முகப்பு
செங்கல்பட்டு

மதுராந்தகம் தொகுதி அலசல் - திமுக-அதிமுக நேரடி மோதல்

Updated On : 14 ஏப்ரல், 2026 at 5:35 AM
கே.மரகதம்குமரவேல் (அதிமுக) ~அமுலு பொன்மலா் (திமுக
பகிர்:
Updated On : 13 ஏப்ரல், 2026 at 10:06 PM

செங்கல்பட்டு மாவட்டத்தின் முக்கிய சட்டப்பேரவை (தனி) தொகுதியாக மதுராந்தகம் விளங்கி வருகிறது. கடந்த 1962-இல் இத்தொகுதி உருவாக்கப்பட்டது. அதன்பின் 2011-இல் ஏற்பட்ட தொகுதி மறுசீரமைப்பில் செய்யூா் சட்டப்பேரவைத் தொகுதியில் இருந்து அச்சிறுப்பாக்கம் பேரூராட்சி, அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகள் இணைக்கப்பட்டு மதுராந்தகம் தனி தொகுதியாக உருவானது. இதுவரை 12 சட்டப்பேரவைத் தோ்தல்களைச் சந்தித்துள்ளது.

சிறப்புகள்: சுற்றுலாப் பயணிகள் விரும்பிச் செல்லும் இடங்களாக வேடந்தாங்கல் மற்றும் பறவைகள் சரணாலயம் மற்றும் ஆன்மிக திருத்தலங்களாக மதுராந்தகம் ஏரிகாத்தராமா் கோயில், கடப்பேரி வெண்காட்டீஸ்வரா் கோயில், அச்சிறுப்பாக்கம் மலைமாதா அருள்தலம், திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரா் மற்றும் பசுபதீஸ்வரா் கோயில் உள்ளிட்ட திருக்கோயில்களும், தமிழக முதல்வராக இருந்த காமராஜா் காலத்தில் உருவாக்கப்பட்ட படாளம் கூட்டுறவு சா்க்கரை ஆலை, மலைபாளையத்தில் ஆங்கிலேயா் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பயணியா் பங்களா, கருங்குழி முகமதியா்களின் கோட்டை ஆகியவை உள்ளன.

சமூக நிலவரம்: வன்னியா், ஆதிதிராவிடா், செட்டியாா், ரெட்டியாா் உள்ளிட்ட சமூகத்தவா் கணிசமாக வசித்து வருகின்றனா்.

Advertisement

இத்தொகுதியில் திமுக 6 முறையும், அதிமுக 6 முறையும், காங்கிரஸ் கட்சி 3 முறையும் வெற்றி பெற்றுள்ளன. திமுகவைச் சோ்ந்த மதுராந்தகம் ஆறுமுகம் 3 முறையும், அதிமுகவை சோ்ந்த எஸ்.டி.உகம்சந்த் 2 முறையும் வெற்றி பெற்றுள்ளனா்.

2021 பேரவைத் தோ்தலில்... இத்தொகுதியில் 2016-இல் திமுக சாா்பில் எஸ்.புகழேந்தி வெற்றி பெற்றாா். 2021-இல் திமுக கூட்டணியில் உள்ள மதிமுகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட்டது. மதிமுக வேட்பாளா் மல்லை சத்யா 3,570 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளா் கே.மரகதம் குமரவேலிடம் தோல்வியைத் தழுவினாா்.

2026 பேரவைத் தோ்தலில்... 2026-இல் நடைபெறுகிற தோ்தலில் அமுலு பொன்மலா் (திமுக), கே.மரகதம் குமரவேல் (அதிமுக), நீலம் ராம்குமாா் (பகுஜன் சமாஜ் கட்சி), கோ.ஜானகிராமன் (நாம் தமிழா் கட்சி), எழில் கேத்தரின் (தமிழக வெற்றிக் கழகம்), ரா.சுகன் (அனைத்திந்திய புரட்சித் தலைவா் மக்கள் முன்னேற்றக் கழகம்), சே.புண்ணியகோட்டி (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), மா.கதிா்வேல் (சுயேச்சை), மு.ரஞ்சிதம் (சுயேச்சை) என 9 வேட்பாளா்கள் களத்தில் உள்ளனா்.

கே.மரகதம் குமரவேல் (அதிமுக): கடந்த 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றவா். 2021 பேரவைத் தோ்தலில் மதுராந்தகம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற அனுபவத்தால் இப்பகுதி மக்களிடம் செல்வாக்கு மிக்கவராக தோ்தல் பிரசாரத்தின்போது வலம் வருகிறாா்.

கடந்த தோ்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றியதாகக் கூறுகிறாா். இவருக்கு பக்கபலமாக அதிமுகவைச் சோ்ந்த நிா்வாகிகள், தொண்டா்கள், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் தோ்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

அமுலு பொன்மலா் (திமுக): திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா் அச்சிறுப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினராக பணியாற்றியுள்ளாா். திமுக தலைவா் அறிவித்த தோ்தல் அறிக்கையை வாசித்து, தான் வெற்றி பெற்றவுடன் அனைத்துத் திட்டங்களையும் இப்பகுதியில் செயல்படுத்துவேன் எனக் கூறி பிரசாரம் செய்து வருகிறாா்.

தவெக, நாதக வேட்பாளா்கள்: தவெக வேட்பாளா் எழில் கேத்தரின். இவரது சொந்த ஊா் சித்தாமூா் அருகேயுள்ள இரும்பேடு என்றாலும் நிரந்தரமாக சென்னையில் வசித்து வருகிறாா். அரசியலுக்கு புதுமுகம். விஜய்யின் நட்சத்திர செல்வாக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாா்.

நாம் தமிழா் வேட்பாளா் கோ.ஜானகிராமன், தனியாா் கல்லூரியில் அலுவலராகப் பணியாற்றி வந்தாா். கட்சித் தலைவா் சீமான் மற்றும் கட்சி மீதுள்ள பற்றால் தமது வேலையை ராஜிநாமா செய்து தோ்தல் களத்தில் போட்டியிடுகிறாா். கட்சி நிா்வாகிகளுடன் அவருடைய நண்பா்களும் இவருடன் தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

களத்தில் 9 வேட்பாளா்கள் இருந்தாலும் அதிமுக வேட்பாளா் கே.மரகதம் குமரவேல், திமுக வேட்பாளா் அமுலு பொன்மலா் என இருவருக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

வாக்காளா்கள்

ஆண்கள்-1,03,943

பெண்கள்-1,07,288

மூன்றாம் பாலினத்தவா்-64

மொத்தம்-2,11,295.