FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

இந்த படத்தைப் பார்த்து அண்ணாவும் கருணாநிதியும் பாராட்டினார்கள்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 4

கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி, 1980-களில் சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் அவர் எழுதிய தொடர் கட்டுரையின் நான்காம் பகுதி - மீண்டும் தினமணி இணையதளத்தில்...

Updated On : 15 ஜூலை 2026, 10:00 am IST
கண்ணதாசன் - PC: Respecting Owner
பகிர்:

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் 1981 ஜனவரி 1 தேதியிட்ட இதழில் தொடங்கி, சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! என்ற தலைப்பில் தன்னுடைய திரைப் பயணம் பற்றித் தொடர் கட்டுரைகளை எழுதினார் கவிஞர் கண்ணதாசன். ஜூன் 24, 2026 தொடங்கிய கவிஞர் கண்ணதாசன் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, கவிஞரை நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் வகையில் தினமணி இணையதளத்தில் மீண்டும் வாரந்தோறும் இந்தத் தொடர் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன - பகுதி - 4.

*

நான்காம் படி

Advertisement

Advertisement

திருச்சியில் அடைக்கலசாமி, அம்பி, ஜெயராமன் ஆகிய மூன்று நண்பர்கள் எனக்குக் கிடைத்தார்கள்.

அப்போது ஜெயராமன், திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் ஒரு காண்டீன் அதிபராக இருந்தார். அடைக்கலசாமி ஒரு மரக்கடை அதிபராக இருந்தார். அம்பி ஒரு இன்ஷூரன்ஸ் கம்பெனியின் மானேஜராக இருந்தார்.

மூன்று பேருமாகச் சேர்ந்து சுமார் 30 ஆயிரம் ரூபாய் பணமும், ஒரு புது டிராவலர் வேனும் என்னிடம் கொடுத்தார்கள்.

ஒரு புதுப்படத்தை ஆரம்பிப்பதற்கு அந்தப் பணத்தை முதற்கட்டமாகக் கொடுத்தார்கள்.

அன்றைக்கு மறுநாள் சென்னைக்கு வந்த ஜவகர்லால் நேருவுக்கு தி.மு. கழகம் கருப்புக்கொடி காட்டிற்று.

அதில் நான் கலந்துகொண்டு சிறைக்குப் போய்விட்டால், பணம் கொடுத்தவர்கள் மேலும் உதவ மாட்டார்கள் என்ற பயத்தில் நான் நேரே பெங்களூர் போய்விட்டேன். மறுநாள்தான் சென்னை திரும்பினேன்.

நான் கைதாகவில்லை என்று கருணாநிதி ஒரு கரடியைக் கிளப்பிவிட்டார். நான் அதைப் பற்றிக் கவலைப்படாமல் கதை எழுதப் பழைய உட்லண்ட்ஸில் போய் உட்கார்ந்தேன்.

சரத்சந்திர சட்டர்ஜியின் கதை ஒன்று எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதைத் தழுவி ஒரு கதையை எழுதினேன். மூன்று மணி நேரத்திற்குள் கதையை முடித்துவிட்டேன்.

அந்தக் கதையை எழுதும்போதும் வசனத்தை எழுதும்போதும், ரத்தத்தில் இருந்த உற்சாகத்தைக் குறிப்பிட வார்த்தைகளே கிடையாது.

கதையை எழுதும்போதே எனக்குப் பண்டரிபாயின் நினைவுதான் வந்தது.

சரசு -

ஆதரவற்ற அந்த அநாதையின் உருவம் என் மனதில் தெளிவாக விழுந்துவிட்டது. அழகு, பண்பு, ஒழுக்கம், அறிவு அனைத்தும் இருந்தும், பொருளாதாரக் குறைபாட்டால் ஒரு வளர்ப்பு மகளாகவும், வேலைக்காரியாகவும் ஆகிவிட்ட சரசு! அவளது பாத்திரப் படைப்பு அல்லும் பகலும் என் மனதிலேயே நின்றது.

என் பாதையில் குறுக்கிடுவோர் யாரும் இல்லாததால், பண்டரிபாயை உடனே ஒப்பந்தம் செய்துவிட்டேன். படத்தைப் பாட்டுகளால் நிரப்புவது என்று முடிவு செய்தேன்.

எடுத்த எடுப்பிலேயே பாடல்களுக்கான இடங்களையும் குறித்துவிட்டேன்.

கதாநாயகன் பாத்திரத்திற்கு நாகேஸ்வர ராவ் பொருத்தம் என்று கருதி, அவரிடம் போய்க் கேட்டேன். அவர் என்னிடம் பழகிய முறையே நாகரிகமாக இல்லை.

எப்போதுமே என்.டி. ராமா ராவைப் போல் நாகேஸ்வர ராவ் நட்புறவோடு பழகுவதில்லை. எனக்கும் ராமா ராவிடமிருந்த மதிப்பு நாகேஸ்வர ராவிடமில்லை. ஆயினும் நான் எழுதி இருந்த பாத்திரத்திற்கு அவர் பொருத்தம்.

அவர் ஒப்புக் கொள்ளாததால் என் அபிப்பிராயத்தைத் தலைகீழாக மாற்றிச் கொண்டேன். நன்றாகப் பாடக் கூடியவராகப் போடுவோம் என்று முடிவு கட்டினேன்.

என் கண்ணுக்கு முதலில் தெரிந்த மனிதர் டி. ஆர். மகாலிங்கம்.

நானும் அம்பியும் அவரது 'சுகுமார பவன'த்துக்குப் போனபோது, வீடு தூசு படிந்திருந்தது. உலசுத்திலுள்ள அபூர்வமான பொருட்களையெல்லாம் வாங்கிவைக்கும் மகாலிங்கத்தின் வீடா அது!

நான் மிகுந்த கலக்கமுற்று, அவர் கேட்ட தொகையையே தருவதாக ஒப்புக்கொண்டுவிட்டேன்.

படத்தின் வெற்றியில் எனக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.

படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது மகாலிங்கத்துக்குக் கடன்காரர் தொல்லை அதிகமாக இருந்துகொண்டிருந்தது. அதனால் நான்தான் அவரை 'இன்சால்வென்ஸி' கொடுக்கச் செய்தேன்.

[ஒரு வருஷத்திலேயே இன்சால்வென்ஸி ரத்தாகி, அவர் பழைய அந்தஸ்துக்குத் திரும்பிவிட்டார்]

'மாலையிட்ட மங்கை'யில் என் ஆசைகளை எல்லாம் கொட்டித் தீர்த்தேன். பதினேழு பாடல்கள் எழுதினேன்.

சியாமளா ஸ்டூடியோவை ஒரு மாதத்திற்குக் குத்தகைக்கு எடுத்தோம். பரணியில் ஒன்பது நாளும், சியாமளாவில் முப்பது நாளுமாக, முப்பத்தொன்பது நாளில் படம் முடிந்துவிட்டது.

மகாலிங்கத்தோடு பழகிய அந்த இனிய காலங்களை மறக்க முடியாது. மகாலிங்கத்துக்கு நகைச்சுவை உணர்ச்சி அதிகம். கவலைகளை மறந்து பேசிக்கொண்டிருப்பார். பாட ஆரம்பித்தால் பொழுது போவது தெரியாது. ராஜா மாதிரி சம்பாதித்துச் செலவு செய்தவர்.

படம் நல்ல வெற்றியைப் பெற்றது. அதற்கு முன்னால் விஸ்வநாதன் - ராமமூர்த்தி, பல படங்களுக்கு இசையமைத்திருந்தாலும் 'மாலையிட்ட மங்கை'தான் எனக்கும் அவர்களுக்கும் திருப்புமுனை.

அந்தப் படத்தைக் காலணாகூட லாபமில்லாமல் ஏ.எல்.எஸ்.ஸிடம் கொடுத்து விட்டோம். அவருக்குப் பெருத்த லாபம்.

எங்கள் மூலம் ஏ.எல்.எஸ். புரொடக்.ஷனுக்கு லாபம் இருந்ததே தவிர அவரால் நாங்கள் பலனடையவில்லை.

அப்பொழுதே தொழில் கருத்தோடு அதை ஒழுங்காகச் செய்திருந்தால் இந்நேரம் 'கண்ணதாசன் பிலிம்ஸ்' ஒரு பெரிய நிறுவனமாக இருந்திருக்கும்.

வீனஸ் பிக்சர்ஸும் கண்ணதாசன் பிலிம்ஸும் ஒரே நேரத்தில் துவக்கப்பட்டவை. ஆனால் வீனஸ் நிலைத்தது போல் கண்ணதாசன் பிலிம்ஸ் நிற்கவில்லை.

'மாலையிட்ட மங்கை' படம் வெளியிடப்பட்டபோது "மகாலிங்கத்தைப் போட்டு எடுத்திருக்கீறீர்களே யார் படம் பார்ப்பார்கள்?" என்று பல பேர் கேட்டார்கள். அதற்காகவே முன்கூட்டியே நான் ஒரு வேலை செய்திருந்தேன்.

"எங்கள் திராவிடப் பொன்னாடே" என்கிற பாட்டை மகாலிங்கத்தைப் பாட வைத்து தி.மு.க. தோழர்களுக்குக் கவர்ச்சியூட்டியிருந்தேன். நான் நினைத்தது பலித்தது. படமும் நன்றாக இருந்ததால் இயற்கையாகவே தொண்ணூற்றி ஒரு நாள் ஓடிற்று.

"இன்னும் ஒன்பது நாள் ஓட்டினால் நூறு நாள் ஆகுமே" என்றார்கள். நான் மறுத்துவிட்டேன்.

"படம் தன்னுடைய சக்தியில் ஓட வேண்டுமே தவிர நாம் ஓட்டக் கூடாது" என்று கூறிவிட்டேன்.

படத்தில் எங்களுக்குப் பெயர் வந்தது. மகாலிங்கத்துக்கு வாழ்வு வந்தது. அப்படிப்பட்ட படங்களைத் தயாரிப்போர் அதிகமாயினர்.

பரணி ஸ்டூடியோவில் அறிஞர் அண்ணா அவர்கள் படத்தைப் பார்த்து மனம் குளிரப் பாராட்டினார். "வங்காளி முத்திரை நன்றாகத் தெரிகிறது" என்றார்.

பாரகன் தியேட்டரில் வந்து படம் பார்த்த கருணாநிதியும் காசிலிங்கமும் பாராட்டினார்கள்.

சின்னப்பா தேவர் கட்டித் தழுவிக் கொண்டார்.

அதைத் தொடர்ந்து தமது 'ஒரே வழி' படத்திற்குப் பாடல் எழுத திரு. வாசு மேனன் என்னை அழைத்தார். அங்கு சென்றிருந்தபோதுதான் டைரக்டர் சங்கரைச் சந்தித்தேன்.

அவருக்கு முதற் படம் 'ஒரே வழி' தான். அவரைப் பார்த்தவுடன் எனக்கென்னவோ அவரையே டைரக்டராகப் போட்டு அடுத்த படம் எடுக்க வேண்டும் போல் தோன்றிற்று.

அப்போது 'சிவகங்கை சரித்திரக் கும்மி', 'மருதிருவர் வரலாறு', 'ராமநாதபுரம் மானுவல்' ஆகியவற்றையெல்லாம் படித்து 'சிவகங்கைச் சீமை'யைப் பற்றி ஆராய்ச்சி செய்துகொண்டிருந்தேன். மருது பாண்டியர் வாழ்ந்த ஊர்களுக்கெல்லாம் போய் வந்தேன்.

பெரும்பாலும் சரித்திரப் படங்களுக்கு எழுதுவதிலேயே எனக்கு ஆசை.

சங்கரை ஒப்பந்தம் செய்துவிட்டேன்.

அப்போது குற்றாலத்துக்குப் போயிருந்த அம்பி, அங்கே வி.டி.எல். சுப்பையா செட்டியாரைச் சந்தித்து வியாபாரம் பேசிக்கொண்டு வந்துவிட்டார்.

'சிவகங்கைச் சீமை' எடுக்கப்பட்டபோதுதான் எனக்கு 'டென்ஷன்' அதிகமாக இருந்தது. இத்தனைக்கும் பணக்கஷ்டமோ கடனோ கிடையாது. 'கட்டபொம்மனும் சிவகங்கைச் சீமையும் ஒரே கதை' என்று புரளியைக் கிளப்பிவிட்டார்கள். அவ்வளவுதான்.

அண்ணா, ம.பொ.சி., சிவாஜி எல்லாரும் வந்திருந்துதான் படத்தை ஆரம்பித்துவைத்தார்கள். அதே சிவாஜியும் ம.பொ.சி.யும்தான் பின்னால் விரோதிகளானார்கள்.

நான் பொறுப்போடு கதை எழுதியிருந்தேன். சங்கர் புது உற்சாகத்தோடு டைரக்ட் செய்தார்.

அப்போது படத்திற்கு சிவகங்கை ராஜாவிடமிருந்து எதிர்ப்பு வந்தது. காரணம் படத்தில் வில்லனாக வரும் உடையணத் தேவரின் வம்சாவளியினர்தான் இன்றைய சிவகங்கை ராஜபரம்பரை.

- தொடரும்

(ஒவ்வொரு புதன்கிழமையும் வெளிவரும்)

summary

Anna and Karunanidhi watched this film and praised: series of articles by poet Kannadasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments