சாலை விபத்தில் சிறுவன், பாதசாரி சாவு
சென்னை, திருமங்கலத்தில் தனது தாயாருடன் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சிறுவன் நிலைத்தடுமாறி விபத்தில் சிக்கினார். இதில் அச்சிறுவனும், பாதசாரியும் உயிரிழந்தனர். சிறுவனின்
சென்னை, திருமங்கலத்தில் தனது தாயாருடன் மோட்டார் சைக்கிளை அதிவேகமாக ஓட்டிச் சென்ற சிறுவன் நிலைத்தடுமாறி விபத்தில் சிக்கினார். இதில் அச்சிறுவனும், பாதசாரியும் உயிரிழந்தனர். சிறுவனின் தாயார் பலத்த காயமடைந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சிவகங்கை மாவட்டம், திருபாக்கோட்டை அருகே உள்ள தெற்கு சேலனேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் சோ. பாபு (42). இவர், பழைய திருமங்கலம் அண்ணா தெருவில் வசிக்கும் தனது சகோதரி ராஜேஸ்வரி வீட்டில் தங்கி பாத்திர பட்டறைகளில் பணிபுரிந்து வந்தார்.
பாபு புதன்கிழமை இரவு திருமங்கலம் பூங்கா சாலையோரம் நடந்து சென்றபோது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி அவர் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் சம்பவ இடத்திலேயே பாபு உயிரிழந்தார். மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த அம்பத்தூர் அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்த 16 வயது சிறுவனும், பின் இருக்கையில் அமர்ந்துச் சென்ற அவனது தாயார் வெ. மீனாவும் (40) பலத்த காயமடைந்தனர்.
இவர்கள் இருவரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து மேல்சிகிச்சைக்கு சிறுவன், ஆயிரம்விளக்கில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தான்.
இதுகுறித்து திருமங்கலம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் எம்.சுகிலா, மோட்டார் வாகனச் சட்டத்தை மீறி மோட்டார் சைக்கிளை ஓட்டிய 16 வயது சிறுவன், மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதித்த அவரது தாயார் மீனா ஆகியோர் மீது 3 சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். உயிரிழந்த சிறுவன், அந்தப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 11-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
காவல்துறை எச்சரிக்கை: சாலை விபத்துக்களைத் தடுக்கப்பதற்காக, சென்னை பெருநகர காவல்துறை, சிறார்கள் வாகனம் ஓட்ட அனுமதிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இரு வாரங்களுக்கு முன் எச்சரிக்கை விடுத்திருந்தது.
இந்நிலையில், இச்சம்பவம் நடந்துள்ளதை அடுத்து சிறுவனை வாகனம் ஓட்டுவதற்கு அனுமதித்த அவரது தாயார் மீனா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதை பொதுமக்கள் எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு சிறுவர்களை இருசக்கர வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக் கூடாது என காவல்துறை உயர் அதிகாரிகள் மீண்டும் எச்சரித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.