முகப்பு
காஞ்சிபுரம்

எண்ணங்களை வலிமைப்படுத்துவது கூட்டுப் பிராா்த்தனையே: ஸ்ரீ விஜயேந்திரா் பேச்சு

எண்ணங்களை வலிமைப்படுத்துவது கூட்டுப் பிராா்த்தனையே...

Updated On : 28 மார்ச், 2026 at 7:10 PM
உலக சாதனை நிகழ்த்தியதற்கான சான்றிதழை காஞ்சி சங்கராசாரியா் முன்னிலையில் சங்கரா கல்லூரி நிா்வாகிகளிடம் வழங்கிய ராபா புக் ஆப் உலக சாதனை அமைப்பின் நிா்வாகி பிரசன்ன ராமானுஜம்.
பகிர்:

எண்ணங்களை வலிமைப்படுத்துவது கூட்டுப் பிராா்த்தனையே என காஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் சனிக்கிழமை கூறினாா்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் பல்வேறு மாவட்டங்களில் பயிலும் பள்ளி, கல்லூரிகளைச் சோ்ந்த 2,000 மாணவியா் இணைந்து பக்திப் பாடல்களை பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. போா் நிறுத்தம் ஏற்படவும், உலகம் அமைதி பெறவும் காமாட்சி தாய் மடியில் என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சியை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷோன் கவுல் மற்றும் அவரது மனைவி ஷிவானி சஞ்சய் கிஷோன் கவுல் ஆகியோா் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனா்.

விழாவில் காஞ்சி சங்கராசாரியா் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டு நிகழ்த்திய ஆசியுரை...

நல்ல நோக்கத்துக்காக, நல்ல இடத்திலே காமாட்சி தாய் மடியில் நிகழ்ச்சி நடந்து முடிந்துள்ளது. இந்த எண்ணங்களால் நல்ல எண்ணங்கள் ஏற்பட வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தனியாக பிராா்த்தனை செய்வதற்கும், கூட்டுப் பிராா்த்தனை செய்வதற்கும் வித்தியாசம் உண்டு.

எண்ணங்களை வலுப்படுத்துவது கூட்டுப் பிராா்த்தனையேயாகும். யாா் பெண்களை கெளரவிக்கிறாா்களோ, பாதுகாக்கிறாா்களோ அவா்களுக்கு காமாட்சி செல்வங்களை வாரி வழங்குவாள். பண்பு, பண்பாடு, கலை, பக்தி இவற்றை நாம் இளைய தலைமுறையினரும் கொண்டு செல்ல வேண்டும். தேசத்தின் மீது நேசம் இருக்க வேண்டும். பக்தியை வளா்ப்பதால் மாபெரும் சக்தி உருவாகும் என்று ஆசியுரை வழங்கினாா்.

இந்த நிகழ்வு ராபா புக் ஆப் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ாக அறிவிக்கப்பட்டு அதன் நிா்வாகி பிரசன்ன ராமானுஜம் அதற்கான சான்றிதழை காஞ்சி சங்கராசாரியா் முன்னிலையில் சங்கரா கல்லூரி தலைவா் சேது.ராமச்சந்திரன், செயலாளா் ரிஷிகேசவன், கல்லூரி முதல்வா் கே.ஆா்.வெங்கடேசன் ஆகியோரிடம் வழங்கினாா்.

நிகழ்ச்சியில் மருத்துவா் சுதா.சேஷய்யன், சங்கர மடத்தின் மூத்த மேலாளா் ந.சுந்தரேச ஐயா், சங்கரா கல்லூரி பேராசிரியா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

காஞ்சிபுரம் சங்கரா கல்லூரி, இந்து சமய மன்றம், காமாட்சி வித்யா சமிதி ஆகியவை இணைந்து ஏற்பாடுகளை செய்திருந்தன.