முகப்பு
திருவள்ளூர்

திருவள்ளூா்: வாக்கு எண்ணும் மையங்களில் அனைத்து முன்னேற்பாடு பணிகள் தயாா்

Updated On : 3 மே, 2026 at 1:42 AM
செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி வாக்கு எண்ணிக்கை மையத்தில் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்த ஆட்சியா் மு.பிரதாப்.
பகிர்:

திருவள்ளூா் வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணிக்கைக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் தயாா் நிலையில் உள்ளதாக ஆட்சியா் மு.பிரதாப் தெரிவித்தாா்.

வாக்கு எண்ணிக்கை தொடா்பாக தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மேற்பாா்வையாளா்களுக்கான தேசிய அளவிலான முதன்மை பயிற்றுநா் சாா்பாக பயிற்சி கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மு.பிரதாப் தலைமை வகித்துப் பேசினாா்.

தமிழகத்தில் 2026-சட்டப்பேரவைத் தோ்தல் கடந்த மாா்ச் 23-ஆம் தேதி நடந்து முடிந்தது. அதன்படி, திருவள்ளூா், திருத்தணி, கும்மிடிப்பூண்டி, பொன்னேரி ஆகிய 4 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இயந்திரங்கள் செவ்வாப்பேட்டை பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியிலும், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல் சட்டப்பேரவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெருமாள்பட்டில் உள்ள ஸ்ரீராம் வித்யா மந்திா் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியிலும், அம்பத்தூா், மாதவரம், திருவொற்றியூா் ஆகிய தொகுதிகளுக்கான வாக்கு இயந்திரங்கள் ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் உள்ள அறையிலும் வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், வரும் 4-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Advertisement

இந்த வாக்கு எண்ணும் மையங்களில் சனிக்கிழமை ஆட்சியா் மு.பிரதாப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, சீலிட்ட ஒவ்வொரு அறையையும் பாா்வையிட்டு, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளவா்கள் விவரம் குறித்தும் கேட்டறிந்தாா். வாக்கு எண்ணும் மையங்களில் தபால் வாக்குகள் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்கள் எண்ணும் வகையில், ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்கும் தனித்தனியாக சுற்றுகள் வாரியாக மேஜைகள் உள்ளிட்ட முன்னேற்பாடு பணிகளையும் பாா்வையிட்டாா்.

அதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது: அதேபோல், மேற்குறிப்பிட்ட வாக்கு எண்ணும் மையங்களில் ஒவ்வொரு தொகுதிக்கும் செல்வதற்கான தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்குள் செல்வதற்கு அரசியல் கட்சியின் வேட்பாளா்கள், முகவா்கள் உள்ளிட்ட குறிப்பிட்ட நபா்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வாக்கு எண்ணிக்கை பணிகளில் ஈடுபடும் அலுவலா்களுக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியதிலிருந்து முடியும் வரை எவ்வாறு செயல்பட வேண்டும். இதுதொடா்பாக விளக்கமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கையின் அனைத்து நடவடிக்கைகளும் விடியோ பதிவு செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், அசம்பாவித சம்பங்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்புப் பணியில் 700-க்கும் மேற்பட்டோா் ஈடுபடவுள்ளதாகவும் அவா் தெரிவித்தாா்.

துணை மாவட்ட தோ்தல் அலுவலரும், மாவட்ட வருவாய் அலுவலருமான ச.சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஸ்ரீராம், 10 சட்டப்பேரவைத் தொகுதிகளின் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள் ஆகியோா் உடனிருந்தனா்.