இந்தப் படத்தில் அழுததுபோல் வேறெதிலும் நான் அழுததில்லை! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 6
கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி, 1980-களில் சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் அவர் எழுதிய தொடர் கட்டுரையின் ஆறாம் பகுதி - மீண்டும் தினமணி இணையதளத்தில்...
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் 1981 ஜனவரி 1 தேதியிட்ட இதழில் தொடங்கி, சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! என்ற தலைப்பில் தன்னுடைய திரைப் பயணம் பற்றித் தொடர் கட்டுரைகளை எழுதினார் கவிஞர் கண்ணதாசன். ஜூன் 24, 2026 தொடங்கிய கவிஞர் கண்ணதாசன் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, கவிஞரை நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் வகையில் தினமணி இணையதளத்தில் மீண்டும் வாரந்தோறும் இந்தத் தொடர் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன - பகுதி - 6.
*
ஆறாம் படி
Advertisement
Advertisement
டைரக்டர் சங்கர் மிகவும் பொறுப்பானவர். அன்று முதல் இன்று வரை எந்தக் கதையை எடுத்துக் கொண்டாலும் அதற்கான நியாயங்களை நிலைநாட்டிக் கடுமையாக உழைத்துப் படம் எடுப்பார்.
வசனத்தையும், பாட்டையும் எழுதிக் கொடுத்துவிட்டுப் போய் விடுவேன். அதை நிழற் படமாகப் பார்க்கும்போது பல நேரங்களில் நானே பிரமித்ததுண்டு.
மருது பாண்டியர் கடைசியாகப் போர்புரிந்த காளையார்கோவில் கோட்டை, சிவகங்கை அரண்மனை ஆகியவற்றுக்காக நாங்கள் தேர்ந்தெடுத்த இடம் திண்டிவனத்தை அடுத்த செஞ்சிக் கோட்டை.
படத்தில் சண்டைக் காட்சிகளும், காட்சிகளும் இயற்கையாக இருக்க வேண்டும் என்பதாலும், ஆங்கிலப் படங்களில் இருந்து ஒரு ஷாட்கூட எடுக்கக் கூடாது என்பதாலும், சென்னையிலிருந்து 230 லாரிகளில் குதிரைகளை ஏற்றிக்கொண்டு போனோம். போலீஸ் குதிரை, ரேஸ் குதிரை, ஜட்கா குதிரை எதையும் விடவில்லை.
அப்போது ஜட்கா வண்டிகள் அதிகம் இருந்த சென்னையில் நான்கு நாட்கள் ஜட்கா வண்டிகளே கிடைக்கவில்லை.
சிவகங்கை வீரர்களின் உடை என்ன? சாய வேட்டி, தலையில் முண்டாசு, கையில் வேல் கம்பு - இவைகள்தானே?
ஐயாயிரம் வேட்டிகள், ஐயாயிரம் துண்டுகள், ஐயாயிரம் வேல் கம்புகள் தயாரித்தோம்.
நாள் ஒன்றுக்கு இரண்டு ரூபாய் சம்பளம் என்று, செஞ்சியைச் சுற்றியுள்ள ஊர்களில் தண்டோராப் போட்டு ஆட்களைத் திரட்டினோம்.
தமிழ்நாட்டில் செஞ்சிக் கோட்டை போல் பெரிய கோட்டை எதுவுமே கிடையாது. தேசிங்கு ராஜனின் குடிமக்களும், அரசாங்கமும் அதற்குள்ளேயே!
அடடா! எவ்வளவு பெரிய மலைகளின் மீது எவ்வளவு அற்புதமான கற்கட்டிடங்களைக் கட்டி இருக்கிறான்!
உச்சியின் மீது படுத்துவிட்டால் கீழே இறங்கவே மனம் வராது.
ராணி தீக்குளித்த இடம் கண் கலங்க வைக்கும்.
ஒரு வார காலம் அங்கேயே இருந்து பெரும் பகுதி படத்தை எடுத்தார் சங்கர். படம் அற்புதமாகவே அமைந்தது.
அப்போது ஒரு முழுப் பக்க விளம்பரம் மூவாயிரம் ரூபாய்தான்! அதிலும் லட்சம் ரூபாய் பத்திரிகை விளம்பரத்திற்காகச் செலவழித்தோம்.
ஊரெங்கும் இதே பேச்சு. அதனால் 'கட்டபொம்மன்' படம் எடுத்தவர்கள் தங்களுக்குப் போட்டியான படம் என்று கருதிவிட்டார்கள். அது பற்றிய தகராறு வலுத்துக்கொண்டே இருந்தது.
படம் வெளியான போது எதிர்த்தரப்பு ஆட்களும், தி.மு.க.விலேயே ஒரு பகுதியினரும் கொட்டகையில் உட்கார்ந்து கலாட்டா செய்தனர். அதையும் மீறி அந்தப் படத்தில் எங்களுக்கு நஷ்டம் குறைவுதான்.
சரியான விமரிசனம் செய்யும் பத்திரிகை என்று பெயரெடுத்த 'குமுதம்' "தரத்திற்கு ஒரு சிவகங்கைச் சீமை" என்று விமர்சனம் எழுதிற்று. கூலிக்குப் பேனாப் பிடித்த சிலர் மட்டுமே கேலி செய்தார்கள்.
படித்தவர்கள், மேதைகளின் புகழ்மாலைகள் வந்தும்கூடப் படம் சரியாகப் போகாததில் எனக்குப் பைத்தியம் பிடித்த மாதிரி இருந்தது.
ஆனால், படத்துக்குப் பணம் கொடுத்த சுப்பையா செட்டியார் கொஞ்சம்கூடக் கவலைப்படவில்லை. "உடனே அடுத்த கதை எழுதுங்கள்" என்று தூண்டினார்.
இந்த நேரத்தில் போட்டியைப் பற்றியோ, தகராறு பற்றியோ மனதில் வைத்துக் கொள்ளாத திரு. சிவாஜி கணேசன், தன் படங்களுக்கு நான் பாடல் எழுத வேண்டும் என்று வேட்டைக்காரன் புதூர் முத்து மாணிக்கத்தையும், மோகன் ஆர்ட்ஸ் மோகனையும் என்னிடம் அனுப்பினார்.
எவ்வளவோ கேவலமான விஷயங்களைக்கூட மறக்கவும் மன்னிக்கவும் பழகிவிட்ட நானும் இந்தச் சிறிய விஷயத்தை மனதில் வைத்துக்கொள்ளாமல் ஒப்புக் கொண்டேன்.
அதுதான் சங்கீதக் காற்று என் பக்கம் அடிக்க ஆரம்பித்த நேரம்.
முதன்முதலில் 'பாகப் பிரிவினை'க்கும், படிக்காத மேதை'க்கும் எழுதினேன்.
குருட்டுத்தனமாக வளர்க்கப்பட்ட தி.மு.க. தொண்டர்களிடமிருந்து கண்டனக் கடிதங்கள் வந்தன. அவற்றைத் தூக்கி எறிந்துவிட்டு எல்லாப் படங்களுக்கும் எழுத ஆரம்பித்தேன்.
அப்போது, என்னைத் தன் வீட்டிலேயே கூட்டிக்கொண்டு போய் வைத்து, குழந்தை போல் எனக்குச் சோறூட்டினார் ரோகிணி ஸ்டூடியோ திரு. எச்.எம். ரெட்டி.
சமுத்திரம் போன்ற ஒரு குடும்பத்தின் தலைமகனான அவர், படத் தொழிலில் ஒரு மூதறிஞர், அவரது மருமகன் சுவாமி என்னை ஒரு மகாராஜாவாகவே ஆக்கி விட்டார்.
முதன்முதலில் எனது பாடலுக்குப் பெரும் தொகை கொடுத்து அப்படியே என் கைகளைப் பிடித்துக்கொண்டு மெய்மறந்து நின்றவர், அஞ்சலி தேவியின் கணவர் ஆதிநாராயணராவ்.
பட உலகின் மேதைகள் இப்படி என்னிடம் பக்தி செலுத்த ஆரம்பித்தார்கள். அப்படியும் என் மனதில் நீங்காத கவலையாக நின்றுகொண்டிருந்தது, சிவகங்கைச் சீமையின் சரிவு.
அதனால் அடுத்தாற்போல் எழுதிய 'கவலை இல்லாத மனிதன்' கதையை நான் ஒழுங்காக எழுதவில்லை. அதுபோலவே, சந்திரபாபுவும் ஒத்துழைப்புத் தரவில்லை. கம்பெனியில் வேலை பார்த்தவர்கள் நன்றாகத் திருடினார்கள்.
என்னுடைய பெயரில் பதினொறு கார்கள் வாங்கப்பட்டிருந்தன. இந்தப் படத்தில் நான் அழுதது போல் வேறெதிலும் நான் அழுததில்லை. சந்திரபாபு என்னைக் கஷ்டப்படுத்தியது போல் வேறு எந்த நடிகனும் கஷ்டப்படுத்தியதில்லை.
என்னுடைய பங்காளி வெள்ளைப் பேப்பரில் எல்லாம் கையெழுத்துப் போட்டு என்னைக் கடன்காரன் ஆக்கினார்.
கடைசியில் ஆறு லட்ச ரூபாய் கடனோடு கம்பெனியை இழுத்து மூடினேன்.
கம்பெனியில் இருந்த பொருட்கள் மட்டும் ஒரு லட்சம் ரூபாய் பெறும். என் தாயார் பாடிய பாடலைப் போல, "நாய் பாதி பேய் பாதி" என்று அவை அனைத்தும் போய் விட்டன.
ஆனால், இப்படி ஒரு சரிவு நேர்ந்தபோது எங்கு பார்த்தாலும் என் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன.
'ஏன் பிறந்தாய் மகனே'
'தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும்'
'ஒரே ஒரு ஊரிலே....'
1960 செப்டம்பரில் 'கவலை இல்லாத மனிதன்' அடி வாங்கிற்று. முப்பத்தொன்பது வழக்குகள் கோர்ட்டுக்கு வந்தன.
அப்போது 'பாவமன்னிப்பு', 'பாசமலர்' இரண்டு படங்களுக்கும் நான் எழுதிக் கொண்டிருந்தேன்.
1961 ஏப்ரலில் தி.மு.க.வை விட்டு வெளியேறியபோது அந்தப் படங்கள் வெளியாயின.
நான் எப்படி எழுதினாலும் ஏற்றுக்கொள்வதற்கு கார்கள் படை எடுத்தன. பாட்டுத் தொழிலைப் பொறுத்தவரை நான் நியாயமாகவும், பயபக்தியுடனும் இருந்தேன், பெரிய இலக்கியங்களை எல்லாம் எளிய முறையில் சொல்ல விரும்பினேன். அற்புதமான நேரம்.
- தொடரும்
(ஒவ்வொரு புதன்கிழமையும் வெளிவரும்)
I never cried like this in any movie: series of articles by poet Kannadasan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.