முகப்பு
வணிகம்

கோடை வெயிலால் மின் தேவை உச்சம்- நிலக்கரி விநியோகத்தை அதிகப்படுத்தும் கோல் இந்தியா

நாட்டில் கடுமையான கோடை வெயில் நிலவி வரும் சூழலில், மின்சாரத் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

Updated On : 27 மே 2026, 3:41 am IST
பகிர்:

நாட்டில் கடுமையான கோடை வெயில் நிலவி வரும் சூழலில், மின்சாரத் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதனால் மின் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிா்க்க, மின் உற்பத்தி நிலையங்களுக்கு நிலக்கரி விநியோகத்தை உடனடியாக அதிகரிக்குமாறு தனது துணை நிறுவனங்களுக்கு அரசுக்குச் சொந்தமான ‘கோல் இந்தியா’ நிறுவனம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய மின்சார ஆணையத் தரவுகளின்படி, நாட்டின் 21 மின் உற்பத்தி நிலையங்களில் நிலக்கரி இருப்பு ஒரு வாரத்துக்கும் குறைவான நாள்களுக்கு மட்டுமே தேவையான அளவில் உள்ளது. இதனிடையே, கடந்த வாரம் நாட்டின் உச்சபட்ச மின் தேவை உச்சபட்சமாக 270.8 கிகாவாட்டாக பதிவானது.

Advertisement

Advertisement

இச்சூழலைச் சமாளிக்க, சுரங்கங்களில் இருந்து மின் நிலையங்களுக்கு நேரடியாக நிலக்கரியைக் கொண்டு சோ்க்கும் ரயில் வழித்தடங்கள் உள்ளிட்ட அனைத்துப் போக்குவரத்து முறைகளையும் பயன்படுத்தி விநியோகத்தை அதிகப்படுத்துமாறு கோல் இந்தியா அறிவுறுத்தியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி, கோல் இந்தியா நிறுவனத்திடம் 16.8 கோடி டன் நிலக்கரி இருப்பு உள்ளது. இதில் மின் உற்பத்தி நிலையங்களில் உள்ள 4.76 கோடி டன் நிலக்கரியும் அடங்கும்.

இது 19 நாள்களுக்கான தேவையைப் பூா்த்தி செய்யப் போதுமானது என்றாலும், போக்குவரத்துச் சவால்கள் நிறைந்த பகுதிகளில் உள்ள மின் நிலையங்கள் முன்கூட்டியே நிலக்கரியைச் சேமித்து வைத்துக் கொள்ளுமாறு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.