முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

கருணாநிதியுடன் பகைமைக்குக் காரணம் என்ன? கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 2

கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி, 1980-களில் சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் அவர் எழுதிய தொடர் கட்டுரையின் இரண்டாவது பகுதி - மீண்டும் தினமணி இணையதளத்தில்...

Updated On : 1 ஜூலை 2026, 10:00 am IST
கவிஞர் கண்ணதாசன் எழுதிய கட்டுரைத் தொடரின் இரண்டாம் படி நறுக்கு... - தினமணி
பகிர்:

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் 1981 ஜனவரி 1 தேதியிட்ட இதழில் தொடங்கி, சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! என்ற தலைப்பில் தன்னுடைய திரைப் பயணம் பற்றித் தொடர் கட்டுரைகளை எழுதினார் கவிஞர் கண்ணதாசன். ஜூன் 24, 2026 தொடங்கிய கவிஞர் கண்ணதாசன் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, கவிஞரை நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் வகையில் தினமணி இணையதளத்தில் மீண்டும் வாரந்தோறும் இந்தத் தொடர் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன - பகுதி - 2.

*

இரண்டாம் படி

Advertisement

Advertisement

உதவி செய்பவர்கள் ஒரு ஏணியைத்தான் தூக்கி வைக்க முடியும். ஏறுகின்ற உயரம் முழுதும் தோள் கொடுக்க முடியாது.

அந்த ஏணியை ஒருவர் கொடுத்து விட்டார். நானும் முன்னேற ஆரம்பித்தேன். ஆனால் இந்த உலகம் அவ்வளவு சுலபமாக விட்டு விடுமா? அதுவும் சினிமா உலகம் சாதாரணமா?

நானும் கருணாநிதியும் சினிமாவின் மூலம் நண்பர்களானவர்கள் தான்; அரசியல் தொடர்பு பின்னால் வந்தது. நாங்கள் பழகியது மாதிரி யாரும் பழகி இருக்கவும் மாட்டார்கள்; எங்களுக்குள் பகை வந்த மாதிரி யாருக்கும் வந்திருக்காது.

அவரும் பல கட்டங்களில் சினிமாக்காரராகவே நடந்து கொண்டார். முன்பு "இல்லற ஜோதி' படத்திற்கு எழுதும்போதே அவர் அந்த உருவத்தைத்தான் காட்டினார்.

டால்மியாபுரம் போராட்டத்தில் பிடிபட்ட மறுநாளே, அவர் ஆறு மாதம் தண்டிக்கப்பட்டு ஜெயிலுக்குப் போய்விட்டார். நான் கலவர வழக்கில் கோர்ட்டுக்கு அலைந்து கொண்டிருந்தேன். அப்போதுதான் 'இல்லற ஜோதி' சந்தர்ப்பம் கிடைத்தது. எழுதிய வசனங்களை ரகசியமாக சிறைச் சாலைக்குள் அனுப்பி வைத்தேன். அந்த பைலை பார்க்காமலேயே திருப்பி அனுப்பி விட்டார்.

அதுதான் எங்கள் பகைமையின் ஆரம்பம்போல் இன்று தோன்றுகிறது.

பழகிய மரியாதைக்காகத்தானே அவருடைய பார்வைக்கு அனுப்பினேன்? 'நன்றாய் இருக்கிறது; இல்லை' என்றாவது குறிப்பாவது எழுதியிருக்கலாம் அல்லவா?

பத்திரிகைத் துறையிலும் எங்கள் போட்டி வளர ஆரம்பித்தது. எம்.ஜி.ஆருக்கும் அவருக்கும் மனவேறுபாடு இருந்ததால் எம்.ஜி.ஆர். எனக்கு வெகுவாக ஊக்கம் கொடுத்தார். சொல்லப் போனால் எனக்கு அதிகமான தொகை கிடைப்பதற்குக்கூட ஏற்பாடு செய்தார். 'மதுரை வீரனை'ப் போட்டுப் பார்த்தபோதெல்லாம் மனம் திறந்து பாராட்டினார்.

'மன்னாதி மன்ன'னுக்கு நான் எழுதிய காலம், பொன்னான காலம். அதைத் தயாரித்த திரு. எம். நடேசன், படங்களுக்கு துணிமணி தைப்பவராக இருந்து முன்னேறியவர். போதுமான அளவு திரைப்பட அனுபவம் உள்ளவர். என்னை 'டேய்' என்று அழைப்பவர்களிலே அவரும் ஒருவர். நானும் "டேய் நடேசா" என்று தான் கூப்பிடுவேன்.

'மன்னாதி மன்னன்' கதையையே நான் சொல்லித்தான் அவர் தேர்ந்தெடுத்தார்.

'மதுரை வீரன்' அபார வெற்றியடைந்ததும், தனது 'நாடோடி மன்னன்' கதையையும் என்னிடம் ஒப்படைத்தார் எம்.ஜி.ஆர்.

இந்தக் காலங்களில் வசனம் எழுத என்னைப் பணித்தவர்கள் பெரும்பாலும் பாட்டெழுத என்னை அனுமதித்ததில்லை.

முதன் முதலில் பாட்டெழுதும் பொறுப்பையும் சேர்த்துக் கொடுத்தவர் திரு. எம். நடேசன்.

அடுத்தாற்போல் கதை, வசனம், பாடல் மூன்றையும், 'மகாதேவி' படத்திற்காக ஒப்படைத்தவர் திரு. சுந்தரராவ் நட்கர்னி, 'மகாதேவி' மூலக்கதை மராத்திய நாடக ஆசிரியர் திரு. கணேஷ்ராம் காட்கரி எழுதிய 'புண்ணியப் பிரபாவம்'. அதை முழுக்க எனக்கு மொழிபெயர்த்துக் கொடுத்தவர் திரு. கா.ஸ்ரீ.ஸ்ரீ.

அடடா! மராத்தியிலும், வங்காளியிலும் கதாசிரியர்கள் எவ்வளவு பக்குவமாகப் பாத்திரங்களைப் படைக்கிறார்கள்! "புண்ணியப் பிரபாவம்" கதையின் பாத்திரப் படைப்பு அற்புதமானது.

ஒரு பெண்ணை மூன்று பேர் காதலிக்கிறார்கள். அடைந்தவன் சாதுவாகி விடுகிறான்: அடையாதவர்களில் ஒருவன் வில்லனாகி விடுகிறான்; ஒருவன் சந்நியாசியாகிவிடுகிறான்.

நகைச்சுவையிலும் அப்படியே மூன்று பாத்திரங்கள். கணவனைச் சந்தேகிக்கும் மனைவி; மனைவியைச் சந்தேகிக்கும் கணவன்; பரஸ்பர சந்தேகத்தில் ஒரு குடும்பம்.

கொடுமையைப் பற்றி ஒரு வசனம்.

"கொடுமையைக் கண்டு யார்தான் பயப்பட மாட்டார்கள்! உச்சி வெயிலின் கொடுமை தாங்காமல், மனிதனின் நிழல்கூட அவன் காலடிக்குள் ஒண்டிக்கொள்கிறது!"

இது காளிதாசன் உவமையைவிட அற்புதமாக இல்லையா!

வெயிலுக்கு அஞ்சிய பாம்பையும், தவளையையும் காளிதாசனில் படித்தபோது திகைத்த நான், 'புண்ணியப் பிரவா'கத்தில் அதிகம் திகைத்தேன்.

மூலக்கதையின் ஒரு பகுதியை எம்.ஜி. ஆர். ஒப்புக் கொள்ளவில்லை.

"வசுந்தரா (மகாதேவி) நாளை நீ எனக்கு இணங்க வேண்டும். இல்லையேல் உன் குழந்தையைக் கொன்று விடுவேன்" என்று சொல்லி விட்டுச் செல்கிறான், வில்லன்.

அதை அறிந்த வில்லன் மனைவி, தங்களின் குழந்தையையே கொண்டு வந்து வைத்துவிடுகிறாள். கோஷா போட்டிருந்த அவளை தன் தோழி என்று நினைத்துக் கொண்டு, வசுந்தரா என்ற மகாதேவி, "அடியே! சுபத்திரையின் மகன் போருக்குச் சென்ற கதையைப் பாடு" என்கிறாள்.

அவள் பாட ஆரம்பிக்கிறாள். "துரோணர் எங்கே?" என்று என்று பாடும்போது, எதிரி வந்து விடுகிறான். பாட்டு நிற்கிறது.

குழந்தை கொல்லப்படுகிறது.

திரும்பவும் "பாடு, பாடு" என்று கதறுகிறாள், மகாதேவி.

"அபிமன்யு போர்க்களத்தில் சாய்ந்து விட்டான்" என்று பாட ஆரம்பிக்கிறாள் தோழி.

துரோணர் வருகைக்கும் அபிமன்யு மரணத்திற்கும் இடைப்பட்ட கதை, சிறைச்சாலையில் நடந்து விட்டதே!

சினிமாவுக்கு எழுதியது போல் எழுதியிருந்தார் காட்கரி.

அவரது நாடகம் பனிரண்டே காட்சிகளைக் கொண்டது. அப்படிப்பட்ட ஒரு நாடகத்தை ஷேக்ஸ்பியரும் எழுதியதில்லை; பெர்னாட்ஷாவும் எழுதியதில்லை.

அதைப் படித்த பிறகு தமிழ் நாடக, சினிமா ஆசிரியர்களிடம் எனக்கிருந்த மரியாதையே போய்விட்டது.

ஏற்கனவே கல்கத்தாவில் வாழ்ந்த நான், வங்காளிக் கதைகளில் உயிரையே வைத்திருந்தேன்.

மராத்திய ஆசிரியர் காட்கரி மிச்சமிருந்த உயிரையும் எடுத்துக் கொண்டுவிட்டார்.

ஒப்பிடும்போது இளங்கோவன் அதே தரத்தில் நிற்கிறார்.

கருணாநிதி ஒரு 'அபிமன்யு'வைத் தவிர மற்ற படங்களில் வெறும் அலட்டல் வேலைகளையே மிகவும் அதிகமாகச் செய்திருக்கிறார்.

'மனோன்மணி'க்கு எழுதிய டி.வி. சாரி மனதில் நிற்கும் அளவுக்கு கருணாநிதி நிற்கவில்லை.

'மகாதேவி'க்குப் பிறகு வங்காளி, மராத்திய ஆசிரியர்கள் தரத்திலேயே இருக்க நான் ஆசைப்பட்டேன்.

'மகாதேவி'யில் எம். ஜி. ஆரோடு சண்டை போட்டு 'அபிமன்யு' காட்சியைத் திணித்து விட்டேன்.

டைரக்டர் சுந்தரராவ் நட்கர்னி அந்த நேரத்தில் மிகவும் சாந்த சொரூபியாகி விட்டார். என் எழுத்துக்களில் அவர் குறுக்கிடவே இல்லை.

ஒரு எழுத்தாளனால் சகிக்க முடியாதது பிறரது குறுக்கீடுதான்.

பி.எஸ். ரங்கா, ஆர்.ஆர். சந்திரன், யோகானந்தம், எம். நடேசன், சுந்தரராவ் நட்கர்னி இவர்களுக்கெல்லாம் என் வாக்கே தெய்வவாக்காகப் பட்டது.

நான் எழுதிக் கிழித்துப் போடுகிற காகிதத்தைக்கூட வாங்கி நட்கர்னி பத்திரமாகப் பாதுகாப்பார்.

அந்தச் சினிமா உலகத்தையும் இன்றைய உலகத்தையும் ஒப்பிட்டுப் பார்க்கும் போது 'இவ்வளவு காலம் ஏன் வாழ்ந்தோம்?' என்றே எனக்குத் தோன்றுகிறது.

முன்பு இருந்தவர்கள் அனைவரும் பக்குவப்பட்டவர்கள். பல வருடங்கள் கடுமையாக உழைத்த பிறகே டைரக்டர்களானவர்கள். அன்றைய இசையமைப்பாளர்கள் எல்லாம் சகல ராகங்களிலும் சதுரங்கம் விளையாடக் கூடியவர்கள்.

விசுவநாதன், மகாதேவன், டி. எம். சவுந்தரராஜன், சுசீலா ஆகியவரைப் போல் முப்பது ஆண்டுகள் கொடி கட்டி ஆண்டவர்கள் மிகவும் குறைவு. அவர்களே புதியவர்களுக்கு வழிகாட்டிகள்.

கசப்பு, வெறுப்பு இன்றியே கவனிக்கிறேன். இன்றைய அமைச்சூர் அரங்கத்தில் என்னால் நடமாடவே முடியவில்லை.

- தொடரும்

(ஒவ்வொரு புதன்கிழமையும் வெளிவரும்)

summary

What was the reason for enmity with Karunanidhi? A series of articles by poet Kannadasan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments