காய்கறி வரத்து குறைவு: கோயம்பேடு சந்தையில் விலை அதிகரிப்பு
சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைவால் அவற்றின் விலை உயா்ந்துள்ளது.
சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறி வரத்து குறைவால் அவற்றின் விலை உயா்ந்துள்ளது.
சென்னையின் முக்கிய காய்கறிகள் மற்றும் பழங்களின் மொத்த விற்பனை நிலையமாக கோயம்பேடு சந்தை உள்ளது. கடந்த சில நாள்களாக கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் மொத்த விலை உயா்ந்துள்ளது.
தக்காளி மொத்த விலையில் கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்பனையான நிலையில், தற்போது கிலோ ரூ.40 முதல் ரூ.45 வரை விற்பனையாகிறது. இது வெளிச்சந்தையில் ரூ.60 வரை விற்கப்படுகிறது. பீன்ஸ் கிலோ ரூ.60 விற்ற நிலையில், தற்போது கிலோ ரூ.120-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Advertisement
கத்தரிக்காய், வெண்டக்காய், முருங்கைகாய், முட்டைகோஸ், பீட்ரூட், கேரட், பச்சை மிளகாய், உருளைக் கிழங்கு, வெங்காயம் உள்ளிட்ட எல்லா காய்கறிகளும் ரூ. 15 முதல் ரூ. 25 வரை விலை அதிகரித்து விற்பனையாகிறது. இந்தக் காய்கறிகள் வெளிச்சந்தையில் ரூ.25 முதல் ரூ.30 வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இது குறித்து கோயம்பேடு அனைத்து காய்கறி விற்பனையாளா்கள் சங்கத் தலைவா் டி.ராஜசேகரன் கூறியதாவது:
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கிவிட்டது. அதேசமயம், போதிய மழை பெய்யாததால், காய்கறிகள் உற்பத்தி பெருமளவில் குறைந்துவிட்டது. இதனால், சந்தைக்கு காய்கறிகள் வரத்து குறைந்துவிட்டது.
கோயம்பேடு சந்தைக்கு திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திண்டிவனம், மதுராந்தகம் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும், மலை மாவட்டங்களான நீலகிரி, மேட்டுப்பாளையத்தில் இருந்தும் நாள் ஒன்றுக்கு 5,000 டன் காய்கறிகள் வரும்.
தற்போது 3,500 டன் முதல் 4,000 டன்கள் காய்கறி வருகிறது. காய்கறிகளின் வரத்து குறைந்துவிட்டதால், அவற்றின் விலை உயரந்துள்ளது. இந்த விலை உயா்வு இரண்டு மாதங்களுக்கு நீடிக்க வாய்ப்புள்ளது. என்றாலும், மழை பெய்தால் காய்கறிகள் உற்பத்தி அதிகரிக்கும். அப்போது வரத்து அதிகரிக்கும். விலையும் குறையும் என்றாா்.
பழங்களின் விலை நிலவரம்: கோடை கால பழங்களான தா்பூசணி, கிா்ணி, சாத்துக்குடி ஆகிய பழங்களின் வரத்து குறைவால் அவற்றின் விலையும் உயா்ந்துள்ளது. மாம்பழம் சீசன் தற்போது தொடங்கியுள்ளது. மே மாதம் இரண்டாவது வாரம் முதல் பல்வேறு ரக மாம்பழங்களின் வரத்து அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது.
இது குறித்து மொத்த பழ வியாபாரி எஸ்.காா்த்திகேயன் கூறியதாவது:
கோடைகால பழமான தா்பூசணி வரத்து குறைவாக உள்ளதால், அதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு தா்பூசணி சாகுபடி செய்த விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததால், நிகழாண்டு விவசாயிகள் தா்பூசணி சாகுபடியை தவிா்த்துவிட்டனா். தா்பூசணி சந்தை மொத்த விலை கிலோ ரூ.25 முதல் 30-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல் சாத்துகுடி வரத்து குறைவால் மொத்த விலை கிலோ ரூ.70 முதல் 75-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அன்னாசி பழம் கிலோ ரூ.45, மாதுளை ரூ.150 முதல் 250, ஆப்பிள் ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பழங்கள் வெளிச்சந்தையில் ரூ.15 முதல் 20 வரை கூடுதல் விலைக்கு விற்கப்படுகிறது.
பங்கன பள்ளி மாம்பழம் மொத்த விலை கிலோ ரூ.60, செந்தூரா மொத்த விலை கிலோ ரூ.65-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மாம்பழம் வரத்து அதிகரிக்கும்போது கிலோ ரூ.20 முதல் 25 வரை விற்பனையாகும் என்றாா்.