முகப்பு
காஞ்சிபுரம்

பனிமூட்டத்தில் போகி கொண்டாடிய சிறுவர்கள்

காஞ்சிபுரத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கடும் பனியிலும் திங்கள்கிழமை அதிகாலை போகிப்

Updated On : 15 ஜனவரி 2019, 3:34 am IST
பகிர்:


காஞ்சிபுரத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் கடும் பனியிலும் திங்கள்கிழமை அதிகாலை போகிப் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர்.
காஞ்சிபுரம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. அதிகாலை 4 முதல் காலை 9 மணி வரை பனிமூட்டத்துடன் கூடிய குளிரும் அதிகளவில் காணப்படுகிறது. இதன் காரணமாக, வந்தவாசி சாலை, சென்னை -பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஜிஎஸ்டி சாலை, உத்தரமேரூர் சாலை, சின்ன காஞ்சிபுரம் உள்ளிட்ட முக்கிய சாலைகளில் விளக்குகளை எரியவிட்டவாறு வாகனங்கள் ஊர்ந்து சென்று வருகின்றன. இந்நிலையில், தமிழர் திருநாளாம் பொங்கலுக்கு முந்தைய நாளில் பழைய பொருள்களை எரித்து, புதிய பொருள்களை வாங்கும் போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. அதன்படி, திங்கள்கிழமை அதிகாலை முதலே சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் ஆகியோர் காலையில் எழுந்து, தெரு முற்றத்திலும், வீடுகளின் முன்புறமும் பழைய பொருள்களை எரியூட்டி, போகி மேளம் அடித்து உற்சாகமாகக் கொண்டாடினர். ஆங்காங்கே பழைய பொருள்களை எரித்தனர். அத்துடன், சில விஷமிகள் நெகிழி, குப்பைக் கழிவுகளை தீயிட்டு எரித்தனர். இதனால், காஞ்சிபுரம், உத்தரமேரூர் ஆகிய பகுதிகளில் பனிமூட்டத்துடன் அதிகளவில் புகை சூழ்ந்து காணப்பட்டது. வரதராஜர் உள்ளிட்ட பெருமாள் கோயில்களில் கடை மார்கழி கடைசி நாளன்று திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
செங்கல்பட்டில்...
செங்கல்பட்டு, மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் திங்கள்கிழமை அதிகாலை மக்கள் போகிப் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். 
செங்கல்பட்டு மாமல்லபுரம், திருக்கழுகுன்றம், திருப்போரூர், மாமல்லபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளிலும் போகிப் பண்டிகையையொட்டி, அதிகாலையில் கொட்டும் பனியையும் பொருள்படுத்தாமல் வீதிகள்தோறும் பழைய பொருள்களை தீயிலிட்டு எரித்து போகிப் பண்டிகையை உற்சாகத்துடன் கொண்டாடினர். பெரியவர்கள் போகி தீயிட்டு எரிக்க, சிறுவர்கள் அதில் குளிர்காய்ந்தும், சிறு பறை மேளங்களை அடித்தும், நெருப்பைச்சு ற்றிவந்து போகியை கொண்டாடினர். 
மாமல்லபுரத்தில் பழைய பொருள்களை நெருப்பில் போட்டு எரித்து போகிப் பண்டிகையை கொண்டாடி மகிழ்ந்தனர். சிறுவர்கள் தீயைச் சுற்றி வந்து, மேளம் தட்டி ஒலியெழுப்பி, போகியோ போகி எனக் கூவி மகிழ்ந்தனர். புகையில்லா போகி விழிப்புணர்வுடன் பொதுமக்கள் பலர் பிளாஸ்டிக், டயர் ஆகியவற்றை எரிப்பதைத் தவிர்த்தனர். மாமல்லபுரம் தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் அதிகாலை நடைபயிற்சியின்போது, போகிப் பண்டிகை கொண்டாடியவர்களுடன் சேர்ந்து மேளம் அடித்து மகிழ்ந்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments