எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மாநில அரசின் ஒத்துழைப்பின்மையால்தான் பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வர முடியவில்லை: அமித்ஷா

மாநில அரசின் ஒத்துழைப்பின்மையே மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு வந்து சேராததற்கு காரணம் என பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா குற்றஞ்சாட்டினார்.

News image
Updated On :13 ஏப்ரல் 2016, 3:33 pm

கோபாலகிருஷ்ணன்

மாநில அரசின் ஒத்துழைப்பின்மையே மத்திய அரசின் திட்டங்கள் முழுமையாக மக்களுக்கு வந்து சேராததற்கு காரணம் என பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா குற்றஞ்சாட்டினார்.

 திருச்சியில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியது:

 தமிழக மக்களுக்கு தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக சட்டப்பேரவை தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு முக்கியமான தேர்தலா இருக்கும்.

 தமிழகத்தை தி்முக, அதிமுக ஆகிய இருகட்சிகளும் மாறி மாறி ஆட்சி செய்தன. தமிழக தேர்தல்களில் பொதுமக்கள், இதுவரை யாரை வெளியேற்ற வேண்டும் என்ற எண்ணத்துடனே வாக்களித்தனர். இதன் காரணமாக மற்றொருவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பாக இத்தேர்தலை பயன்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.

ஊழலின் காரணமாக முன்னேற்றம் பாதிப்பு:

 திமுக, அதிமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஊழலில் திளைத்த கட்சிகள். இந்தக் கட்சிகளின் தலைவர்கள் மீது, 2ஜி அலைக்கற்றை வழக்கு, வருமானத்துக்கு அதிகமான சொத்துகுவித்த வழக்கு, ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு, சிதம்பரம் மகன் மீதுள்ள அமுலாக்கப்பிரிவு வழக்கு ஆகியவை உள்ளன. இவை அரசியல் ரீதியான குற்றச்சாட்டுகள் அல்ல. இந்த வழக்குகள், இவர்கள் ஆட்சியில் இருந்த போது செய்த ஊழலின் பரிணாமம்.

 திமுக, அதிமுக கட்சிகளின் ஊழலின் காரணமாக தமிழகத்தின் முன்னேற்றம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ஏதாவது முன்னேற்றம் ஏற்பட்டிருந்தால் அது விவசாயிகளால் ஏற்பட்டதே: ஆட்சியாளர்களால் ஏற்பட்டது அல்ல.

மாநில அரசின் ஒத்துழைப்பின்மையால் திட்டங்கள் மக்களை சென்றடையவில்லை:

 மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு சாதனைகளை புரிந்துள்ளது. ஆனால் அந்த சாதனைகள் தமிழக மக்களை அடைவதில் சிரமங்கள் உள்ளன. உதாரணமாக, மத்திய எரிசக்தி துறையின் உதய் திட்டத்தின் மூலம் பல்வேறு மாநிலங்கள் பயனடைந்துள்ளன. ஆனால் இத்திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசுக்கு சிரமம் உள்ளது. தமிழக அரசின் முடிவெடுக்க முடியாத சூழ்நிலையால் எய்ம்ஸ் மருத்துவமனைகள் கொண்டு வருவதை தள்ளிப்போட வேண்டியதாகிவிட்டது. இதே போல, முத்ரா வங்கி கடன் திட்டம், பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டம், ஏழை, எளிய மக்களுக்கான காப்பீடு திட்டம் ஆகியவை மாநில அரசின் ஒத்துழைப்பின்மை காரணமாக மக்களை முழுமையாக சென்றடையவில்லை. மாநில அரசின் ஒத்துழைப்பின்மையால்தான் மத்திய அரசின் பல திட்டங்களை தமிழகத்திற்கு கொண்டு வர முடியாத நிலை உள்ளது.

மீனவர் பிரச்னை பேசி தீர்க்கப்படும்:

 இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களை பிரதமர் நரேந்திர மோடி, தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றியது மட்டுமின்றி, அவர்களை விடுதலை செய்து, தமிழகத்திற்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுத்தார். தமிழக மீனவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. மீனவர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

மத்திய திட்டங்கள் கைகொடுக்கும்:

 கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மும்முனைப் போட்டியில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 19.5 சதவீத வாக்குகளை மக்கள் அளித்தனர். தற்போது தமிழக சட்டப்பேரவை தேர்தலில் 5 முனைப் போட்டி நிலவுகிறது. இதிலும் எங்களுக்கு அதிகப்படியான வாக்குகளை அளித்தால், தமிழகத்தில் ஊழலற்ற, முன்னேற்றமான ஆட்சியை நாங்கள் வழங்குவோம்.

 மத்திய அரசு கிராமப்புற மேம்பாட்டிற்காக, ஏழை, தொழிலாளர்களின் நலனுக்காக, விவசாயிகளின் உயர்வுக்காக பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. இதற்கு தமிழக மக்கள் ஆதரவளிப்பர். அப்படி அளித்தால் தமிழகத்தில் ஊழலில்லாத, முன்னேற்றத்திற்கான ஆட்சி வருவதற்கான வாய்ப்பு உள்ளது.

 பிரசாரத்தில் மோடி: பிரதமர் மோடி நிச்சயமாக பிரசாரத்திற்கு வருகிறார். தேதி முடிவு செய்யப்படவில்லை.

காவிரி பிரச்னை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு:

  காவிரி நதிநீர் பிரச்னை குறித்து மாநிலங்களிடம் பேசி கருத்தொற்றுமை அடிப்படையில் சுமூக முடிவெடுக்கப்படும். திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் காங்கிரஸ் கட்சியுடன் பல்வேறு சமயங்களில் கூட்டணி அமைத்துள்ளன. அப்போது ஏன் அவர்கள் காவிரி பிரச்னையை தீர்க்கவில்லை?. ஆனால் பாஜக மீது மட்டும் குற்றம் சுமத்த அவர்களுக்கு அருகதை இல்லை.

 நாடாளுமன்றத்தில் பிரச்னைகளை அடிப்படையாகக் கொண்டே அதிமுக, பாஜகவுக்கு ஆதரவளிக்கிறது. அதனால் அதற்காக பாஜகவுக்கும், அதிமுகவுக்கும் கூட்டணி என்று அர்த்தம் கிடையாது.

 திமுக, அதிமுகவுக்கு முன் காங்கிரஸ் கட்சியே தமிழகத்தில் வலிமையாக இருந்தது. ஆனால் காங்கிரஸை தோற்கடித்துவிட்டு திமுக, அதிமுக ஆகிய கட்சிகள் ஆட்சிக்கு வரவில்லையா? மக்கள் மாற்றம் வேண்டும் என முடிவு செய்துவிட்டால், கட்சியின் செல்வாக்கு காணாமல் போகும் என்றார் அமித்ஷா.

முன்னதாக, சட்டப்பேரவை தேர்தல் பாஜக, கூட்டணி கட்சி வேட்பாளர்களுடன் அமித்ஷா கலந்தாலோசனை நடத்தினார்.

 இதில் மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜாவடேகர், பொன்.ராதாகிருஷ்ணன், பியூஸ் கோயல், பாஜகவின் தேசிய பொதுச் செயலர் முரளிதரராவ், தமிழகத் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன், தேசிய செயலர் எச்.ராஜா, கூட்டணி கட்சி தலைவர்கள் பாரிவேந்தர் (இந்திய ஜனநாயகக் கட்சி), தேவநாதன் யாதவ் (இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம்), அனைந்திந்திய முஸ்லீம் முன்னேற்றக் கழகம், தென்னிந்திய பார்வர்டு பிளாக் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.