ரூ. 125 சம்பளத்தில் அன்றிருந்த நிம்மதி இன்று இல்லை! கவிஞர் கண்ணதாசனின் கட்டுரைத் தொடர்! - 11
கவிஞர் கண்ணதாசன் நூற்றாண்டு விழாவையொட்டி, 1980-களில் சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் அவர் எழுதிய தொடர் கட்டுரையின் பதினொன்றாம் பகுதி - மீண்டும் தினமணி இணையதளத்தில்...
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்திலிருந்து வெளிவந்த சினிமா எக்ஸ்பிரஸ் இருவார இதழில் 1981 ஜனவரி 1 தேதியிட்ட இதழில் தொடங்கி, சினிமாச் சந்தையில் முப்பது ஆண்டுகள்! என்ற தலைப்பில் தன்னுடைய திரைப் பயணம் பற்றித் தொடர் கட்டுரைகளை எழுதினார் கவிஞர் கண்ணதாசன். ஜூன் 24, 2026 தொடங்கிய கவிஞர் கண்ணதாசன் பிறந்த நூற்றாண்டு விழாவையொட்டி, கவிஞரை நினைவுகூர்ந்து சிறப்பிக்கும் வகையில் தினமணி இணையதளத்தில் மீண்டும் வாரந்தோறும் இந்தத் தொடர் கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன - பகுதி - 11
*
பதினொன்றாம் படி
Advertisement
Advertisement
1947 -ல் மாடர்ன் தியேட்டர்ஸ் நடத்திய சண்டமாருதம் பத்திரிகையில் நான் ஆசிரியராகச் சேர்ந்தேன். அப்போது வயது எனக்கு 20. மிக அமைதியான வாழ்க்கை.
125 ரூபாய் சம்பளத்தில் அன்றிருந்த நிம்மதி இன்று இல்லை.
சேலத்தில் அமைதியான சூழ்நிலையில், எங்களுக்கென ஒரு அலுவலகம் ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் நாங்கள் மூவர்தான் தங்கி இருந்தோம்.
ஒருவர் முக்தா பிலிம்ஸ் சீனிவாசன். மற்றொருவர் அவரது சகோதரர் ராமசாமி. அவர்கள் இருவரும் மாடர்ன் தியேட்டர்ஸில் டைப்பிஸ்டுகள்.
எனக்கென ஒரு மானேஜர். ஒரு குமாஸ்தா, ஒரு ஊழியர் ஒதுக்கப்பட்டிருந்தார்கள்.
நான் போய்ச் சேர்ந்த சில மாதங்களில் திரைக்கதை எழுதும் வாய்ப்பை திரு. டி.ஆர்.எஸ். கொடுத்தார்.
அவர் தமிழ் படிக்காததாலோ என்னவோ, தமிழ் படித்தவர்களிடம் அதிகம் பிரியம் காட்டுவார்.
முதன்முதலில் ஆதித்தன் கனவு என்ற படத்துக்குத் திரைக்கதை எழுதினேன். அங்கிருந்த இடைத்தரகர்கள் அது பயன்படுத்தப்படாமல் தடுத்துவிட்டார்கள். நகைச்சுவைக் காட்சிகள் மட்டும் சில ஏற்றுக் கொள்ளப்பட்டன.
பிறகு மாயாவதிக்கு எழுதினேன். அதுவும் பயன்படவில்லை.
மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்து விலகி ஜூபிடரில் எழுதிய பிறகு மாடர்ன் தியேட்டர்ஸின் கல்யாணி, வளையாபதி, திரும்பிப் பார், இல்லறஜோதி, சுகம் எங்கே? என வரிசையாக அனைத்துக்கும் எழுதினேன்.
என்ன பூர்வீக பந்தமோ தெரியவில்லை. திரு. டி.ஆர். எஸ். என்னிடம் அவ்வளவு அன்பைச் சொரிந்தார்.
என்னளவுக்கு மாடர்ன் தியேட்டர்ஸில் தொடர்பு கொண்ட எழுத்தாளர்கள் எவருமே கிடையாது.
மாதச் சம்பளத்தில் மாடர்ன் தியேட்டர்ஸில் இருந்தபோது சில வேடிக்கைகள் நிகழ்ந்தன.
மாடர்ன் தியேட்டர்சுக்கு ஒரு ஹாஸ்டல் உண்டு. நாட்டிய நடிகைகள் அங்கேதான் தங்கியிருப்பார்கள். அவர்களது அறையில் நான் போய்ப் பேசிக் கொண்டிருப்பேன். அந்த அறைக்கு அடுத்த அறைதான் என்னுடையது.
யார் அப்படி நடந்தாலும் சீட்டுக் கிழிந்து போகும். என்னைப் பற்றி தயாரிப்பு மானேஜர் எம்.ஏ. வேணு, முதலாளியிடம் நிறைய ரிப்போர்ட் கொடுத்தார்.
முதலாளி உடனே இரண்டு அறைகளுக்கும் நடுவே உள்ள கதவை ஆணி வைத்து அடிக்கும்படி கூறிவிட்டார்.
மாடர்ன் தியேட்டர்சில் இருந்து நான் விலகிய பதினைந்தாவது நாளே எனக்குத் தந்தி கொடுத்து வரச் சொன்னார் டி.ஆர்.எஸ்.
அவர் லண்டனுக்குப் புறப்படும் முன்பு இல்லறஜோதி கதை - வசனம் பாடல் மூன்றையும் என்னிடம் ஒப்படைத்தார். எனக்குத் தனியாக ஒரு வீடு கொடுத்தார்.
அப்போது டால்மியாபுரம் வழக்கில் நான் அலைந்துகொண்டிருந்தேன். அதற்குப் பணமும் கொடுத்தார். நான் ஜெயிலில் இருந்து கடிதம் அனுப்பியபோது பணமும் அனுப்பினார்.
நான் புகழ் பெறப் புகழ் பெற மாடர்ன் தியேட்டர்சில் நெருக்கம் இன்னும் அதிகமாயிற்று.
1964-ல் என்னை ஒருமுறை அவர் [டிஆர்எஸ்] பார்த்து, "என்னப்பா உன்னைவிடப் பாட்டுக் கட்டுறவன் எவனுமே கிடையாதே. ஒழுங்காகக் கட்டித் தருவாயா?" என்று கேட்டார்.
வனவிலங்குகள் பாதுகாப்புப் பற்றி நான்கு பாடல்கள் எழுதிக் கேட்டார். என்னைக் கண்டால் புன்னகைப்பார். அந்தப் புன்னகையே அவ்வளவு அழகாக இருக்கும்.
ஏறக்குறைய ஒரு தந்தைக்கும் மகனுக்கும் இடையே உள்ள பிணைப்பு எங்களிடையே இருந்தது.
தமிழகத்தில் மாடர்ன் தியேட்டர்ஸ் ஒன்றுதான் கடனே வாங்காமல் தொழில் நடத்திய நிறுவனம்.
அது சின்னப்பாவைப் பார்த்திருக்கிறது, ஹொன்னப்பாவைப் பார்த்திருக்கிறது. கணேச பாகவதரைப் பார்த்திருக்கிறது. பி.எஸ். கோவிந்தன், டி.ஆர். மகாலிங்கம், எம்.ஜி.ஆர்., சிவாஜி எல்லோரையும் பார்த்திருக்கிறது. அவர்கள் அனைவரையும் நானும் பார்த்திருக்கிறேன், சின்னப்பாவைத் தவிர.
இளங்கோவன் போன்ற எழுத்தாளர்களையே மிரள வைத்தவர், டி.ஆர்.எஸ். சின்னப்பா பயப்படுவது அவரிடம்தான். அவர் முன்னால் யாரும் உட்கார்ந்து பேச மாட்டார்கள். அந்நாளில் அவர் தலைக்கு மேல் ஒரு சவுக்குத் தொங்கும். அப்படிப்பட்டவர் என்னை உட்காரச் சொல்லுவார். நான் சொல்வதைப் பொறுமையோடு கேட்பார்.
நான் பெரிய விஷயங்கள் எதையாவது சொன்னால், இது ஆங்கிலப் படத்துக்கு நன்றாக இருக்கும் என்று கேலி செய்வார்.
குறிப்பிட்ட காலங்கள் வரை மாடர்ன் தியேட்டர்சில் நான் ராஜாவாகவே இருந்தேன்.
முதன்முதலில் எனக்கு சினிமா கதவுகளைத் திறந்துவிட்ட என் முதலாளியை நான் மறக்க முடியாது.
பணம் என்று சொல்லி வாய்மூடும் முன்பு வாங்கிக் கொள் என்று சொல்லும் அந்த தெய்வத்துக்கு என்னைப்போல் பல பக்தர்கள் உண்டு.
அவரைப் பற்றி எழுதுவதானால் 500 பக்கம் கொண்ட புத்தகமாக எழுதலாம். இந்தக் கட்டுரையில் இடம் போதாது.
அடுத்து எனக்கு அருள்பாலித்தவர் கே. ராமநாத். பாட்டெழுதும் வாய்ப்பை முதன்முதலில் கொடுத்தவர்.
அந்த மூக்குக் கண்ணாடியும், முகத் தோற்றமும், உருவமும் பார்ப்பதற்கு திரு. சி. சுப்பிரமணியம் மாதிரியே இருக்கும். பேசவே மாட்டார். கோபம் வந்தால் கடு மையாக இருக்கும். தொழிலில் மட்டுமே கோபம் வரும்.
கன்னியின் காதலி படப்பிடிப்பு நடைபெற்றபோது ஒருமுறை ஒரு பிரமுகர், மாதுரி தேவியோடு அடிக்கடி வந்து பேசிக்கொண்டிருந்தார். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். ராம்நாத்திற்கு திடீரென்று கோபம் வந்தது. அவரது கோபத்தை அப்போதுதான் பார்த்தேன்.
ராம்நாத்தோடு இணை பிரியாமல் இருந்தவர் ஆர்ட் டைரக்டர் ஏ. கே. சேகர். அவரும் பரமசாது. என்னைக் காணும்போதெல்லாம் உங்களுக்குப் பிரகாசமான எதிர்காலம் இருக்கிறதென்று சொல்லிக்கொண்டே இருந்தவர் சேகர்.
இரண்டு மூன்று படங்கள்தான் வேலை செய்தோம். அந்தக் காலங்கள்தான் எவ்வளவு உற்சாகமானவை!
ராம்நாத்துக்கு அடுத்தபடி நான் சந்தித்த டைரக்டர் கலைவாணர் என்.எஸ்.கே.
பணம் படத்துக்கு நான் பாடல்கள் எழுதினேன். என் வாழ்வில் புதுப் பாடமா என்ற பாடலை என்.எஸ்.கே. அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். இங்கேதான் திரு. உடுமலை நாராயணகவி, நான் எழுதவில்லை என்றால், கண்ணதாசன் எழுத வேண்டும் என்று சொன்னார்.
கலைவாணர் என் திறமையில் அளவற்ற நம்பிக்கை வைத்திருந்தார்.
நான் என்ன, எந்தத் திறமைசாலியையும் அடையாளம் கண்டு கொள்ளக்கூடிய திறமை அவருக்கிருந்தது.
ஒரு முழுப் படத்துக்கு நான் கதை - வசனம் எழுத வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார். அது நிறைவேறாமலே போய்விட்டது.
அடுத்து நானும் பீம்சிங்கும் சந்தித்தது செந்தாமரை படத்தில்.
அது அவருக்கு முதல் படம். எனக்கு ஐந்தாவது படம். தயாரித்தவர் என் சகோதரர்.
பீம்சிங்கைப் பற்றி இதே கட்டுரையில், பல இடங்களில் நான் கூறியுள்ளேன். ஆகவே விரிவு தேவை இல்லை.
நான் ஜெயிலில் இருந்து திரும்பி தென்றல் பத்திரிகை ஆரம்பித்ததும், முதன்முதலில் என்னை இனம் கண்டு ஓடிவந்தவர் திரு. ஆர்.ஆர். சந்திரன்.
இல்லற ஜோதிக்கு அடுத்தபடி அவரது நானே ராஜா படத்துக்குத்தான் நான் வசனம் எழுதினேன்.
அழகான உருவம். என்னை டேய் கண்ணு என்று அன்போடு அழைப்பார். நானும், நீ நான் என்றுதான் பேசுவேன். மிகச் சிறந்த ஒளிப்பதிவாளர். என் இஷ்டத்திற்குப் பொறுப்புக் கொடுத்தார். அவரது மரண பரியந்தம் அவரது படங்களில் நான் தொடர்பு கொண்டிருந்தேன். அண்ணாவிடம் அளவற்ற மயக்கம் உடையவர்.
மூன்றே படங்கள்தான் இவரோடு. முற்றிலும் நட்பே முன்னிலை.
நானே ராஜாவுக்கு நான் எழுதிக் கொண்டிருக்கும்போது என்னைத் தேடிக்கொண்டு வந்தவர் திரு. பி.எஸ். ரங்கா.
நானே ராஜாவின் வசனத்தைக் கேட்டாராம். தெனாலிராமனுக்கு நான் எழுத வேண்டுமாம்.
கன்னடத்துக்காரர். என்னிடம் அளவற்ற அன்பு.
கடைசிப் படம் எடுக்கும்வரை என்னையே இவர் கவனத்தில் வைத்திருந்தார்.
விக்ரம் ஸ்டுடியோ என்ற ஒன்றை ஆரம்பித்தார். ஸ்டுடியோவின் பெயரை மாற்றுங்கள் என்றேன் நான். ஏன் என்றார். ஆரம்பிக்கும்போதே விக்ரம் என்று போடுகிறீர்களே என்று கேலி செய்தேன். சொன்னது போல் விற்றேவிட்டார்.
ஒருநாள் மதியம் தென்றல் அலுவலகத்திற்கு வந்தார் லேனா செட்டியார். என்.எஸ்.கே. என்னைப் பற்றிச் சொன்னாராம். மதுரை வீரனுக்கு நான் திரைக்கதை வசனம் எழுத வேண்டுமாம்.
கேட்டதெல்லாம் கிடைக்கும் ராஜாங்கமாயிற்றே கிருஷ்ணா பிக்சர்ஸ், மறுப்பேனா!
அன்று ஆரம்பம் கிருஷ்ணா பிக்சர்ஸ் விருந்து. படத்தின் டைரக்டர் யோகானந்தம் பரமசாது. சிரித்துப் பேசுவார். மறுத்துப் பேச மாட்டார். மனம் போல எழுதினேன். அனைத்தையும் ஏற்றுக் கொண்டார்.
எனக்கு மது மீது ஆசை அதிகம் வந்தது இந்தக் காலங்களில்தான். யோகானந்தத்திற்கு இந்தப் பழக்கம் கிடையாது. அவரிடம் வசனம் எழுதுவது சுலபம். நல்ல திறமையை என்றும் மதிப்பார்.
ஒரு நாள் கவிஞர் இருக்கிறாரா என்ற குரல் கேட்டது. மாலை மணி நான்கு. நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தேன். உள்ளே வந்து எழுப்பிவிட்டார். நான்தான் சுந்தர ராவ் நட்கர்னி என்றார். அது பிரமாதம், இது பிரமாதம் என்று என்னைப் புகழ்ந்தார். ஒரு சின்னத் தொகை என்று ரூ. 250க்கு செக் கொடுத்தார்.
மராட்டியில் புண்ணியப் பிரவாகம் என்றொரு நாடகம். கணேஷ்ராம் காட்கரி எழுதியது. புனாவில் 52 வாரங்கள் ஓடிற்று. அதைத் தமிழில் எடுக்கிறேன். நீங்கள் தான் எழுத வேண்டும் என்றார்.
மராட்டிப் பிரதியை கா.ஸ்ரீ.ஸ்ரீ.யிடம் கொடுத்து மொழிபெயர்க்கச் சொன்னேன். மகாதேவி என்று தலைப்புத் தந்தேன். ஆசையோடு எழுதினேன். அதைத் குறைக்காமல் மாற்றாமல் படம் எடுத்தார் நட்கர்னி. அது இன்னும் ஓடிக் கொண்டிருக்கிறது.
லாயிட்ஸ் ரோடில் எம்.ஜி.ஆர். வீடு. கருப்பாக குட்டையாக அங்கே வந்தது ஒரு உருவம். இவர்தான் எம். நடேசன் என்று அறிமுகப்படுத்தி வைத்தார். அவரைப் பார்த்தவுடனேயே எனக்கு மிகவும் பிடித்து விட்டது.
- தொடரும்
(ஒவ்வொரு புதன்கிழமையும் வெளிவரும்)
The peace of mind with a salary of 125 rupees is missing today: A series of articles by poet Kannadasan
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.