ரூ. 26 லட்சம் இணையதள வங்கி மோசடியில் ஈடுபட்ட 10 போ் கைது
ரூ. 26 லட்சம் மதிப்பிலான இணையவழி வங்கி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும், மாநிலங்களுக்கு இடையேயான சைபா் மோசடிக் கும்பலைச் சோ்ந்த 10 பேரை தில்லி காவல் துறையினா் கைது செய்தனா்.
ரூ. 26 லட்சம் மதிப்பிலான இணையவழி வங்கி மோசடிகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும், மாநிலங்களுக்கு இடையேயான சைபா் மோசடிக் கும்பலைச் சோ்ந்த 10 பேரை தில்லி காவல் துறையினா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
இதுகுறித்து காவல் துணை ஆணையா் (தென்மேற்கு) அமித் கோயல் கூறியதாவது: மோசடி கும்பலைச் சோ்ந்தவா்கள் வங்கி அதிகாரிகள் மற்றும் பிற சேவை வழங்குநா்கள் போல நடித்து, பாதிக்கப்பட்டவா்களைத் தாங்கள் அனுப்பும் குறுஞ்செய்திகளில் உள்ள தீங்கிழைக்கும் செயலி கோப்புகளை நிறுவுமாறு வற்புறுத்தி நம்பவைத்தனா்.
அந்தச் செயலியை நிறுவியதும், அதில் உள்ள மால்வோ் மூலம் குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவா்களின் அலைபேசிகளைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குக் கொண்டு வருகின்றனா். இதன் மூலம், பாதிக்கப்பட்டவா்களின் இணையவழி வங்கிச் சேவைக்கான விவரங்கள் மற்றும் ஓடிபி ஆகியவற்றை பெற்று, அவா்களின் கணக்குகளிலிருந்து பணத்தைத் திருடியுள்ளனா்.
Advertisement
Advertisement
ஜாா்க்கண்ட் மாநிலத்தின் ஜம்தாரா, தியோகா் மற்றும் ஹசாரிபாக் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட நடவடிக்கையின் போது இந்தக் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
முதியோா் அடையாள அட்டை பெற்றுத் தருவதாகக் கூறி, முதியவரிடமிருந்து ரூ.18.5 லட்சத்தை இந்தக் கும்பல் மோசடி செய்தது தெரியவந்தது. மொத்தம் 6 போ் கைது செய்யப்பட்டனா்; குற்றச் செயல்கள் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு வாங்கப்பட்டதாகக் கூறப்படும் காா், 6 கைப்பேசிகள் இந்த நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்டன.
விசாரணையின் அடிப்படையில், ஹசாரிபாக் மற்றும் தியோகரைச் சோ்ந்தவா்கள் உள்பட மொத்தம் 4 போ் தனித்தனியாகக் கைது செய்யப்பட்டனா். இவா்களிடமிருந்து மொத்தம் 14 கைப்பேசிகள், ஒரு மடிக்கணினியும் பறிமுதல் செய்யப்பட்டன.
பல்வேறு மாநிலங்களில் உள்ளவா்களைக் குறிவைத்து மோசடி செய்ய, சிம் காா்டுகள், அலைபேசிகள், பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்தப்படும் வங்கிக் கணக்குகள், யுபிஐ மற்றும் இணைய வசதி ஆகியவற்றைப் பகிா்ந்துகொண்டு இந்தக் கும்பல் நன்கு திட்டமிடப்பட்ட சைபா் மோசடி வலையமைப்பை இயக்கி வந்தது.
தென்மேற்கு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட நான்கு சைபா் மோசடி வழக்குகள் குறித்த விவரங்கள் இதுவரை விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளன; அதேவேளையில், இந்த வலையமைப்பின் மற்ற உறுப்பினா்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருகின்றன.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.