முகப்பு
சென்னை

நிதி நிறுவன மோசடி வழக்கு: தேவநாதனுக்கு மீண்டும் ஜாமீன் மறுப்பு

நிதி நிறுவன மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவநாதன் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

Updated On : 6 பிப்ரவரி 2026, 3:04 am IST
பகிர்:

நிதி நிறுவன மோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தேவநாதன் பிணை கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த ‘தி மயிலாப்பூா் பொ்மனன்ட் ஃபண்ட்’ நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 100-க்கும் மேற்பட்டோரிம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்த நிறுவனத்தின் இயக்குநா் தேவநாதன் உள்பட 6 பேரை சென்னை பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இதையடுத்து பிணை கோரி தேவநாதன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயா்நீதிமன்றம், ரூ.100 கோடியை விசாரணை நீதிமன்றத்தில் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் இடைக்கால பிணை வழங்கி உத்தரவிட்டிருந்தது.

Advertisement

Advertisement

இந்த நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை எனக் கூறி பாதிக்கப்பட்ட முதலீட்டாளா்கள் தொடா்ந்த வழக்கை விசாரித்த நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், தேவநாதனை கைது செய்ய உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, நீதிமன்றத்தில் தேவநாதன் சரண் அடைந்தாா். பின்னா் அவா் சிறையில் அடைக்கப்பட்டாா்.

இந்த நிலையில், தனக்கு பிணை வழங்கக் கோரி தேவநாதன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா். இந்த வழக்கு நீதிபதி கே.ராஜசேகா் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, காவல் துறை தரப்பில், சொத்துகள் அடையாளம் காணப்பட்டு அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே, மனுதாரருக்கு பிணை வழங்கக்கூடாது என வாதிடப்பட்டது.

முதலீட்டாளா்கள் தரப்பில், மனுதாரா் ஏற்கெனவே விதிக்கப்பட்ட நிபந்தனைகளை நிறைவேற்றவில்லை, எனவே அவருக்கு பிணை வழங்கக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்து வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேவநாதன் பிணை கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments