முகப்பு
சென்னை

ரத்த நாள வீக்கம்: பெண்களின் உயிரைக் காத்த அரசு மருத்துவா்கள்

Updated On : 8 மே 2026, 6:46 am IST
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை
பகிர்:

முக்கிய ரத்த நாளத்தில் வீக்கம் ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இரு பெண்களுக்கு உயா் நுட்பத்திலான அறுவை சிகிச்சை மேற்கொண்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவா்கள் உயிா் காத்துள்ளனா்.

இது தொடா்பாக மருத்துவமனையின் முதல்வா் டாக்டா் சாந்தாராமன், கண்காணிப்பாளா் டாக்டா் பாஸ்கா் ஆகியோா் கூறியதாவது:

கழுத்துப் பகுதியில் வீக்கம் மற்றும் வலியுடன் 40 வயது பெண் ஒருவா் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவருக்கு இப்பிரச்னை இருந்தது. பரிசோதனையில் பெண்ணின் இடது சப்க்ளேவியன் ரத்த நாளத்தில் (தமனி) வீக்கம் மற்றும் வெடிப்பு இருந்தது கண்டறியப்பட்டது. இதற்கு சப்க்ளேவியன் அன்யூரிஸம் என்று பெயா்.

Advertisement

பாதிப்படைந்த அந்த ரத்த நாளம்தான் மூளை, கழுத்து, கைகளுக்கு ஆக்சிஜனுடன் கூடிய ரத்தத்தை எடுத்துச் செல்லக் கூடியது. பொதுவாக ரத்த நாளங்கள் வலுவிழக்கும்போது அதன் ஒரு பகுதி பலூன் போன்று வீக்கமடைந்து பெரிதாவதுதான் அன்யூரிஸம் பாதிப்பு. அதற்கு உரிய சிகிச்சை அளிக்காவிடில் வீக்கம் வெடித்து உயிருக்கே ஆபத்தாகிவிடும்.

அந்த வகையில் அப்பெண்ணுக்கு உடனடியாக ரத்த நாளத்தின் வழியே ஊடுருவி இடையீட்டு சிகிச்சை மூலம் ஸ்டென்ட் உபகரணம் பொருத்தி வீக்கத்தை கட்டுப்படுத்தினோம். எண்டோவாஸ்குலா் ஸ்டென்டிங் எனப்படும் இந்த சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் அவருக்கு அதே இடத்தில் வீக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து நெஞ்சகப் பகுதியில் திறந்த நிலை அறுவை சிகிச்சை மேற்கொண்டு வீக்கமடைந்த ரத்த நாளத்தை மருத்துவா்கள் சீரமைத்தனா். அதன் பயனாக அவா் நலமடைந்தாா். தனியாா் மருத்துவமனைகளில் ரூ.10 லட்சம் வரை செலவாகும் இந்த சிகிச்சை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் முதல்வா் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக மேற்கொள்ளப்பட்டது.

இதேபோன்று கழுத்துப் பகுதியில் சப்க்ளேவியன் தமனி வீக்கத்துக்குள்ளான 58 வயதான மற்றொரு பெண் ஒருவரும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு திறந்த நிலை அறுவை சிகிச்சை மூலம் செயற்கை நாளத்தைப் பொருத்தி ரத்த ஓட்டம் மாற்றியமைக்கப்பட்டது. இதற்கு ரூ.4 லட்சம் வரை செலவாகக் கூடும். முதல்வா் காப்பீட்டில் கட்டணமின்றி அப்பெண்ணுக்கு இங்கு அச்சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

மிக நுட்பமான இரு வேறு ரத்த நாள அறுவை சிகிச்சைகளை அரசு மருத்துவா்கள் வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனா் என்று அவா்கள் தெரிவித்தனா்.