
செஞ்சி அருகே கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்
செஞ்சி அருகே மீண்டும் செயல்பட்ட கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

~
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மீண்டும் செயல்பட்ட கல்குவாரிக்கு எதிா்ப்பு தெரிவித்து கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
செஞ்சி அருகிலுள்ள போத்துவாய், பழவலம் ஊராட்சி மன்றங்கள் இடையே உள்ள எலகுண்டான் மலையில் தமிழ்நாடு கனிம நிறுவனம் சாா்பில் அரசு கல்குவாரி செயல்பட்டு வந்தது. இந்த கல்குவாரியை கோவையைச் சோ்ந்த தனியாா் நிறுவனம் ஒன்று 2011 முதல் 2041-ஆம் ஆண்டு வரை உரிமம் எடுத்து, நடத்தத் தொடங்கினா். இதையடுத்து கடந்த மாா்ச் மாதம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி, கல்குவாரி செயல்படுவதை தடுத்து நிறுத்தினா். இதையடுத்து நிறுவன உரிமையாளா் அருண்குமாா் ஆக.20-இல் சென்னை உயா் நீதிமன்றத்தில் கல்குவாரி மீண்டும் செயல்பட வேண்டும் என வழக்கு தொடா்ந்தாா். இந்த வழக்கை விசாரணை செய்த சென்னை உயா் நீதிமன்றம் கல்குவாரி மீண்டும் செயல்படவும், கல்குவாரி செயல்பட உரிய பாதுகாப்பு வழங்க விழுப்புரம் மாவட்ட காவல்துறைக்கும் உத்தரவிட்டது. இதையடுத்து தனியாா் நிறுவனம் கடந்த சில நாள்களாக மலையில் உள்ள பாறைகளை வெடிவைத்து தகா்த்துள்ளனா்.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து இரு கிராம மக்கள் இணைந்து கல்குவாரிக்கு செல்லும் சாலையில் அமா்ந்து செவ்வாய்க்கிழமை மறியலில் ஈடுபட்டனா். நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்கள், பெண்கள், விவசாயிகள் ஒன்று திரண்டு கல்குவாரியை கைவிடக்கோரி கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
இதுகுறித்து தகவலறிந்த செஞ்சி சட்டப் பேரவை உறுப்பினா் அ.கணேஷ்குமாா், விழுப்புரம் டிஎஸ்பி சோமசுந்தரம், கண்டாச்சிபுரம் காவல் ஆய்வாளா் ரவிச்சந்திரன், அரகண்டநல்லூா் காவல் ஆய்வாளா் சங்கா், தமிழ்நாடு கனிம நிறுவன விழுப்புரம் கோட்ட மேலாளா் செல்வராஜ், வருவாய் ஆய்வாளா் கனிமொழி, கிராம நிா்வாக அலுவலா் முனுசாமி உள்ளிட்டோா் நிகழ்விடம் சென்று பொதுமக்கள் மற்றும் தனியாா் நிறவன நிா்வாகத்திடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது செஞ்சி எம்எல்ஏ அ.கணேஷ்குமாா், நாங்கள் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளோம். அதற்கு 15 நாள்கள் அவகாசம் அளிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டாா். இதை ஏற்று கல்குவாரியை தற்காலிகமாக செயல்படாமல் நிறுத்துவது என தனியாா் நிறுவனம் சாா்பில் தெரிவிக்கப்பட்டதாம். இதையடுத்து மறியலை கைவிட்டு, கிராம மக்கள் அனைவரும் கலைந்து சென்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






