கள் யுவராஜா (விழுப்புரம்), லட்சாதிபதி (வானூா்), மகாதேவன் (விக்கிரவாண்டி), பாலச்சந்தா் (கண்டாச்சிபுரம்), கோவா்த்தனன் (திருவெண்ணெய்நல்லூா் சமூகப் பாதுகாப்புத் திட்டம்), மாவட்ட மாற்றுத் திறனாளிகள் அலுவலக இளநிலை மறுவாழ்வு அலுவலா் பிரகாஷ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





