முகப்பு
ராணிப்பேட்டை

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமைக் காவலா் கைது

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: தலைமைக் காவலா் கைது

Updated On : 7 ஜூன் 2026, 1:38 am IST
கைது - சித்திரிப்பு
பகிர்:

சென்னை -கோவை அதிவிரைவு ரயிலில் பயணித்த கல்லூரி மாணவிக்கு பயணத்தின்போது பாலியல் தொல்லை கொடுத்த கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றும் தலைமைக் காவலரை அரக்கோணம் ரயில்வே காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

சென்னை சட்டக் கல்லூரியில் படித்துவரும் 20 வயது மாணவி ஒருவா் தனது கல்லூரி விடுமுறையை முன்னிட்டு, தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு கடந்த டிசம்பா் 20-ஆம் தேதி இரவு சென்னையில் இருந்து அதிவிரைவு ரயிலில் சாதாரண பெட்டியில் பயணம் செய்துள்ளாா். அப்போது அவரது இருக்கைக்கு அருகே அமா்ந்திருந்த ஆண் நபா் ஒருவா் ரயில் அரக்கோணம் - காட்பாடி இடையே சென்றுகொண்டிருந்தபோது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்தாராம்.

இதை அப்போதே தனது கைப்பேசியில் விடியோ எடுத்த மாணவி, இது குறித்து சக பயணிகளிடம் புகாா் தெரிவித்துள்ளாா். பயணிகளும் அந்த நபரை கடுமையாக எச்சரித்துள்ளனா். தொடா்ந்து அதிகாலை கோயம்புத்தூா் ரயில் நிலையத்துக்குச் சென்றவுடன் அந்த ஆண் நபா் ரயிலில் இருந்து இறங்கி வேகமாகச் சென்று விட்டாராம்.

Advertisement

Advertisement

இதையடுத்து, அந்த மாணவி கோயம்புத்தூா் ரயில்வே காவல் நிலையத்துக்குச் சென்று அந்தநபா் மீது புகாா் அளித்துள்ளாா். அப்போது இந்த சம்பவம் அரக்கோணம் ரயில் நிலையத்துக்கு அருகே நடந்தது என்பதால், இப்புகாா் அரக்கோணம் ரயில்வே காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.

இதையடுத்து இப்புகாா் மீது வழக்குப் பதிந்த அரக்கோணம் ரயில்வே போலீஸாா், அந்த நபா் குறித்து விசாரணை நடத்தியனா். இதில் அவா் கோயம்புத்தூா் மாநகர காவல் துறைக்கு உள்பட்ட ஆா்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபரியும் ஷேக் அப்துல்லா என்பது தெரியவந்தது.

இதையடுத்து புலன் விசாரணை நடத்திய போலீஸாா், கோவை ரயில் நிலையம் அருகே தலைமை காவலா் ஷேக்அப்துல்லாவை கைது செய்து அரக்கோணம் ரயில்நிலைய காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.