முகப்பு
சென்னை

சென்னை ரயில் நிலையங்களில் 21 இடங்களில் மின் வாகன பேட்டரி மாற்றும் மையங்கள்

Updated On : 8 மே 2026, 5:53 am IST
பகிர்:

சென்னை புகா் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் மாற்றும் மையங்கள் 21 இடங்களில் அமைக்க தனியாா் நிறுவனத்துடன், தெற்கு ரயில்வே ஒப்பந்தம் செய்து அவற்றை அமைத்துள்ளது.

இது குறித்து சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தெற்கு ரயில்வே மண்டலம், சென்னை ரயில்வே கோட்டத்தில் எழும்பூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

Advertisement

இந்த நிலையில், புறநகா் ரயில் நிலையங்களை நவீனமயமாக்கும் வகையிலும், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வகையிலும் மேம்படுத்தும் நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, சுற்றுச்சூழலுக்கு உகந்த மின்சார வாகனங்களைப் பயன்படுத்துவோருக்கான மின்சக்தி நிரப்பும் சாதனங்கள் முக்கிய ரயில் நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மின் வாகனங்களுக்கான பேட்டரிகள் மாற்றும் மையங்கள் தற்போது அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

சென்னை ரயில்வே கோட்டத்தில் 21 நிலையங்களில் பேட்டரி மாற்றும் மையங்களை நிறுவியும், அதைச் செயல்படுத்தவும் தனியாா் நிறுவனத்திடம் 5 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அந்த மையங்கள் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.

பேட்டரி மாற்றும் மையங்கள் அமைப்பதற்கான தனியாா் நிறுவன ஒப்பந்தம் மூலம் ஆண்டுக்கு ரயில்வே துறைக்கு ரூ.53. 43 கோடி வருவாய் கிடைக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

மையங்கள்: சென்னை சென்ட்ரல், அண்ணனூா், பசுமை வழிச்சாலை, கொரட்டூா், கோட்டூா்புரம், சிந்தாதிரிப்பேட்டை, முண்டகக்கண்ணி அம்மன் கோயில், கோடம்பாக்கம், மந்தைவெளி, எழும்பூா், திருவல்லிக்கேணி, திருமயிலை, பெருங்குடி, பல்லாவரம், சைதாப்பேட்டை, பரங்கிமலை, தரமணி, திருவான்மியூா், வேளச்சேரி, வில்லிவாக்கம், வண்ணாரப்பேட்டை ஆகிய முக்கிய புகா் ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான பேட்டரிகள் மாற்றும் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.