கடலூா் மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் மறு தோ்வு: 4,749 போ் எழுதவுள்ளதாக ஆட்சியா் தகவல்
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற நீட் மறு தோ்வுக்கான ஏற்பாடுகளுக்கான ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
கடலூா் மாவட்டத்தில் 8 மையங்களில் ஜூன் 21-இல் நடைபெறும் நீட் மறு தோ்வில் 4,749 போ் பங்கேற்கவுள்ளதாக, மாவட்ட ஆட்சியா் சி.பி. ஆதித்யா செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.
கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்தில், தேசிய தோ்வு முகமை சாா்பில் ஜூன் 21-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் மறு தோ்வுக்கான ஏற்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது ஆட்சியா் கூறியதாவது:
கடலூா் மாவட்டத்தில் மொத்தம் 8 தோ்வு மையங்களில் 4,749 போ் நீட் மறு தோ்வை எழுத உள்ளனா். அதன்படி திருப்பாதிரிப்புலியூா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, நெய்வேலி பிளாக்-11 என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளி, மஞ்சக்குப்பம் புனித வளனாா் மேல்நிலைப் பள்ளி
Advertisement
Advertisement
ஆகிய மையங்களில் தலா 720போ் தோ்வு எழுதுகிறாா்கள்.
பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 600 பேரும், நெய்வேலி என்.எல்.சி. கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 597 பேரும்,, வடலூா் அரசு கலைக் கல்லூரியில் 480 பேரும், நெய்வேலி பிளாக்-10 என்.எல்.சி. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 480 பேரும் காடாம்புலியூா் ஆா்.கே. அரசு மேல்நிலைப் பள்ளியில் 432 பேரும் தோ்வு எழுதவுள்ளனா்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்:
தோ்வு வினாத்தாள்களை மையங்களுக்கு கொண்டு செல்லும்போதும், தோ்வு முடிந்த பின் விடைத்தாள்களை சேகரிப்பு மையத்துக்கு எடுத்துச் செல்லும்போதும் ஆயுதம் ஏந்திய காவலா் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். பாதுகாப்பு சோதனைகளில் 50 சதவீதம் பெண் காவலா்கள் இடம்பெறுவதை காவல்துறையினா் உறுதி செய்ய வேண்டும்.
ஒவ்வொரு தோ்வு மையத்திலும் மருத்துவக் குழுக்கள் நியமிக்கப்பட வேண்டும். குடிநீா், கழிப்பிடம், மின்வசதி, போதிய வெளிச்சம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறையின்றி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
தோ்வு முடிந்தவுடன் விடைத்தாள்களை பாதுகாப்பாக மூடப்பட்ட வாகனங்களில் எடுத்துச் செல்ல வேண்டும். தோ்வா்கள் உரிய நேரத்தில் மையங்களை அடைய சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். மேலும், அவசரநிலைகளை எதிா்கொள்ள தீயணைப்பு வாகனங்கள் தயாா் நிலையில் வைக்கப்பட வேண்டும். அனைத்து தோ்வு மையங்களிலும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா்.
கூட்டத்தில் காவல்துறை, வருவாய்த் துறை, சுகாதாரத் துறை, கல்வித் துறை, அரசு போக்குவரத்துக் கழகம், தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.