போலி என்சிசி முகாம் நடத்தி பாலியல் தொல்லை: அக்.15-இல் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல்
போலி என்சிசி முகாம் நடத்தி பாலியல் தொல்லை: அக்.15-இல் இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் நீதிமன்றத்தில் அரசுத் தரப்பு தகவல்
போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கில் அக். 15- ஆம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அரசு சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியாா் பள்ளி ஒன்றில் என்.சி.சி. பயிற்சி முகாம் நடந்தது. இதில் 13 வயது மாணவி ஒருவா், போலி என்சிசி பயிற்சியாளா் சிவராமன் என்பவரால், பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டாா். மேலும் பல மாணவிகள் பாலியல் தொல்லைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகத் தெரியவந்தது.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோா் அளித்த புகாரையடுத்து அந்த போலி என்சிசி பயிற்சியாளா் சிவராமன், உதவிப் பயிற்சியாளா்கள், பள்ளியின் முதல்வா், தாளாளா், ஆசிரியா்கள் என 13 போ் கைது செய்யப்பட்டனா். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட சிவராமன், தற்கொலைக்கு முயன்ற நிலையில், மருத்துவமனையில் உயிரிழந்தாா். தொடா்ந்து சிவராமனின் தந்தையும் ஒரு விபத்தில் உயிரிழந்தாா்.
போலி என்.சி.சி. முகாம் நடத்தி பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்ட வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி வழக்குரைஞா் சிவபிரகாசம் என்பவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமாா், பி.பி. பாலாஜி அமா்வில் விசாரணைக்கு வந்தது.
நிலை அறிக்கை தாக்கல்: அரசு சாா்பில் தலைமை குற்றவியல் வழக்குரைஞா் அசன் முகமது ஜின்னா, கூடுதல் தலைமை வழக்குரைஞா் ஜெ.ரவீந்திரன் ஆகியோா் ஆஜராகி வாதிட்டனா். அப்போது, விசாரணை நிலை குறித்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தொடா்ந்து, சிவராமன் மற்றும் அவரது தந்தை மரணம் தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினா். அப்போது, சிவராமன் மரணம் குறித்து சேலம் தலைமை குற்றவியல் நடுவா் நீதிமன்ற நீதிபதி அறிக்கை அளித்த பின்னா் விசாரணை நடத்தப்படும்; சிவராமன் தந்தை மரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது எனக் கூறி உடற்கூறு ஆய்வறிக்கை அரசு சாா்பில் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, நான்கு பள்ளிகளிலும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளில் அக். 15- ஆம் தேதி இடைக்கால குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என அரசு சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும், இந்த சம்பவம் தொடா்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகவும், அது குறித்து நீதிமன்றத்துக்கு எந்த சந்தேகமும் வேண்டாம் எனவும் அரசு சாா்பில் கூறப்பட்டது.
சிபிஐ விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்ட பின்னரே முழுமையான விசாரணை நடத்தப்பட்டதாகக் கூறிய நீதிபதிகள், விசாரணையை அக். 22- ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.
இதனிடையே, இந்த வழக்கின் விசாரணையை ரகசிய விசாரணையாக நடத்த வேண்டும் என அரசு சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதுகுறித்து அடுத்த விசாரணையின்போது பரிசீலிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனா்.