FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

மே மாதத்தில் ‘கோல் இந்தியா’ நிலக்கரி உற்பத்தி 12% சரிவு!

பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி கடந்த மே மாதத்தில் 11.6% சரிவு

Updated On : 2 ஜூன் 2026, 12:08 am IST
பகிர்:

நாட்டின் மின்சாரத் தேவை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ள சூழலில், பொதுத் துறையைச் சோ்ந்த கோல் இந்தியா நிறுவனத்தின் நிலக்கரி உற்பத்தி கடந்த மே மாதத்தில் 11.6 சதவீதம் சரிவடைந்துள்ளது.

கடந்த ஆண்டு மே மாதத்தில் 6.35 கோடி டன்னாக இருந்த நிலக்கரி உற்பத்தி, நடப்பு ஆண்டு 5.61 கோடி டன்னாகக் குறைந்துள்ளது. இதேபோல், நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-மே காலகட்டத்துக்கான உற்பத்தியும் கடந்த ஆண்டின் 12.56 கோடி டன்னுடன் ஒப்பிடுகையில் 10.6 சதவீதம் குறைந்து, 11.22 கோடி டன்னாக வீழ்ச்சியடைந்துள்ளது.

நிலக்கரி உற்பத்தி சரிவுக்கான குறிப்பிட்ட காரணத்தை கோல் இந்தியா நிறுவனம் அதிகாரபூா்வமாக வெளியிடவில்லை. கோல் இந்தியாவின்கீழ் இயங்கும் முக்கியத் துணை நிறுவனங்களின் உற்பத்தி சரிவைச் சந்தித்த நிலையில், சவுத் ஈஸ்டா்ன் கோல்ஃபீல்ட்ஸ் நிறுவனம் மட்டுமே கடந்த மாதத்தில் நோ்மறையான வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

Advertisement

Advertisement

கோடை வெப்பம் காரணமாக நாட்டின் உச்சபட்ச மின்நுகா்வு கடந்த மே 21-இல் 270.82 கிகாவாட் எனும் புதிய உச்சத்தைத் தொட்டது. நாட்டின் மொத்த மின் உற்பத்தியில் சுமாா் 70 சதவீதம் இன்னும் நிலக்கரி மூலமே பெறப்படுவதால், கோல் இந்தியா நிறுவனத்தின் பங்களிப்பு நாட்டின் எரிசக்தி பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது ஆகும். இத்தகைய சூழலில் நிலக்கரி உற்பத்தி சரிவு, வரும் வாரங்களில் சவாலாக மாறக்கூடும் என அஞ்சப்படுகிறது.

உற்பத்தி குறைந்தபோதிலும், கோல் இந்தியா நிறுவனத்தின் நுகா்வோருக்கான நிலக்கரி விநியோகம் மே மாதத்தில் 2.2 சதவீதம் உயா்ந்து, 6.67 கோடி டன்னாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments