முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்!

கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழா (ஜூன் 24) தொடங்குவதையொட்டி சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் அவர் எழுதிய தொடர் கட்டுரை மீண்டும் தினமணி இணையதளத்தில்...

Updated On : 24 ஜூன் 2026, 9:41 am IST
கவிஞர் கண்ணதாசன் கட்டுரைத் தொடரின் முதற்படி நறுக்கு... - தினமணி கருவூலத்திலிருந்து...
பகிர்:

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் 1981 ஜனவரி 1 தேதியிட்ட இதழில் தொடங்கி, சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! என்ற தலைப்பில் தன்னுடைய திரைப் பயணம் பற்றித் தொடர் கட்டுரைகளை எழுதினார் கவிஞர் கண்ணதாசன். இன்று (ஜூன் 24 - 1927) தொடங்கும் கவிஞர் கண்ணதாசன் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, கவிஞரை நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் வகையில் தினமணி இணையதளத்தில் மீண்டும் வாரந்தோறும் இந்தத் தொடர் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன.

*

முதற்படி

Advertisement

Advertisement

தொழிலில் எது இருந்தாலும் இல்லாவிட்டாலும், தகுதியும் திறமையும் இருந்தாக வேண்டும். இன்றைய தொழில்கள் பாழ்பட்டுப் போனதற்குக் காரணம், தகுதியற்றவர்களுக்கு வாய்ப்புக் கொடுத்தே தீரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டு விட்டதுதான்.

சினிமாத் தொழிலில் மட்டுமல்ல, எல்லாத் தொழில்களிலும் நிலைமை இதுதான்.

முப்பது ஆண்டுகளுக்கு முன்பு, 'ஹரி ஓம்' என்று சினிமாவுக்கு நான் பாட்டெழுதத் தொடங்கியபோது சினிமா உலகில் கூடுமானவரை திறமையானவர்கள் மட்டுமே இருந்தார்கள்.

ஜுபிடர் பிக்சர்ஸுக்குள் காலடி எடுத்துவைத்து, மானேஜர் வெங்கடசாமியைப் பார்த்து "எனக்கொரு வாய்ப்புக் கொடுங்கள்' என்று கேட்டபோது எனக்கே அச்சமாகத்தான் இருந்தது.

திறமையுள்ளவர்களேகூட தனி 'பந்தாக்'களோடு அங்கே நடமாடிக் கொண்டிருந்தார்கள்.

மாடர்ன் தியேட்டர்ஸைப் போல கட்டுப்பாடான இடமல்ல சென்ட்ரல் ஸ்டூடியோ. ஒவ்வொருவரையும் மகாராஜாக்களாகவே திரு. சோமு வளர்த்து விட்டிருந்தார். அவர்களில் பலர் குறும்புக்காரர்கள்; ஆனாலும் திறமையாளர்கள்.

அவர்களிலே திரு. ஏ.எஸ்.ஏ. சாமியிடமும், சுந்தரராவ் நட்கர்னியிடமும் மானேஜர் என்னை அனுப்பி இருந்தால், அவர்கள் என்னை வெளியே அனுப்பி இருப்பார்கள். திறமையும் அடக்கமும் மிகுந்த திரு. கே. ராம்நாத்திடம் நான் கொண்டுபோய் விடப்பட்டதால் முதல் சந்தர்ப்பத்தைப் பெற்றேன்.

எனது இன்றைய உயர்வுக்கும் வாழ்க்கைக்கும் அந்த முதல் சந்தர்ப்பமே காரணம்.

நான் எழுதிய முதற் பாட்டு பொழுது படித்துப் பார்த்தால், மிகவும் சாதாரணமானதுதான். ஆனால் அதை ஒப்புக்கொண்டதன் மூலம் அதற்காகப் பெருமையைத் தேடித் தந்தார் ராம்நாத். அதிலே ஒரு தெம்பு ஏற்பட்டதால், அடுத்தடுத்த பாடல்களை உற்சாகமாக எழுத முடிந்தது.

இரண்டு நிலைகளில் மனிதன் முன்னுக்கு வருகிறான். ஒன்று, திறமை. இன்னொன்று, வாய்ப்பு. திறமை இருந்து வாய்ப்பு இல்லா விட்டாலும், வாய்ப்பு இருந்து திறமை இல்லாவிட்டாலும் மனிதன் பிரகாசிப்பது முயல் கொம்பே.

அந்த முதல் வாய்ப்பை யார், யாருக்கு ஏற்படுத்தித் தருகிறார்களோ, அவர்கள், அவர்களது கண்கண்ட தெய்வமாவார்கள். நான் வணங்க வேண்டிய தெய்வம் டைரக்டர் ராம்நாத்.

கோவையில் ரயில்வே ஸ்டேஷனுக்கு, எதிரில் இருந்த அவரது வீட்டுக்குத் தினசரி சென்று ஆனந்தக் கண்ணீரோடு நன்றி கூறி இருக்கிறேன். அவரோ, "நீங்கள் நன்றாகவே எழுதுகிறீர்கள், அதை நன்றாய் இருக்கிறது என்று சொன்னதைத் தவிர வேறொன்றும் செய்யவில்லையே", என்பார் அடக்கத்தோடு.

அப்பொழுதெல்லாம் உடுமலை நாராயண கவியின் கொடிதான் எங்கும் பறந்துகொண்டிருந்தது. ஒரு பாடலை எழுத ஒரு வாரம் எடுத்துக்கொள்வார் அவர். அவரது நடை, உடை, பாவனைகள் ராம்நாத்துக்குப் பிடிப்பதில்லை.

அதுபோலவே அன்றைய பெரிய நடிகைகளான பானுமதி போன்றவர்களையும் பிடிப்பதில்லை. ஆனால், திறமையுள்ள புதியவர்களுக்கு வாய்ப்புத் தருவார்.

சரியான நேரத்தில் அவர் வாய்ப்பளித்தார்; அடுத்த மாதமே மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து தந்தி வந்தது.

திறமையுள்ளவனுக்கு வாய்ப்பு என்பது சீனிப் பட்டாசு மாதிரி, ஒரு முனையில் தீப்பற்றினால் போதும், தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருக்கும்.

தொடர்ந்து பாடல் எழுதினேன். எழுதினேனே தவிர, என் மனோதர்மத்துக்கு ஏற்றதாக எதுவுமே இல்லை.

மர்மயோகி, ராணி, திகம்பரசாமியார், தேவகி, கல்யாணி, வளையாபதி, சுகம் எங்கே? -எல்லாமே மெட்டுக்கு எழுதிய பாடல்கள்.

இல்லற ஜோதி திருப்தியாய் இருந்தது; ஓடவில்லை.

மெட்டுக்கு எழுதுவது என்றால் என்னவென்று இன்றைய இளைஞருக்குத் தெரியாமல் இருக்கக் கூடும். ஏதேனும் ஒரு ராகத்தில் இசையைப் போட்டு தன்னன தானனனா' என்று தத்தகாரத்தில் பாடுவார் இசையமைப்பாளர். அதற்கு வார்த்தைகள் போட வேண்டும்.

சமீபத்தில் வெளிவந்த டைரக்டர் பாலசந்தரின் 'வறுமையின் நிறம் சிவப்பு' என்ற படத்தில் இது அப்படியே காட்டப்பட்டிருக்கிறது.

மெட்டுக்குப் பாட்டெழுதுவது என்பது 'கிடுக்கிக்குள் சிக்கிக் கொண்ட எலி' மாதிரிதான். சொல்லவரும் விஷயத்தைச் சொல்ல முடியாது. பாடலுக்கான இலக்கணம் இருக்காது. படித்துப் பார்த்தால் வசனம் மாதிரி இருக்கும். அநாவசியமான வார்த்தைகளும் நீட்டலும் இருக்கும்.

"போதுமடா சாமி" என்று வசனம் எழுதப் புகுந்தேன். எனக்கு வசனம் எழுதத் தெரியும் என்று முதலில் ஒப்புக்கொண்டவர் டி.ஆர். சுந்தரம்.

அடுத்தாற் போல் என்னைத் தேடி வந்தவர் காலம் சென்ற நண்பர் ஆர். ஆர். சந்திரன். என் இஷ்டத்திற்கு கதை எழுத என்னை அனுமதித்தார்.

வசனம் என்பது இளங்கோவனுக்கும், கருணநிதிக்கும் பிறகு, என்னால்தான் அழகு பெற்றது என்று சந்திரன் பெருமையோடு சொல்லுவார்.

நான் எழுதிய 'இல்லற ஜோதி' தமிழ்ப் படத்தை மூன்று முறை அவர் பார்த்தாராம். இப்படிப்பட்ட அதிசயமான மனிதர்கள் மட்டும்தானே அந்தப் படத்தைப் பார்த்தார்கள்: நான், ஆசைகளை எல்லாம் கொட்டி எழுதிய படமல்லவா 'இல்லற ஜோதி' வசனம்.

'நானே ராஜா' எழுதும்போது நான் ஒரு தி.மு.க. பேச்சாளன், ராமாயணத்தைக் கிண்டல் செய்து, தலைகீழாக மாற்றி எழுதுவதாக என் திட்டம், அதைப் பத்துப் பேரிடம் வெளியேயும் சொல்லிலிட்டேன்.

உடனே தயாரிப்பாளர் ஆர்.ஆர். சந்திரனுக்குத் தணிக்கை குழுவில் இருந்து ஒரு எச்சரிக்கை வந்தது. அப்போது படம் பாதி முடிந்துவிட்டது. உடனே நாங்கள் பயந்து போய்க் கதையை மாற்றினோம். கடைசியில் படம் 'பிள்ளையார் பிடிக்கக் குரங்காக' முடிந்தது.

ஆனலும் அந்தப் படத்தைப் பார்த்து விட்டு ஒருவர், என்னைத் தேடி ஓடிவந்தார். அவர்தான் டைரக்டர் பி. எஸ். ரங்கா. அவருடைய 'தெனாலி ராமன்' திரைப் படத்திற்கு என்னை ஒப்பந்தம் செய்தார்.

அது நான் தி.மு.க.வில் வெறியனாக இருந்த காலம், நடிகர் திலகம் சிவாஜி, கழகத்தை விட்டு விலகிவிட்டதால் அர்த்தமில்லாமல் நான் ஆத்திரமுற்று அவரைத் தாக்கி என் பத்திரிகையில் எழுதினேன். அந்தப் பகையால் சிவாஜியை வைத்துப் படம் தயாரிப்போர் என்னை அழைக்கவில்லை. ஆனால், மக்கள் திலகம் எம். ஜி. ஆர். அவர்கள் தன் படங்களுக்கெல்லாம் நான் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

கிருஷ்ணா பிச்சர்ஸ் அதிபர் மானகிரி லேனா அவர்கள் என்னைத் தேடி வந்தார். 'மதுரை வீரன்' படத்துக்கு நான் ஒப்பந்தம் செய்யப்பட்டேன்.

மதுரை வீரன் படத்துக்கு எழுதியபோதுதான் எனது எடை அதிகரிக்கத் தொடங்கிற்று. காரணம் லேனா போட்ட சாப்பாடு! அந்தப் பக்கம் சும்மா போனாலும் சாப்பிடாமல் விடமாட்டார். என் தாயின் கையால் சாப்பிட்ட பிறகு, கிருஷ்ணா பிக்சர்ஸில்தான் வகைவகையான சாப்பாட்டை நான் சாப்பிட்டேன்.

இன்று பாட்டெழுதப் போய் உட்கார்ந்தால், தமிழ் தெரியாதவர்கள், ஒன்றுமே தெரியாதவர்கள் எல்லாரும் பாட்டிலே திருத்தம் சொல்லுகிறார்கள், 'அந்த வரியை மாற்று, இந்த வரியை மாற்று' என்று ஆணையிடுகிறார்கள்! காட்டுப்புறத்தில் சுள்ளி பொறுக்கியவனெல்லாம் பாட்டுக்கு விளக்கம் கேட்கிறான்!

மதுரை வீரனில் லேனாவோ, யோகானந்தமோ, எம்.ஜி.ஆரோ என் எழுத்தில் ஒரு வரியைக்கூட மாற்றியதில்லை. அந்தக் கம்பெனிக்குள் எப்போதும் என்னுடைய வசனம் ஒலித்துக் கொண்டே இருந்தது.

அங்கே மோகினி என்றொரு இளம் பெண் வேலை பார்த்தார். எப்பொழுது என்னைப் பார்த்தாலும், என்னுடைய வசனத்தைப் பேச ஆரம்பித்துவிடுவார்.

பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றிய திடமான நம்பிக்கை, அந்த தணிகாசலம் செட்டி ரோலில்தான் எனக்கு ஏற்பட்டது.

- தொடரும்

(இனி ஒவ்வொரு புதன்கிழமையும் வெளிவரும்)

summary

Thirty Years in the Film Industry: Article series by Poet Kannadasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments