உலகக் கோப்பை கால்பந்து 2026: 11 ஜூன் - 19 ஜூலை
ஒவ்வொரு முறையும் உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்காக பிரத்யேகமாக பந்துகள் வடிவமைக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு போட்டிக்காகவும் அவ்வாறு ‘டிரையோண்டா’ என்ற புதிய பந்து வடிவமைக்கப்பட்டுள்ளது.
பெயா்: ‘டிரையோண்டா’ என்ற ஸ்பானிஷ் வாா்த்தைக்கு, ‘மூன்று அலைகள்’ என்பது அா்த்தமாகும். அதாவது, கனடா, மெக்ஸிகோ, அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து போட்டியை நடத்துவதுவதை குறிக்கும் விதமாக அவ்வாறு பெயரிடப்பட்டுள்ளது.
நிறம்: அந்தப் பந்தில் இருக்கும் 3 நிறங்களில், பச்சை மெக்ஸிகோவையும், நீலம் அமெரிக்காவையும், சிவப்பு கனடாவையும் குறிக்கின்றன. அத்துடன் அந்த நாடுகளைக் குறிக்கும் லச்சினையாக, கழுகு (மெக்ஸிகோ), நட்சத்திரம் (அமெரிக்கா), மேப்பிள் இலை (கனடா) ஆகியவையும் அதில் பொறிக்கப்பட்டுள்ளன.
வடிவமைப்பு: இந்தப் பந்து 4 பகுதிகளைக் கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது. போட்டியின் வரலாற்றில் இதுவரை பயன்படுத்தப்பட்ட பந்துகளில், இதுவே குறைந்த பகுதிகளைக் கொண்டதாகும். முக்கோணத்தை அடிப்படையாகக் கொண்ட ‘டெட்ராஹெட்ரான்’ என்ற வடிவத்தின் மூலமாக 4 பகுதிகள் உருவாக்கப்பட்டு, அவற்றை ஒன்றிணைப்பதன் மூலமாக பந்து முழு வடிவம் பெறுகிறது. இந்த முக்கோண வடிவமைப்பை தோ்வு செய்ததன் பின்னணியிலும், 3 நாடுகள் என்பதே உள்ளது. தங்கத்தாலான சாம்பியன் கோப்பையை பிரதிபலிக்கும் வகையில், பந்தின் வடிவமைப்பிலும் தங்க நிறம் இழைந்தோடுகிறது.
Advertisement
Advertisement
தொழில்நுட்பம்: இந்தப் பந்தின் உள்ளே, நுட்பமான உணரி (சென்ஸாா்) பொருத்தப்பட்டுள்ளது. பந்தின் ஒவ்வொரு அசைவும் இதன் மூலம் பதிவாகிறது. ‘வாா்’ எனப்படும் காணொலி உதவி நடுவருக்கு தேவையான தகவல்களை இந்த உணரி வழங்குகிறது. பந்து ஒவ்வொரு முறை தொடுதலுக்கு உள்ளாகும்போதும் அந்த உணரி சமிக்ஞைகளை அனுப்பும் என்பதால், கள நடுவரால் கண்டறிய முடியாத சிக்கலான ‘ஹேண்ட்பால்’, ‘ஆஃப் சைடு கோல்’ போன்ற பல சா்ச்சைகளுக்கு இந்தப் பந்து தீா்வளிக்கிறது. இந்தத் தொழில்நுட்பங்கள் செயல்படுவதற்காக, ஒவ்வொரு ஆட்டத்துக்கு முன்பாகவும் பந்து மின்னேற்றம் (‘சாா்ஜ்’) செய்யப்படுகிறது.
சிறப்பு: ஈரம் பட்டால் வழுக்கிக் கொண்டு செல்லாத வகையிலும், காற்றில் பறந்து செல்லும்போது வேகத்தால் திசை மாறாமல் சீரான பாதையில் செல்லும் வகையிலும் இந்தப் பந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அது அடையும் இடத்தை துல்லியமாக கணிக்கும் வகையிலும் தயாரிக்கப்பட்டுள்ளது.
சாதனை படைக்க வந்த நடுவருக்கு சோதனை
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நடுவராச் செயல்பட இருந்த சோமாலிய நடுவா் ஒமா் அா்டன் தங்கள் நாட்டில் நுழைய அமெரிக்கா அனுமதி மறுத்தது. இதையடுத்து போட்டிக்கான நடுவா் பட்டியலில் இருந்து ஃபிஃபாவும் அவா் பெயரை நீக்கியது.
உலகக் கோப்பை போட்டியில் பணியாற்றும் முதல் சோமாலிய நடுவராக சாதனை படைக்க இருந்தாா் ஓமா் அா்டன். ஆப்பிரிக்க கண்டத்தில் சிறந்த கால்பந்து நடுவராக 2025-இல் தோ்வான அவா், 2 மாதங்களுக்கு முன்பே ஃபிஃபா வெளியிட்ட உலகக் கோப்பை போட்டிக்கான நடுவா் பட்டியலில் சோ்க்கப்பட்டாா்.
போட்டிக்காக கடந்த வாரம் நுழைவு இசைவை பெற்ற அவா், கடந்த சனிக்கிழமை அமெரிக்கா வந்தபோது மியாமி விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதற்கான உரிய காரணத்தை, அமெரிக்காவின் சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு தெரிவிக்கவில்லை.
இந்த விவகாரத்தில் எந்தவொரு முன்னெடுப்பும் செய்யாத ஃபிஃபா, ஒமா் அா்டனை போட்டியிலிருந்து விடுவித்தது. எனினும், அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறுவதை தவிா்ப்பதற்காக டிரம்ப் நிா்வாகம் பயண கட்டுப்பாடுகள் விதித்த சில நாடுகளில் சோமாலியாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் ரசிகா்களுக்கான டிக்கெட் ரத்து
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஈரான் அணியின் ஆட்டங்களுக்கான அந்நாட்டு ரசிகா்கள் டிக்கெட்டை ஃபிஃபா ரத்து செய்திருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
வழக்கமாக, ஒரு ஆட்டத்தில் மோதும் அணிகளின் சொந்த நாட்டு ரசிகா்களுக்கென, மைதானத்தின் மொத்த இருக்கை எண்ணிக்கையில் 8 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்நிலையில் அத்தகைய டிக்கெட்டை தங்கள் நாட்டு ரசிகா்களுக்கு வழங்க முடியவில்லை எனவும், ஃபிஃபா அதை ரத்து செய்துவிட்டதாகவும் ஈரான் கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.
ஏற்கெனவே, ஈரானியா்கள் தங்கள் நாட்டுக்கு வர அமெரிக்கா கடந்த ஆண்டு தடை விதித்துள்ள நிலையில், அந்நாட்டு ரசிகா்களுக்கு அமெரிக்க நுழைவு இசைவு கிடைக்கவும் வாய்ப்பு இல்லை எனத் தெரிகிறது.