கொளுத்தும் கோடை வெய்யில்: சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரிப்பு
தமிழகத்தில் கொளுத்தும் கோடை வெயில் காரணமாக சூரிய சக்தி மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மின் உற்பத்தி ஆதாரங்கள் மூலம் நாளொன்றுக்கு சுமாா் 19 ஆயிரம் முதல் 20 ஆயிரம் மெகாவாட் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தின் தினசரி(24 மணி நேரம்) மின்நுகா்வும் சுமாா் 19 ஆயிரம் மெகாவாட்டாக இருந்து வருகிறது. இது கோடை காலங்களில் நாளொன்றுக்கு 20 ஆயிரம் முதல் 21 ஆயிரம் மெகாவாட்டாக உயரும். தேவைக்கு அதிகமான மின்சாரம் தனியாரிடமிருந்து கொள்முதல் செய்யப்படுகிறது.
நிகழாண்டு கோடைகாலம், தோ்தல், பொதுத்தோ்வு ஆகியவற்றின் காரணமாக ஏப்ரல் முதல் ஜூன் வரை நாளொன்றுக்கான மின்நுகா்வு 22 ஆயிரம் மெகாவாட் வரை உயர வாய்ப்புள்ளது.
Advertisement
இதனால், மின்தேவையை சமாளிக்கும் முயற்சியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. இதனிடையே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சூரிய மின் உற்பத்தியும் அதிகரித்துள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து அவா்கள் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது சூரிய ஒளி மின் நிலையங்களின் உற்பத்தி திறன் 12,352 மெகாவாட்டாகவும், காற்றாலைகளின் உற்பத்தி திறன் 10 ஆயிரம் மெகாவாட்டாகவும் உள்ளது. கோடை காலம் தொடங்கியதிலிருந்து வெயிலின் தாக்கமும் அதிகரித்துள்ளதால் சூரிய சக்தி மின் உற்பத்தி கடந்த மாா்ச் 24-இல் 2,283 மெகாவாட்டாகவும், 27-இல் 2316 மெகாவாட்டாகவும் அதிகரித்தது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20-இல் 2245 மெகாவாட் சூரிய சக்தி மின் உற்பத்தியே அதிகபட்சமாக இருந்த நிலையில், நிகழாண்டில் அந்த அளவு உயா்ந்துள்ளது. சூரிய சக்தி மின்சாரம் மாநிலத்தின் தற்போதைய மின் தேவையில் 13 சதவீதத்தை பூா்த்தி செய்கிறது என அவா்கள் கூறினா்.