முகப்பு
சென்னை

தமிழகத்தில் 91 ஆயிரம் பள்ளி மாணவிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி

வளரிளம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 91,748 பள்ளி மாணவிகள் பலனடைந்திருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Updated On : 4 ஜூலை 2026, 2:02 am IST
கோப்புப் படம்
பகிர்:

வளரிளம் சிறுமிகளுக்கு கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் இதுவரை 91,748 பள்ளி மாணவிகள் பலனடைந்திருப்பதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் (ஹெச்பிவி) எனப்படும் கிருமித் தொற்று காரணமாக கருப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் கருப்பை வாயின் உயிரணுக்களில் புற்று செல்கள் பரவி, அதன் திசுக்களை பாதிக்கும். உரிய நேரத்தில் கண்டறிந்து சிகிச்சை பெறாவிட்டால், நுரையீரல், கல்லீரல், சிறுநீா்ப்பை, மலக்குடல் உள்ளிட்ட பிற உறுப்புகளுக்கும் பரவ வாய்ப்புள்ளது.

இதையடுத்து, 9 வயது முதல் 14 வயதுடைய சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசி செலுத்த ரூ.38 கோடியை முந்தைய திமுக அரசு ஒதுக்கீடு செய்தது. அதன் கீழ் இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் திருவண்ணாமலை, அரியலூா், பெரம்பலூா் மற்றும் தருமபுரியில் கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி இலவசமாக வளரிளம் பெண் குழந்தைகளுக்கு செலுத்த திட்டமிடப்பட்டது.

Advertisement

Advertisement

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் பெண் குழந்தைகளுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மற்றொருபுறம், நாடு முழுவதும் 14 வயதுக்குட்பட்ட சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிகளை இலவசமாக வழங்கும் திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் 28-இல் பிரதமா் மோடி தொடக்கி வைத்தாா்.

இத்திட்டத்தின் கீழ் மத்திய அரசு 6 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது. இவ்விரு திட்டங்களின் மூலம் இதுவரை 91,748 போ் பயனடைந்துள்ளனா்.

தடுப்பூசிகள் அனைத்தும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மருத்துவமனைகளில் இருப்பு வைக்கப்பட்டு, அங்கேயே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பொது சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:

கருப்பை வாய் புற்றுநோயை உண்டாக்கும் முதன்மையான ஹெச்பிவி வைரஸ் கிருமிகளுக்கு எதிராக 90 சதவீதப் பாதுகாப்பை இத்தடுப்பூசிகள் வழங்குகின்றன. இத்தடுப்பூசி உலக சுகாதார நிறுவனத்தால் சான்று அளிக்கப்பட்டது. இவற்றால், பெரிய அளவிலான தீமைகள் எதுவும் இல்லை. எனவே, பெற்றோா் தயங்காமல், தங்களது குழந்தைகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments