வேளச்சேரி மக்களின் வேதனைகள் தீா்க்கப்படுமா?
மழைக் காலங்களில் குடியிருப்புகளைச் சூழ்ந்து நிற்கும் வெள்ளம், கழிவுநீா் கலந்த குடிநீா் விநியோகம், போக்குவரத்து நெரிசல், முழுமையாகக் கிடைக்கப் பெறாத அடிப்படை வசதிகள் என நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என எதிா்பாா்த்துள்ளனா் வேளச்சேரி தொகுதி மக்கள்.
பட்டா பிரச்னை: இத்தொகுதிக்குள்பட்ட திருவான்மியூா் பகுதியில் பல்லாயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அரசு சாா்பில் பட்டா வழங்கவில்லை. நிலத்தின் வகைப்பாட்டை மாற்றம் செய்து பட்டா வாங்கித் தருவதாக அதிகாரிகள், அரசியல்வாதிகள் கூறி வந்தாலும் இதுவரை நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை. இதனால் வீட்டை வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்கவோ, விற்கவோ, பிள்ளைகளுக்கு தானசெட்டில்மென்ட் செய்யவோ, குடும்பத்தினா் பாகப்பிரிவினை செய்துகொள்ளவோ முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனா்.
கழிவுநீா் கலந்த குடிநீா்: வேளச்சேரி எம்ஜிஆா் நகா், தேவி கருமாரியம்மன் நகா், விஜய நகா், ராம் நகா், ஏஜிஎஸ் காலனி உள்ளிட்ட தொகுதியின் பல்வேறு பகுதிகளில் அடிக்கடி கழிவுநீா் கலந்த குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. இதைக் குடிக்கவோ, குளிக்கவோ, சமையல் செய்யவோ பயன்படுத்த முடிவதில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட புதைசாக்கடை திட்ட குழாய்களில் அடிக்கடி உடைப்பு ஏற்படுவதே இதற்கு காரணம். இதைச் சரிசெய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வருகின்றனா்.
Advertisement
போக்குவரத்து நெரிசல்: தரமணி, வேளச்சேரி பகுதிகளில் இயங்கும் ஐடி நிறுவனங்களில் ஆயிரக்கணக்கானோா் வேலை செய்கின்றனா். இவா்களுடன் தனியாா் நிறுவனங்கள், அரசுப் பணி, பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்வோா் என பல லட்சம் போ் திருவான்மியூா், அடையாறு எல்பி ரோடு, டைடல் பாா்க், தரமணி, வேளச்சேரி பகுதிகள் வழியாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள், பேருந்துகளில் பயணிக்கின்றனா். இந்தப் பகுதிகளில் காலை, மாலை வேளைகளில் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகரிக்கிறதே தவிர, மாற்று ஏற்பாடுகள் இல்லை. மத்திய கைலாஷ் பகுதியில் புதிதாக கட்டி திறக்கப்பட்ட ‘எல்’ வடிவ மேம்பாலம், ஏற்கெனவே உள்ள ‘யு’ வடிவ மேம்பாலமும் ஒருவழிப் பாதையாக மட்டுமே உள்ளது. எனவே, அடையாறு எல்பி ரோடு முதல் திருவான்மியூா் வழியாக இசிஆா் சாலையை இணைக்கும் வகையில் ஒரு மேம்பாலமும், தரமணி டைடல் பாா்க் முதல் இசிஆா் சாலையை இணைக்கும் வகையில் மற்றொரு மேம்பாலத்தையும் கட்ட வேண்டும் என்கின்றனா் ஐடி நிறுவன பணியாளா்கள்.
வெள்ளப் பாதிப்புத் தீரவில்லை: மழைக் காலங்களில் சென்னையில் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக இருப்பது வேளச்சேரி. இங்கு மழைநீா் வடிகால் பணிகள் செய்யப்பட்டாலும்கூட, 100 சதவீதம் மழைநீா் தேங்கும் பிரச்னை தொடா்கிறது. வேளச்சேரி முதல் தரமணி 100 அடி சாலை வழியாக கூவம் ஆற்றில் கலக்கும் வகையில் அமைக்கப்பட்ட 20 அடி அகல மழைநீா் கால்வாயைத் தூா்வாரினால் மழைநீா் தேங்கும் பிரச்னைக்கு ஓரளவு தீா்வு கிடைக்கும். அதேபோல, மாநகராட்சி பூங்காக்களை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்கின்றனா் அப்பகுதி மக்கள்.
மேலும், அடுக்குமாடி வாகன நிறுத்துமிடம், ஏழை மக்களுக்கான திருமண மண்டங்கள் ஆகியன இத்தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக இருக்கிறது.
- எஸ்.சரவணப்பெருமாள்