பணத்தைச் சம்பாதிக்க எல்லோருக்கும்தான் தெரிகிறது! எவனுக்குக் கொடுக்கத் தெரிகிறது? கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 7
கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி, 1980-களில் சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் அவர் எழுதிய தொடர் கட்டுரையின் ஏழாம் பகுதி - மீண்டும் தினமணி இணையதளத்தில்...
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் 1981 ஜனவரி 1 தேதியிட்ட இதழில் தொடங்கி, சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! என்ற தலைப்பில் தன்னுடைய திரைப் பயணம் பற்றித் தொடர் கட்டுரைகளை எழுதினார் கவிஞர் கண்ணதாசன். ஜூன் 24, 2026 தொடங்கிய கவிஞர் கண்ணதாசன் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, கவிஞரை நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் வகையில் தினமணி இணையதளத்தில் மீண்டும் வாரந்தோறும் இந்தத் தொடர் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன - பகுதி - 7.
*
ஏழாம் படி
Advertisement
Advertisement
சகல நிகழ்ச்சிகளையும் தொகுத்து உரைக்க என்னிடம் நாட்குறிப்பு இல்லை. நியாயமாக நான் நாட்குறிப்பு வைத்திருக்க வேண்டும்.
67-லேயே 'வனவாச'த்தை எழுதி முடித்த பிறகு அதன் தொடர்ச்சியை எழுத வேண்டும் என்ற பிரக்ஞையோடு எழுதிவைத்திருக்க வேண்டும். ஆனால் அவ்வளவு பொறுப்புணர்ச்சி அப்போதே இருந்திருக்குமானால், அவலமான பல அத்தியாயங்களை எழுத வேண்டி இருந்திருக்காது.
ஒன்று நினைவிருக்கிறது. 'கவலை இல்லாத மனிதன்' நஷ்டத்திற்குப் பிறகு தொழிலில் முன்னேறியது நன்றாக நினைவிருக்கிறது.
இந்தக் காலங்களில் திரு. பி. நாகிரெட்டி அவர்கள், பல விஷயங்களில் என்னிடம் யோசனை கேட்டார்கள்.
அதேநேரத்தில் 'ஜெமினி' அதிபர் எஸ்.எஸ். வாசன் அவர்கள் என்னிடம் காட்டிய அன்புக்கு ஈடாக நான் எதையுமே குறிப்பிட முடியாது.
ஒரு நாள் அவர் என்னை டெலிபோனில் அழைத்தார். "என்ன பிரதர், படம் எப்படிப் போயிற்று?" என்றார். நான். "ரொம்ப சுமார்" என்றேன். ''ஒன்றுக்கும் கவலைப்படாதீர்கள், அடுத்தடுத்துச் செய்யுங்கள்'' என்றார்.
அன்று மாலை திரு. வாசன் அவர்களின் நிர்வாகி நம்பியார் என்னை டெலிபோனில் அழைத்தார். "வணக்கம் சார்" என்றார் அழகான தமிழில்.
நான் ஜெமினிக்குத் தர வேண்டிய முப்பத்திரண்டாயிரம் ரூபாய் கடனைக் கேட்கப் போகிறார் என்று பயந்துகொண்டிருந்தபோது, "சார் உங்களிடம் பாஸ் சொல்லச் சொன்னார். அந்தக் கடனைத் தள்ளுபடி செய்து விட்டாராம்! அதனால் அதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம் என்று கூறச் சொன்னார்" என்றார்.
எனக்குக் கண்ணீர் பெருக்கெடுத்தது.
நான் தொழிலில் இருக்கும் நிலை தெரிந்தும் சில பெரிய மனிதர்கள் மூவாயிரம், நாலாயிரம் ரூபாய்களைக்கூட கிட்டிபோட்டு என்னிடம் வசூலித்த போது ஒரு பெரும் தொகையைத் தள்ளுபடி செய்த வாசனை நான் எப்படி மதித்திருப்பேன்?
வாசன் ஐந்து ரூபாய்ச் சம்பளத்தில் இருந்து முன்னேறியவர். கஷ்டப்படுகிறவர்களைக் கண்டால் அவரும் அழுதுவிடுவார். உருக்கமான சங்கீதத்தைக் கேட்டால் அழுதுவிடுவார். அவர் என் மனதில் நீங்காத இடம் பெற்றுவிட்டார்.
இந்த சினிமா உலகத்திலேயே நான் அதிகமாக நேசிப்பதும், மதிப்பதும் எனக்கு முதன்முதலில் முதலாளியாக இருந்த திரு. டி. ஆர். சுந்தரம் அவர்களைத்தான்.
திரு. எஸ்.எஸ். வாசன் அவர்கள் அவரையும்தாண்டி ஒருபடி அதிகமாகவே என் மனதில் இடம் பெற்றார்.
பணத்தைச் சம்பாதிக்க எல்லோருக்கும்தான் தெரிகிறது! எவனுக்குக் கொடுக்கத் தெரிகிறது?
அதன் பிறகு வாசன் படங்கள் பலவற்றுக்கு நான் பாடல்கள் எழுதியுள்ளேன். ஒரு படத்திலாவது "பழைய கடனுக்குக் கொஞ்சம் பிடித்துக் கொள்கிறேன்" என்று அவர் சொன்னதில்லை.
'உயர்ந்த குடும்பத்தில் பிறந்தவர்கள் எப்போதும் உயர்வாகவே நடந்து கொள்கிறார்கள்' என்றபடி வாசன் எல்லோரிடமுமே உயர்வாக நடந்து கொண்டிருக்கிறார்.
அவரிடம் பத்து வருடம் வேலை பார்த்த ஒருவர், அவரை விட்டு விலகும்போது குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாயாவது கொடுத்துத்தான் விலக்குவார். வாசனிடம் வேலை பார்த்துவிட்டு சோற்றுக்குத் திண்டாடியவர்கள் யாருமே இல்லை.
இத்தகைய உத்தமர்கள் இன்றைய சினிமா உலகத்தில் குறைவாகத்தான் இருந்தார்கள் என்பதும் உண்மை.
இதற்கு நேர்மாறான ஒரு விஷயத்தைச் சொல்வதானால், நான் கையெழுத்தே போடாமல் வெறும் ஐநூறு ரூபாய்க்கு என் மேல் வழக்கு வந்து, அது 'டிகிரி'யும் ஆனதைச் சொல்ல வேண்டும்.
எந்தக் கையெழுத்தும் நான் போடவில்லை; என் மீது டிகிரி! இது எந்தக் கோர்ட்டில்? சென்னையிலேயேதான்!
இதற்கு நான் காரணத்தைச் சொல்லப் போனால், அதற்கு ஆஜரான வக்கீலைப் பற்றிச் சொல்லியாக வேண்டும்; ஆகவே, அந்தக் கதை வேண்டாம்.
சினிமா உலகில் எந்த ஒரு கலைஞனுடைய சொத்தும் அடுத்த தலைமுறைகூட வந்ததில்லை.
பாகவதர், சின்னப்பா, காளி என். ரத்தினம் எத்தனையோ பேரைப் பார்த்து விட்டேன். நூற்றுக்கு நூறு இதுதான் உண்மை.
தகுதிக்கு மீறிய வருமானம் என்பதால் கடவுள் அளவுக்கு மீறிய செலவைக் கொடுத்துவிடுகிறான். மிகவும் கெட்டிக்காரத்தனமாக ஒருவன் சொத்துச் சேர்த்துவிட்டால், அவன் பிள்ளை அடிமடையனாகவோ, அயோக்கியனாகவோ இருப்பான்.
இந்த ஒரு விதியை நினைத்தே நான் ஆறுதலடைவது வழக்கம்.
இந்தக் காலங்களில்தான் என் அன்புக்குரிய நண்பர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் காலமானார்.
என்னிடம் எப்போதுமே ஒரு சுபாவம் உண்டு, என்னைவிட ஒருவர் கெட்டிக்காரனாக இருந்தாலும், இல்லை, அந்த சீசனில் அவருக்கு 'மார்க்கெட்' இருந்தாலும் அவரை என் படத்துக்குப் பயன்படுத்திக் கொள்வேன்.
அதன்படி, 'கவலை இல்லாத மனிதன்' படத்திற்கு பட்டுக்கோட்டை திரு. கல்யாணசுந்தரத்தைக் கூப்பிட்டு ஒரு பாடல் எழுதச் சொன்னேன். அது ஒரு மலையாள மெட்டு, குடும்பப் பெண் ஒருத்தியை நாட்டியத் தொழிலில் இறக்குகிறார்கள். அப்போது அவள் பாடுவது.
'கண்ணு மேலே கண்ணெ வச்சு, காசை முன்னே வச்சு கன்னி என்னெ ஆட வச்சுப் பாரய்யா' என்று தொடங்கும் அந்தப் பாடல். பிறகு அந்தக் காட்சியே இடம் பெறாததால், அந்தப் பாட்டும் இடம் பெறவில்லை.
அதுபோலவே கோடம்பாக்கம் மெயின் ரோட்டில் அப்போதிருந்த தஞ்சை ராமய்யா தாஸிடமும் அப்போது போனேன். அவரோ, "நீங்கள் சொல்லுகிற இடத்திற்கெல்லாம் என்னால் எழுத முடியாது! நானே ஒரு பல்லவி சொல்கிறேன், எழுதிக் கொள்ளுங்கள்" என்றார்.
தொழிலின் மீது அவர் காட்டிய அலட்சியம் எனக்கு வியப்பைத் தந்தது. 'இவர் தொழிலில் நீடிக்க மாட்டார்' என்று எண்ணிக்கொண்டே திரும்பினேன்; அப்படியே ஆயிற்று.
உண்மையான திறமைசாலிகளை நான் தேடி அலைவேன். இப்பொழுது ஏனோ அந்த அவசியம் இல்லாமற் போய்விட்டது.
பட்டுக்கோட்டையின் மறைவு, அன்று உண்மையில் எனக்கேற்பட்ட நஷ்டமாகும். எனக்கென்று ஒரு மார்க்கெட் வருவதற்கு முன் இலக்கியச் சுவையுள்ள இடமாக யாராவது சொன்னால், என்னைக் கூப்பிடச் சொல்லுவார் அவர், கிராமியப் பாட்டுகளாக இருந்தால், அவரைக் கூப்பிடச் சொல்லுவேன் நான்.
என்னைப் பற்றி ஒரு பத்திரிகைகாரர் மோசமாக எழுதியபோது, 'ஆபட்ஸ்பரி'யில் நடந்த ஒரு விருந்தில், அந்தப் பத்திரிகைகாரரைக் கொச்சை மொழியால் திட்டி அடித்துவிட்டார் கல்யாணசுந்தரம்.
கல்யாணசுந்தரத்தின் மரணம் மிகவும் கொடுமையானது. அது இயற்கையானதல்ல. மூக்கிலே 'பஞ்சர்' பண்ணுவதை அனுபவமில்லாத ஒரு டாக்டரிடம் பண்ணிக்கொண்டு, அவர் மூளை நரம்பைத் தட்டிவிட்டு அதன் காரணமாகவேதான் அவர் இறந்தார்.
அதிலிருந்து சினிமாக்காரர்களை நான் எச்சரிப்பது வழக்கம், 'காது மூக்கு தொண்டை' என்றால் எழும்பூர் சுப்பிரமணியத்தைத் தவிர வேறு யாரிடமும் போகாதீர்கள்' என்று. இப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலையில் ராமலிங்கமும் அந்த வரிசையில் நிற்கிறார்.
பிறகு பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் மறைவால் ஏற்பட்ட சூனியத்தை, என்னைக்கொண்டே சினிமா உலகம் நிரப்பிற்று.
இதில் எனக்கு ஆணவம் வரவில்லை. ஆசையே பெருக்கெடுத்தது.
- தொடரும்
(ஒவ்வொரு புதன்கிழமையும் வெளிவரும்)
Everyone knows how to earn money; But who knows how to give it: A series of articles by poet Kannadasan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.