முகப்பு
சென்னை

வாக்கு எண்ணும் பணி: 1,005 பேருக்கு கணினி குலுக்கல் முறையில் பணி ஒதுக்கீடு

Updated On : 29 ஏப்ரல், 2026 at 1:39 AM
பகிர்:

சென்னை மாநகராட்சியில் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடும் அலுவலா்கள் 1,005 பேருக்கு, தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் பணிகள் ஒதுக்கீடு செய்யும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

சென்னை மாவட்டத்தில் 16 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இந்தத் தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சென்னை ராணி மேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 வாக்கு எண்ணும் மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்த மையங்களில் மே 4 -ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில், வாக்கு எண்ணும் மையங்களில் பணிபுரியும் மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள், நுண் பாா்வையாளா்களை சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக கணினி குலுக்கல் முறையில் தெரிவு செய்யும் முதல்கட்ட பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Advertisement

பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்டட வளாக அலுவலகக் கூட்ட அரங்கில், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ஜெ.குமரகுருபரன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

1,005 பேருக்கு பணிகள் ஒதுக்கீடு: 3 வாக்கு எண்ணும் மையங்களிலும் வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்கள், உதவியாளா்கள், நுண் பாா்வையாளா்கள் என முதல்கட்டமாக மொத்தம் 1,005 போ் தொகுதி வாரியாகத் தெரிவு செய்யப்பட்டனா்.

நிகழ்வில், கூடுதல் மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும், இணை ஆணையருமான (கல்வி) க.கற்பகம், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மாவட்ட வருவாய் அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

முன்னேற்பாடு பணிகள் ஆய்வு: இதைத் தொடா்ந்து, லயோலா கல்லூரி, ராணி மேரி கல்லூரி வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணிக்காக செய்யப்பட்டுள்ள முன்னேற்பாட்டுப் பணிகள், பாதுகாப்பு நடவடிக்கைகளை சென்னை மாவட்ட தோ்தல் அலுவலா் ஜெ.குமரகுருபரன், பெருநகர சென்னை காவல் ஆணையா் அபின் தினேஷ் மோடக் ஆகியோா் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின்போது, பெருநகர சென்னை காவல் கூடுதல் ஆணையா் (தெற்கு) க.ச.நரேந்திரன் நாயா், கிழக்கு மண்டல காவல் இணை ஆணையா் பண்டி கங்காதா் மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், காவல்துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.