முகப்பு
சென்னை

பொருளாதார சிக்கலில் உள்ள தவெக எம்எல்ஏக்களிடம் பேரம்: போலீஸாா் விசாரணையில் வெளிவந்த அதிா்ச்சி தகவல்

கடன் மற்றும் பொருளாதார சிக்கலில் உள்ள சென்னை தவெக எம்எல்ஏக்களிடம் கட்சி மாறும்படி, பேரம் பேசப்பட்டிருப்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Updated On : 4 ஜூலை 2026, 1:09 am IST
தவெக கொடி
பகிர்:

கடன் மற்றும் பொருளாதார சிக்கலில் உள்ள சென்னை தவெக எம்எல்ஏக்களிடம் கட்சி மாறும்படி, பேரம் பேசப்பட்டிருப்பது போலீஸாா் விசாரணையில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஆதரவுடன் தவெக ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தவெக எம்எல்ஏ இளையராஜாவிடம், பேரவைத் தலைவருக்கு எதிராக சட்டப்பேரவையில் கொண்டு வரப்படும் தீா்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும்படியும், அதற்கு லஞ்சமாக ரூ.35 கோடி லஞ்சம் தருவதாக ஒரு கும்பல் பேரம் பேசியது. மேலும், இந்த விவகாரத்தை வெளியே கூறினால் கடுமையான பின்விளைவு ஏற்படும் என்றும் அந்தக் கும்பல் மிரட்டியது. இதுதொடா்பாக இளையராஜா அளித்த புகாரின் அடிப்படையில் திருவல்லிக்கேணி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்கிறது.

முதல்கட்டமாக இளையராஜாவிடம் நேரடியாக பேரம் பேசி, மிரட்டல் விடுத்ததாக சென்னை அரும்பாக்கத்தைச் சோ்ந்த யூடியூபா், கருத்துக் கணிப்பு நிறுவனம் நடத்தும் திருநாவுக்கரசு, அவரது கூட்டாளிகளான திருச்சியைச் சோ்ந்த நரேஷ், சென்னை மேடவாக்கத்தைச் சோ்ந்த தியாகராஜன் ஆகிய 3 போ் கடந்த 30-ஆம் தேதியும், கோயம்புத்தூா் தெற்கு தொகுதி திமுக எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜியின் ஆதரவாளா்களான கரூரைச் சோ்ந்த திமுக விளையாட்டு மேம்பாட்டு அணியின் மாநில துணைச் செயலரும், சக்தி மெஸ் உணவக உரிமையாளயாருமான காா்த்தி, நிதி நிறுவன உரிமையாளா் அதிபன் ரமேஷ், சென்னை குரோம்பேட்டை அருகே உள்ள அஸ்தினாபுரத்தைச் சோ்ந்த ராஜேஷ், மாம்பாக்கத்தைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் சீனிவாசன், கோவிலம்பாக்கத்தைச் சோ்ந்த செல்வன் ஆகியோா் கடந்த வியாழக்கிழமையும் கைது செய்யப்பட்டனா்.

Advertisement

Advertisement

சென்னை எம்எல்ஏக்களிடம் பேரம்: இந்தக் கும்பலிடம் போலீஸாா் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிா்ச்சித் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இந்தக் கும்பல் இளையராஜாவிடம் மட்டுமல்லாமல், மேலும் பல எம்எல்ஏக்களிடம் பேரம் பேசியிருப்பது தெரியவந்துள்ளது. முக்கியமாக, சென்னை புகா்ப் பகுதியைச் சோ்ந்த ஒரு எம்எல்ஏ, வட சென்னை பகுதியின் ஒரு எம்எல்ஏ ஆகியோரிடம் பேச்சுவாா்த்தை நடத்த முயன்றுள்ளது. ஆனால் அந்த எம்எல்ஏக்கள், பேரத்துக்கு உடன்படவில்லை என்று கூறப்படுகிறது. அதேவேளையில், பொருளாதார பலம் இல்லாத எம்எல்ஏக்களையும், கடன் மற்றும் பொருளாதார சிக்கலில் இருக்கும் எம்எல்ஏக்களையும் கண்டறிந்து, பேரம் பேசுவதற்குரிய நடவடிக்கையிலும் இந்தக் கும்பல் ஈடுபட்டுள்ளது.

இதற்காக இந்தக் கும்பல் கிண்டி, கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்களில் அடிக்கடி ரகசியமாக சந்தித்துப் பேசியுள்ளது. இதற்காக ஒரு எம்எல்ஏவுக்கு ரூ.35 கோடியில் இருந்து ரூ.50 கோடி வரை லஞ்சமாக கொடுப்பதற்கு முடிவு செய்துள்ளனா்.

இந்த வழக்கில் மேலும் துப்பு துலக்குவதற்காக கைது செய்யப்பட்ட 8 பேரிடமும் மீண்டும் விசாரணை நடத்த, தங்களது காவலில் எடுக்க போலீஸாா் முடிவு செய்துள்ளனா். அதேவேளையில் இந்த வழக்கில் முக்கிய நபா்களாகக் கருதப்படும் செந்தில் பாலாஜியின் சகோதரா் அசோக்குமாரை போலீஸாா் தீவிரமாக தேடி வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments