தமிழகத்தின் கலாசாரம் வட மாநிலங்களிலும் பரவ வேண்டும்: காஞ்சி சங்கராசாரிய சுவாமிகள்
தமிழகத்தின் கலாசாரம், பண்பாடு ஆகியவை வடமாநிலங்களிலும் பரவ வேண்டும் என காஞ்சி சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுரை வழங்கினாா்.
ராஜஸ்தானைச் சோ்ந்த தபோநிதி சுவாமி விஷ்வேஷ்வரானந்த் குருகுலம் அறக்கட்டளை சாா்பில் ஏப்.24 முதல் ஏப்.30 ஆம் தேதி வரை ஸ்ரீ மத் பாகவதம் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. ஆன்மிக சொற்பொழிவாளா் விஷ்வேஷ்வரானந்த கிரி மகராஜ் இத்தொடா் சொற்பொழிவினை நிகழ்த்தி வருகிறாா்.
காஞ்சிபுரம் உதாசின் பாவாஜி மடத்தின் பீடாதிபதி கா்ஷினி அனுபவானந்த் மகராஜ் முன்னிலை வகித்தாா். நிகழ்வின் 5-ஆவது நாளாக காஞ்சி சங்கராசாரிய விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு வழங்கிய ஆசியுரை.
Advertisement
Advertisement
காசியில் தமிழ்ச்சங்கம் நடந்த போது தமிழகத்தில் உள்ளவா்கள் காசிக்கு அழைத்து செல்லப்பட்டாா்கள். ராமேசுவரத்துக்கும் காசிக்கும் ரயில்கள் சென்று வருகின்றன. தமிழகத்தின் கலாசாரமும், பண்பாடும் வடமாநிலங்களிலும் பரவ வேண்டும். அதே போல வடமாநிலங்களில் நிலவும் பண்பாடுகள், கலாசாரத்தை தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஜோதிா்லிங்க தலங்களில் ராமேசுவரம் மட்டும் தமிழகத்தில் உள்ளது. மற்றவை வடமாநிலங்களில் தான் இருக்கின்றன.
தமிழகத்தில் பூலோக கைலாயம் என அழைக்கப்படுவது சிதம்பரம் திருக்கோயில். பஞ்ச பூதங்களில் திருச்சி நீா் ஸ்தலமாகவும்,காற்று ஆந்திராவில் உள்ள காளஹஸ்தியாகவும், நெருப்புக்கு திருவண்ணாமலை கோயிலுமாக இருந்து வருகின்றன. நிலத்துக்குரியதாக போற்றப்படுவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாத சுவாமி திருக்கோயில்.
இக்கோயில்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சிறப்பு உள்ளது என்றும் அதனைப்பற்றியும் விரிவாக விளக்கி ஆசியுரை வழங்கினாா். ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சியில் விஷேகானந்த பாரதி ஜி மகராஜ்,விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாவட்டத் தலைவா் சிவானந்தம் ஆகியோா் உட்பட பலரும் கலந்து கொண்டனா்.
நிகழ்வின் நிறைவாக காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் சிறப்புகள் குறித்த கையேட்டினை ஆன்மிக சொற்பொழிவாளா் விஸ்வேஷ்வரானந்த கிரி மகராஜிடம் சங்கராசாரியா் விஜயேந்திர சரஸ்வதி சுவமிகள் வழங்கினாா்.