அந்த அஸ்திவாரமும் அனுபவ ஞானமும் இளையராஜாவுக்கு அதிகம்! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 10
கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி, 1980-களில் சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் அவர் எழுதிய தொடர் கட்டுரையின் பத்தாம் பகுதி - மீண்டும் தினமணி இணையதளத்தில்...
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் 1981 ஜனவரி 1 தேதியிட்ட இதழில் தொடங்கி, சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! என்ற தலைப்பில் தன்னுடைய திரைப் பயணம் பற்றித் தொடர் கட்டுரைகளை எழுதினார் கவிஞர் கண்ணதாசன். ஜூன் 24, 2026 தொடங்கிய கவிஞர் கண்ணதாசன் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, கவிஞரை நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் வகையில் தினமணி இணையதளத்தில் மீண்டும் வாரந்தோறும் இந்தத் தொடர் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன - பகுதி - 10
*
பத்தாம் படி
Advertisement
Advertisement
இசையமைப்பாளர்களில் திரு கே.வி. மகாதேவனைப் பற்றி நான் இந்தப் பகுதியிலேயே அதிகம் விவரித்திருக்கிறேன். அதற்கு மேல் ஒன்றும் சொல்ல வேண்டியதில்லை.
மற்றொரு இசையமைப்பாளர் திரு. சுதர்ஸனம். ஏவி.எம்.மின் ஆரம்ப காலத்திலிருந்து அந்தக் கம்பெனிக்கு உயிர் கொடுத்தவர் இவர். ஹிந்தி மெட்டுகளைக் காப்பியடிக்கும்படி இவர் வற்புறுத்தப்பட்டார். தயாரிப்பாளர்கள் மீது குற்றமில்லை. அந்தக் காலத்தில் அது ஒரு பாணி.
பாகவதரும், சின்னப்பாவும்கூட ஹிந்தி மெட்டுகளில் நிறையப் பாடி வெற்றி பெற்றிருக்கிறார்கள். அத்தகைய வெற்றி சுதர்ஸனத்திற்கும் கிடைத்தது.
அதே நேரத்தில் அவருடைய அசல் திறமையும் மங்கிவிடவில்லை, ஏவி.எம். படங்களில் அவர் சொந்தமாகப் போட்ட மெட்டுகள் மிகவும் பிரபலமடைந்திருக்கின்றன. இவரோடு சில படங்களுக்கு வேலை செய்திருக்கிறேன்.
மெல்லிசையில் ஒரு தனி நளினத்தை உண்டாக்கிக் காட்டியவர் சுதர்ஸனம்.
வேலைபார்த்த நிறுவனத்திற்கு முழுக்க முழுக்க நன்றியோடிருந்து அதை வளர்த்தவர் இவர். பல இசையமைப்பாளர்களைவிட மூத்தவர். இன்று திரை மறைவில் இருக்கும் இவரை இசை உலகமும் ஏவி. எம். நிறுவனமும் கௌரவிக்க வேண்டும்.
சுதர்ஸனத்தின் தம்பி கோவர்த்தனம் சில படங்களுக்குத்தான் இசையமைத்திருக்கிறார் என்றாலும், அந்தப் படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக ஓடின.
'கைராசி'யில் வரும் 'கண்ணும் கண்ணும் பேசியதும்' என்ற பாடல் என்றும் பசுமையானதல்லவா?
'கைராசி'யும், 'பட்டணத்தில் பூதமும்' அவரது புகழை உரத்த குரலில் கூவின. ஆனாலும் இவரை அதிகப் படங்களில் காணவில்லை.
சினிமா உலகுக்குத் திறமை மட்டும் போதாது, குருட்டு அதிர்ஷ்டமும் வேண்டும் அல்லவா?
ஜெமினிக்குப் பெருமை தேடித் தந்தவர்களில் ஒருவர், ராஜேஸ்வரராவ்.
'நந்தபாலன் கருணை புரிவான்' என்னும் பாடலை டி. ஆர். ராஜகுமாரியையே அழகாகப் பாட வைத்தவர் இவர். இவரோடு பணிபுரிந்த சில படங்கள் அவ்வளவாக வெற்றி பெறாவிட்டாலும் அவருடைய திறமையை உணர முடிந்தது.
இன்றைய இசையமைப்பாளர்கள். இவரை அதிகம் மதிக்கிறார்கள்.
தொடக்கத்தில் நான் அதிகப் படங்கள் செய்தது தெலுங்கு தட்சிணாமூர்த்தியோடு. 'கல்யாணி', 'வளையாபதி' போன்ற படங்களில் நாங்கள் உற்சாகமாகப் பணிபுரிந்தோம். வெற்றி குறைவு, ஆனால் அந்த அஸ்திவாரம் தான் பின்னால் உதவிற்று.
'திருப்பாற்கடலில் பள்ளி கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா' என்ற பாடலை நான் அடிக்கடி போட்டுக் கேட்பதுண்டு. சுவாமி ஐயப்பனில் வரும் இந்தப் பாடல், நான் எழுதியதுதான் என்றாலும், அதன் எளிமையான கர்நாடகத்திற்காக அதனை மீண்டும் மீண்டும் கேட்பேன்.
இசையமைப்பாளர் தேவராஜன் மிகவும் எளிமையானவர். நல்ல இசைஞானி. பிறப்பால் தமிழர், பணிபுரிவது மலையாளப் படங்களில்.
'சுவாமி ஐயப்பன்'. 'துலாபாரம்' உட்பட எட்டுப் படங்களில் இவரோடு பணி புரிந்திருக்கிறேன்.
இவரது இசை கரடுமுரடாக இருக்காது. அதனால் பாடல் எழுதுவது சுலபம்.
மலையாள தட்சிணாமூர்த்தி எல்லோரையும்விட வயதில் மூத்தவர். இவரை 'சுவாமி' என்றும், 'குரு' என்றும் அழைப்பார்கள். ராக ஞானத்தில் வல்லவர். இவர் செய்த தமிழ்ப் படங்களில் பலவற்றுக்கு நான் பாடல் எழுதியுள்ளேன்.
எனக்கேகூட அவரிடம் குருபக்தி ஏற்பட்டுவிட்டது.
திரை உலகுக்கு நான் அறிமுகப்படுத்தியவர்கள் என்று பெருமைப்படக் கூடியது சங்கர் - கணேஷைப் பற்றி. முதலில் எனது 'நகரத்தில் திருடர்கள்' படத்துக்கு இவர்களை இசையமைப்பாளர்களாக்கினேன். அந்தப் படம் எடுக்கப்படாததால் திரு. சின்னப்பா தேவரிடம் அறிமுகப்படுத்தினேன். இன்று தமிழில் அதிகப் படம் செய்பவர்கள் இவர்களே. ஜனரஞ்சகமான இசை. விசுவநாதனைப் போலவே துரிதமாக இசையமைக்கக் கூடியவர்கள்.
மறைந்த இசையமைப்பாளர் திரு ஜி. ஆர். சுப்பராமனின் தம்பி, சங்கர் - அவருடைய நல்ல ஞானம் இவருக்கும் உண்டு. திரு. கணேஷ் மிகச் சிறு பிராயத்திலிருந்தே இசைப் பயிற்சியுள்ளவர். இருவரும் சேர்ந்திருப்பதால் இசை பரிணமிக்கிறது. இவர்களது நன்றி உணர்ச்சி மறக்க முடியாதது.
திரு. இளையராஜா, இசையமைப்பாளர் ஜி.கே. வெங்கடேஷிடம் பயிற்சி பெற்றவர். வெங்கடேஷும் நானும் நிறையப் படங்கள் செய்திருக்கிறோம். சுகமான லயம், சுவையான இசை. அந்த அஸ்திவாரமும், அனுபவ ஞானமும் இளையராஜாவுக்கு அதிகம் உண்டு. இவர் கையாளுவது முற்றிலும் மாறுபட்ட பாணி. விசுவநாதன், மகாதேவனைப்போல் பல வகையான இசையிலும் வெற்றி பெற இவர் எடுத்துக் கொள்ளும் முயற்சி வெற்றி பெறும்,
திரு. சந்திரபோஸ் பரம்பரையாக இசைக் குடும்பத்தில் வந்தவர். இவரது தாயார் கமலம் புகழ்பெற்ற பாடகி. சந்திரபோஸின் குரலே கணீரென்றிருக்கும். பாடல்களில் ஈடுபாட்டோடு இசையமைப்பார். இவருக்கு நல்ல எதிர் காலம் இருக்கிறது.
இதுவரை நான் சொன்ன அத்தனை பேரையும்விட, கர்நாடக இசையில் அதிக ராகங்கள் தெரிந்தவர் குன்னக்குடி திரு. வைத்தியநாதன். சிறிய வயதிலிருந்த பெரிய பாடகர்களுக்கு வயலின் வாசித்தவராதலின் சகல ராகங்களும் அத்துப்படி. இவருடைய வயலின் பேசவும் செய்யும்! இப்படி ஒரு வயலின் வாசிப்பவரை இதுவரை நான் பார்த்ததில்லை. இவரது திறமைக்காக இவருக்கு 'பத்மபூஷண்' பட்டம் கொடுக்க வேண்டும்.
மற்றும் டி. ஜி. லிங்கப்பா, பார்த்தசாரதி, சூலமங்கலம் ராஜலெட்சுமி, ரமண ஸ்ரீதர், ராமானுஜம், அனைவருடனும் நான் பணிபுரிந்திருக்கிறேன். எல்லோரும் திறமைசாலிகளே.
திரு. விஜய பாஸ்கர் வாய் பேசமாட்டார்: ஆர்மோனியம் பேசும். 'மயங்குகிறாள் ஒரு மாது' படத்தில், 'சம்சாரம் என்பது வீணை' என்ற பாடலும், 'தப்புத் தாளங்'களில் 'என்னடா பொல்லாத வாழ்க்கை' என்ற பாடலும் நான் அதிகம் விரும்புபவை.
ஏறக்குறைய தமிழ்ப் படங்களுக்கு இசையமைக்கும் எல்லாருடனும் நான் வேலை செய்திருக்கிறேன். இந்த சினிமா உலகத்தை என்னால் மறக்க முடியாது.
என்னதான் சினிமாக்காரனைப் பற்றி உலகம் அவதூறாகக் கருதினாலும், நான் சந்தித்தவர்களில் அறுபது சதவிகிதம் பேர் உத்தமமானவர்களே.
குடும்பத்தில் நடக்கும் சுபகாரியங்களுக்கு எல்லை இல்லாமல் வழங்கக் கூடியவர்கள் சினிமா உலகில்தான் இருக்கிறார்கள்.
ஏதோ அதிக தூரம் இந்தக் குதிரை ஓடி வந்துவிட்டதுபோல் தோன்றுகிறது; ஆனால் உண்மை அதுவல்ல. இன்னும் ஓட வேண்டிய தூரமே அதிகம் இருக்கிறது. கால்களுக்கு வலிமை வேண்டும்.
சினிமா உலகம் இப்போது பரந்த மைதானம் ஆகிவிட்டது. பெரும்பாலோர்க்கு வேலை வாய்ப்பை சினிமா உலகமே தருகிறது. இது வாழ வேண்டும்; வளர வேண்டும். நன்றி உணர்ச்சியோடு இந்தச் சினிமா உலகத்தை நோக்கும்போது, நான் எந்தெந்த இயக்குநர்களிடம் பாடல்கள் எழுதியுள்ளேன் என்பதையும் எண்ணிப் பார்க்க வேண்டாமா?
முதலில் எனது முதலாளி டி. ஆர். சுந்தரம்.
- தொடரும்
(ஒவ்வொரு புதன்கிழமையும் வெளிவரும்)
A series of articles by poet Kannadasan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.