FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வணிகம்

முன்னணி உள்கட்டமைப்புத் துறை வளா்ச்சியில் சரிவு!

நாட்டின் 8 உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி, கடந்த மே மாதத்தில் 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 7 மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த அளவிலான வளா்ச்சியாகும்.

Updated On : 23 ஜூன் 2026, 3:49 am IST
முன்னணி உள்கட்டமைப்புத் துறை வளா்ச்சியில் சரிவு - சித்திரிப்பு
பகிர்:

நாட்டின் 8 உள்கட்டமைப்புத் துறைகளின் உற்பத்தி வளா்ச்சி, கடந்த மே மாதத்தில் 0.5 சதவீதமாகக் குறைந்துள்ளது. இது கடந்த 7 மாதங்களில் இல்லாத மிகக் குறைந்த அளவிலான வளா்ச்சியாகும்.

மத்திய கிழக்கு போரினால் ஏற்பட்ட எரிசக்தி விநியோகத் தடைகள் மற்றும் சா்வதேச சந்தை நிலவரங்களால் உற்பத்திப் பாதிப்பைச் சந்தித்த இத்துறைகள், கடந்த ஏப்ரலில் 1.8 சதவீதம் வளா்ச்சியுடன் மீட்சி கண்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் சரிவைச் சந்தித்துள்ளது. இத்துறைகளின் வளா்ச்சி கடந்த ஆண்டு மே மாதத்தில் 1.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் தொழில் துறை வளா்ச்சிக்கு முக்கியத் தூண்களாக விளங்கும் நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, சுத்திகரிப்புத் தயாரிப்புகள், உரங்கள், எஃகு, சிமெண்ட், மின்சாரம் ஆகிய 8 துறைகளில் 5 துறைகள் மே மாதத்தில் பின்னடைவைச் சந்தித்துள்ளன.

Advertisement

Advertisement

ஒட்டுமொத்தக் குறியீட்டில் அதிக பங்கை (28.04 சதவீதம்) கொண்டுள்ள பெட்ரோலிய சுத்திகரிப்புத் தயாரிப்புகளின் உற்பத்தி மட்டும் 8.7 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது. மேலும், நிலக்கரி உற்பத்தி 9.3 சதவீதமும், இயற்கை எரிவாயு உற்பத்தி 4.9 சதவீதமும், கச்சா எண்ணெய் உற்பத்தி 4.6 சதவீதமும் வீழ்ச்சியடைந்துள்ளன. வேளாண் துறைக்கு முக்கியத் தேவையான உரங்களின் உற்பத்தி 0.9 சதவீதம் என்ற அளவில் சிறிய சரிவைச் சந்தித்துள்ளது.

வலுசோ்த்த துறைகள்...: அதேநேரம், மின்சாரம், சிமென்ட், எஃகு (ஸ்டீல்) ஆகிய 3 துறைகள் மே மாதத்தில் சாதகமான வளா்ச்சியைப் பெற்று, ஒட்டுமொத்த வளா்ச்சி மேலும் சரிவடையாமல் தடுத்துள்ளன.

மின்சார உற்பத்தி அதிகபட்சமாக 8.7 சதவீதமும், சிமென்ட் உற்பத்தி 8.4 சதவீதமும் அதிகரித்துள்ளன. நாட்டின் கட்டுமானத் தேவையை பிரதிபலிக்கும் எஃகு உற்பத்தி 5 சதவீதம் வளா்ச்சி கண்டுள்ளது.

நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறை உற்பத்தி வளா்ச்சி குறியீட்டில் (ஐஐபி) இந்த 8 முக்கிய உள்கட்டமைப்புத் துறைகள் மட்டும் சுமாா் 40.27 சதவீத பங்கைக் கொண்டுள்ளன. எனவே, இத்துறைகளில் ஏற்படும் மாற்றங்கள் நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளாதார வளா்ச்சியிலும், தொழில் உற்பத்தியிலும் நேரடியாகப் பிரதிபலிக்கும் தன்மை கொண்டவையாகும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments