மற்ற நடிகர்களுக்கு இல்லாத திறமை எம்.ஜி.ஆருக்கு இருந்தது! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 3
கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி, 1980-களில் சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் அவர் எழுதிய தொடர் கட்டுரையின் மூன்றாவது பகுதி - மீண்டும் தினமணி இணையதளத்தில்...
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் 1981 ஜனவரி 1 தேதியிட்ட இதழில் தொடங்கி, சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! என்ற தலைப்பில் தன்னுடைய திரைப் பயணம் பற்றித் தொடர் கட்டுரைகளை எழுதினார் கவிஞர் கண்ணதாசன். ஜூன் 24, 2026 தொடங்கிய கவிஞர் கண்ணதாசன் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, கவிஞரை நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் வகையில் தினமணி இணையதளத்தில் மீண்டும் வாரந்தோறும் இந்தத் தொடர் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன - பகுதி - 3.
*
மூன்றாம் படி
Advertisement
Advertisement
ஒரு படத்தை எப்படிப் பொறுப்புணர்ச்சியோடு எடுக்க வேண்டும் என்பதற்கு உதாரண புருஷன் எம்.ஜி.ஆர். 'நாடோடி மன்னன்' படத்தை அவர் எடுக்கும்போது இராப்பகலாக அதைப் பற்றியே சிந்தித்தார். அவர் எவ்வளவு சிந்தித்திருப்பார் என்பது எனக்கும் ரவீந்தருக்கும்தான் தெரியும்.
அந்தப் படத்திற்கு நாங்கள் இருவர் எழுதி இருந்தோம். இருவரும் தனித் தனியாக இரண்டாயிரம் பக்கங்கள் எழுதியிருப்போம். ஏழாம் தேதி சில காட்சியமைப்புகளைச் சொல்லி இருப்பார். பதினைந்தாம் தேதி அவற்றை நாங்கள் எழுதிக் கொண்டுவரும்போது காட்சிகளை வேறுவிதமாக மாற்றியமைப்பார்.
சிந்தனை அதிலேயே லயித்தால்தானே புதிய புதிய அமைப்புகள் தோன்ற முடியும்?
சிறிய செட்டுகளைப் போட்டு அந்த 'மினியேச்சரை' பெரிய காட்சிகளாகக் காட்டிய சாமர்த்தியம் எம்.ஜி. ஆருடையது. அவர் ஒரு நல்ல டைரக்டராகவும் அதில் திகழ்ந்தார்.
அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர்., எம்.ஜி. சக்ரபாணி, பி.வி. கிருஷ்ணய்யர் ஆகியோருடன் நானும் சேர்ந்து ஸ்வஸ்திக் பிலிம்ஸ் என்ற ஒரு கம்பெனியை ஆரம்பித்தோம். 'பவானி' என்றொரு கதையை நான் எழுதினேன். பலவிதக் காரணங்களால் படம் பாதியிலே நின்று விட்டதென்றாலும், அந்தக் கதையைத் தான் எடுத்துக்கொண்டு, எனக்குரிய பாகத்தை ஒழுங்காகப் பிரித்துக்கொடுத்த எம்.ஜி.ஆரை என்னால் மறக்க முடியவில்லை. 'பவானி' படத்தின் நஷ்டங்கள் முழுவதையும் எம்.ஜி.ஆரே ஏற்றுக் கொண்டார்.
'நாடோடி மன்னன்' மகத்தான வெற்றியடைந்தது. மற்ற நடிகர்களுக்கு இல்லாத திறமையெல்லாம் எம்.ஜி.ஆருக்கு இருப்பதை அந்தப் படம் நிரூபித்தது.
'நாடோடி மன்ன'னுக்குப் பிறகு எம்.ஜி.ஆர். நடித்த 'ராஜா தேசிங்கு' படத்திற்கும் மற்றும் இரண்டொரு படங்களுக்கும் நான் எழுதினேன்.
'ராஜா தேசிங்கு' கதையை எழுத முதலில் நான் ஒப்புக் கொள்ளவில்லை. காரணம், கிருஷ்ணா பிக்சர்ஸ் 'லேனா'வுக்கும் எனக்கும் எழுந்த கருத்து வேறுபாடு. ஆனால் கிருஷ்ணா பிக்சர்சில் நெருங்கிய உறவு கொண்டிருந்த கலைவாணர் என்.எஸ்.கே., நான்தான் எழுதுவதாக நினைத்துக் கொண்டிருந்தார்.
முதல்நாள் படப்பிடிப்பு. கலைவாணர், மதுரம், எஸ்.எஸ். ராஜேந்திரன் சம்பந்தப்பட்ட ஒரு காட்சி. நெப்டியூன் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு.
படப்பிடிப்புக்கு வந்த என்.எஸ்.கே. காட் சியைப் படிக்கச் சொல்லிக் கேட்டார். படிக்கப் படிக்க அவரது முகம் மாறிற்று. "சீ! என்ன இந்தக் கண்ணதாசன், வர வர மோசமாக எழுதுகிறான்" என்றார். உடனே லேனா செட்டியார், ''அண்ணே, அது கண்ணதாசன் எழுதவில்லை. என்னிடம் பத்தொன்பது கார்கள் இருக்கின்றன. அனைத்தையும் அனுப்பித் தேடி விட்டேன். அவன் கிடைக்கவில்லை. இது வேறொருவர் எழுதியது. அவர் ரொம்ப நல்ல எழுத்தாளர். காலையில் எட்டு மணிக்கு வருகிறார். பத்து மணிவரை எழுதுகிறார்" என்றார்.
"அப்படியா! நேரத்துக்கு எழுதுகிறவன்தான் உங்களுக்கு வேணுமா? அப்படி யென்றால் யோகானந்தம் டைரக்ட் செய்ய வேண்டாம். என்னிடம் இருக்கும் முத்துப் பிள்ளை ஆறு மணிக்கெல்லாம் வந்து விடுவான். அவன்தான் டைரக்டர்" என்றார்.
பிறகு கலைவாணரும், லேனாவும் காரைப் போட்டுக் கொண்டு, என்னை எனது 'தென்றல்' அலுவலகத்தில் வந்து பிடித்தார்கள்.
கலைவாணர் என்னைச் சமாதானப்படுத்தி அழைத்துக் கொண்டு போனார்.
'ராஜா தேசிங்கு' வரலாறு பற்றி அறுபத்தி நான்கு பக்கங்கள் கொண்ட ஒரு புத்தகம் என் கைக்குக் கிடைத்தது. அத்தோடு தோழர் ஏ.கே. வேலனும் ஒரு கதை எழுதிக் கொடுத்திருந்தார். இரண்டையும் வைத்துக் கொண்டு,'ராஜா தேசிங்கு'க்குப் பகையாக வந்த தாவுத்கான் என்பவன், ராஜா தேசிங்கின் ஒன்றுவிட்ட சகோதரனே என்றும், ராஜா தேசிங்கின் தந்தைக்கு முஸ்லிம் மனைவிக்குப் பிறந்தவன் என்றும் நான் கதை எழுதிவிட்டேன்.
பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்கள் அப்படித்தான் எழுதியிருக்கிறார்கள். ஆயினும் படம் வெளியானபோது, அது முஸ்லிம்களிடையே பெருத்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது. மலேசியாவில் அந்தப் படம் தடை செய்யப்பட்டது.
படத்தில் தாவுத்கான் வேஷத்தையும் எம்.ஜி.ஆரே ஏற்று நடித்திருந்தார்.
கதையை எழுதும்போது இப்படி ஒரு சிக்கல் ஏற்படும் என்று அவருக்கோ எனக்கோ தெரியாது. தெரிந்திருந்தால் கதையை மாற்றி இருப்போம்.
நம்முடைய தமிழ்ப் படங்களில் மற்ற மதத்தவர்களை யோக்கியர்களாகவும், ஹிந்துக்களை அயோக்கியர்களாகவும், சித்தரிப்பதுதானே நமது பலவீனமும், பண்பாடும்!
கதை கோட்டை போனதன் காரணமாக. படம் வெற்றி பெறவில்லை. அதனால் நூற்றுக்கணக்கான பேர்களுக்குச் சோறு போட்டுக் கொண்டிருந்த கிருஷ்ணா பிக்சர்ஸ் கவிழ்ந்து விட்டது. அது கவிழ்ந்ததிலே பல பேருக்குப் பெருத்த நஷ்டம்.
என்னைப் பொறுத்தவரை நான் ஓய்வுக்காகப் போகும் ஊட்டி மலை அதுதான்.
இந்த நேரத்தில்தான் சாண்டோ திரு. எம். எம். ஏ. சின்னப்பா தேவர் தனது முதற் படமான 'தாய்க்குப் பின் தார'த்திற்கு நான் எழுத வேண்டும் என்று தேடி வந்தார். அவரோடு நான் ஏற்கனவே கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் பழகி இருக்கிறேன்.
சிக்கனமாகப் படம் பிடிக்க வேண்டிய சூழ்நிலையில் அவர் இருந்தாலும் எனக்கு நல்லளவே கொடுத்தார். ஆயினும் நிம்மதியற்ற சூழ்நிலையில் ஏற்றுக் கொண்ட கடமையை நிறைவேற்ற முடியாமல் கிருஷ்ணா பிக்சர்சில் எனக்கு உதவி எழுத்தாளராக இருந்த திரு. சா. அய்யாப் பிள்ளையிடம் பொறுப்பை ஒப்படைத்தேன்.
திரு. சா. அய்யாப் பிள்ளை ஒரு நல்ல எழுத்தாளர். காட்சிகளை அமைப்பதிலும் நகைச்சுவை எழுதுவதிலும் வல்லவர். ஏனோ அவரது சபலம் வெல்லவில்லை. அவரது திருமணத்தைக்கூட கோவில்பட்டி சென்று நானேதான் நடத்திவிட்டு வந்தேன்.
தனக்குக் கொடுத்த பணியை ஒழுங்காக அவர் செய்து முடித்தார். அந்தப் படத்தில் எட்டே சீன்கள்தான் நான் எழுதியிருந்தேன். என்னைக் காணும் போதெல்லாம் அந்த எட்டுக் காட்சிகளின் வசனத்தையும் என்னிடம் ஒப்புவிப்பார்.
வசனம் எழுதுவது ஒரு நல்ல வேலைதான், ஆனால் கடுமையான வேலை. என்னைப் பொறுத்தவரை அது நன்றாக வரும்வரை நானும் அதை விடமாட்டேன்.
வசனம் எழுதுவதில் என்னால் ஏற்படும் கால தாமதத்தைக் கருதி, சிலர் என்னை நியமித்ததில்லை. நானும் கூடுமானவரை பாட்டு எழுதினால் போதும் என்று ஒதுங்கத் தலைப்பட்டேன்.
இந்தச் சூழ்நிலையில் 1957 பொதுத்தேர்தல் வந்தது. நான் திருக்கோஷ்டியூர் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டேன். தோற்றேன். என்னுடன் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கூத்தகுடி சண்முகம் தான் இன்றுவரை போட்டியிடுகிறார்.
தேர்தலில் சுமார் ஐயாயிரம் ரூபாய் கடன்காரனானேன். அப்போது வருமானமும் குறைவாக இருந்தது. சொந்தப் படம் தயாரித்தால் சம்பாதிக்கலாம் என்ற ஆசை வந்தது.
வேணுகானா பிலிம்ஸ் சிங்காரம் செட்டியார், தான் பணம் தருவதாகவும், எம்.ஜி.ஆரை வைத்து ஒரு படம் ஆரம்பிக்கும்படியும் சொன்னார்.
என் மனதில் வெகு நாளாக ஊறிக் கிடந்த கதை 'ஊமையன் கோட்டை'. அது ஒரு ஹிந்திக் கதை எழுப்பிய சிந்தனையில் உருவானது.
ஊமைத்துரை எழுப்பிய பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையைப் பின்னணியாகச் கொண்டு அந்தக் கதையை எழுதினேன்.
நான் எழுதுகிறேன். எம்.ஜி.ஆர். நடிக்கிறார் என்ற உடனே படம் ஆரம்பித்த அன்றே விலை போயிற்று. ஆயினும் பலப் பல காரணங்களால் படம் இரண்டாயிரம் அடியோடு நின்றுவிட்டது.
மனக் கலக்கமுற்ற நான் ஒன்றும் புரியாமல் காரை எடுத்துக் கொண்டு திருச்சிக்குப் போனேன்.
- தொடரும்.
(ஒவ்வொரு புதன்கிழமையும் வெளிவரும்)
M.G.R. possessed a talent that other actors did not have: series of articles by poet Kannadasan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.