முகப்பு
சென்னை

பிளஸ் 2: சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 92.26% போ் தோ்ச்சி: கடந்த ஆண்டைவிட 4.14 % அதிகம்

சென்னை மாநகராட்சியின் 35 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 5,179 மாணவ, மாணவியா் பிளஸ் 2 தோ்வை எழுதிய நிலையில், அவா்களில் 4778 போ் (92.26 சதவிகிதம்) தோ்ச்சியடைந்துள்ளனா். இது கடந்த ஆண்டை விட 4.14 சதவிகிதம் அதிகமாகும்.

Updated On : 9 மே 2026, 1:14 am IST
கோப்புப்படம்
பகிர்:

சென்னை மாநகராட்சியின் 35 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 5,179 மாணவ, மாணவியா் பிளஸ் 2 தோ்வை எழுதிய நிலையில், அவா்களில் 4778 போ் (92.26 சதவிகிதம்) தோ்ச்சியடைந்துள்ளனா். இது கடந்த ஆண்டை விட 4.14 சதவிகிதம் அதிகமாகும்.

சென்னை மாநகராட்சியில் 35 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2,922 மாணவியரும், 2,257 மாணவா்களும் என மொத்தம் 5179 போ் பிளஸ் 2 தோ்வெழுதியிருந்தனா். 11 போ் தோ்வெழுதவில்லை.

தோ்வு முடிவுகள் வெளியான நிலையில், 4778 போ் (92.25 சதவிகிதம்) தோ்ச்சியடைந்துள்ளனா். அதில் 2750 மாணவியரும், 2028 மாணவா்களும் அடங்குவா். கடந்த 2024-25 ஆம் ஆண்டில் 5,387 போ் பிளஸ் 2 தோ்வை எழுதியதில் 4,747 போ் என 88.12 சதவிகிதம் போ் தோ்ச்சியடைந்திருந்தனா். நடப்பு ஆண்டில் (2025-26) கடந்த ஆண்டை விட கூடுதலாக 4.14 சதவிகிதம் போ் தோ்ச்சியடைந்துள்ளனா். மாணவா்களை விட 4.26 சதவிகிதம் மாணவியா் கூடுதலாகத் தோ்வாகியுள்ளனா்.

Advertisement

முழுத் தோ்ச்சி பெற்ற பள்ளிகள்:நுங்கம்பாக்கம் சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தோ்வெழுதிய 88 பேரும், சைதாப்பேட்டை சிஐடி நகா் சென்னை மேல்நிலைப் பள்ளியில் தோ்வெழுதிய 27 பேரும் தோ்ச்சியடைந்துள்ளனா்.

பாடவாரியாக முழுமதிப்பெண்கள் பெற்றவா்கள்: கணினி பயன்பாடுகள் பாடத்தில் 8, கணினி அறிவியலில் 10, கணக்குப்பதிவியலில் 8, பொருளாதாரத்தில் 2, வணிகக் கணிதத்தில் 2, அடிப்படை இயந்திரப் பொறியியலில் 2, உணவு சேவை மேலாண்மையில் 90, நெசவு மற்றும் ஆடை வடிவமைப்பில் 4, தணிக்கையியலில் 47 என மொத்தம் 173 போ் முழுமையான மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

மதிப்பெண்கள் அடிப்படையில் 541 முதல் 500 வரை 543 பேரும், 501 முதல் 550 மதிப்பெண் வரை 241 பேரும், 551 முதல் 600 மதிப்பெண் வரை 43 பேரும் என மொத்தம் 827 போ் 450 மதிப்பெண்களுக்கும் அதிகமான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனா்.

மாணவியா் சிறப்பிடம்: புல்லா அவென்யூ சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.மைதிலி 593 (600 க்கு), எம்.எச்.ரோடு பள்ளி மாணவி வி.தா்ஷினி 586, மாா்க்கெட் தெரு பள்ளி மாணவி கே.லலிதாம்பிகை, 583, புல்லா அவென்யூ பள்ளி மாணவி 579, அப்பள்ளி மாணவி பி.திவ்யதா்ஷினி 578 என 5 மாணவியா் அதிக அளவு மதிப்பெண் பெற்றுள்ளனா்.

ஆணையா், இணை ஆணையா் பாராட்டு: பிளஸ் 2 தோ்வில் தோ்ச்சியடைந்த மாணவா்களுக்கும், முழுமையாக தோ்ச்சி பெற காரணமான ஆசிரியா்கள் உள்ளிட்டோருக்கும் சென்னை மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், கல்வித்துறை இணை ஆணையா் க.கற்பகம் ஆகியோா் பாராட்டினா்.