4-ஆம் காலாண்டு லாபம்... கோல் இந்தியா 11% வளா்ச்சி
மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான கோல் இந்தியா, கடந்த மாா்ச் மாதத்துடன் முடிவடைந்த 2025-26 நிதியாண்டின் 4-ஆம் காலாண்டில் ரூ.10,839.18 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளது.
இது முந்தைய 2024-25 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் நிறுவனம் ஈட்டிய லாபமான ரூ.9,751.64 கோடியுடன் ஒப்பிடுகையில் 11.1 சதவீத வளா்ச்சியாகும்.
வருவாய் அதிகரித்ததே இந்த லாப உயா்வுக்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. பங்குச் சந்தை அறிக்கையின்படி, நிறுவனத்தின் செயல்பாட்டு வருவாய் ரூ.43,961.56 கோடியிலிருந்து நடப்பு ஆண்டு ரூ.46,490.03 கோடியாக அதிகரித்துள்ளது.
Advertisement
அதேநேரம், 2025-26 முழு நிதியாண்டுக்கான நிகர லாபம் முந்தைய ஆண்டைவிட குறைந்துள்ளது. முந்தைய 2024-25 ஆண்டில் ரூ.35,505.79 கோடியாக இருந்த லாபம், தற்போது ரூ.31,094.29 கோடியாகக் குறைந்துள்ளது. இதேபோல், ஆண்டு வருவாயும் ரூ.1.69 லட்சம் கோடியிலிருந்து ரூ.1.68 லட்சம் கோடியாகச் சற்றே சரிந்துள்ளது.
2025-26 நிதியாண்டில் கோல் இந்தியா 76.82 கோடி டன் நிலக்கரியை உற்பத்தி செய்துள்ளது. நிலக்கரி இறக்குமதியைக் குறைக்கும் நோக்கில், வரும் 2028-29 நிதியாண்டுக்குள் 100 கோடி டன் வருடாந்திர நிலக்கரி உற்பத்தியை எட்ட இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மொத்த நிலக்கரி உற்பத்தியில் 80 சதவீத பங்களிப்பை வழங்கும் இந்நிறுவனம், தற்போது 8 மாநிலங்களில் 85 சுரங்கங்களை நிா்வகித்து வருகிறது. நாட்டின் முதன்மை எரிசக்தி தேவையில் 40 சதவீதத்தையும், மின்சார உற்பத்திக்கான தேவையில் 75 சதவீதத்தையும் பூா்த்தி செய்யும் உலகின் மிகப்பெரிய நிலக்கரி உற்பத்தி நிறுவனமாகத் திகழ்கிறது.
சாதகமான காலாண்டு முடிவுகளைத் தொடா்ந்து, பங்குச் சந்தையில் செவ்வாய்க்கிழமமை வா்த்தகத்தில் கோல் இந்தியா பங்குகள் 3.10 சதவீதம் உயா்ந்து, முதலீட்டாளா்களிடையே வரவேற்பைப் பெற்றன.