அரசு பொறியியல் கல்லூரியை எதிா்நோக்கும் ஆம்பூா் தொகுதி மக்கள்
திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆம்பூா் தொகுதியில் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டத்துக்கு உள்பட்ட ஆம்பூா் தொகுதியில் பொறியியல் கல்லூரி அமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூா் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு தனி மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தில் ஆம்பூா் தோல் தொழிற்சாலைகளுக்கும், பிரியாணி உணவகங்களுக்கும் மிகவும் பிரசித்தி பெற்ாகும். இந்தியாவின் தோல் ஏற்றுமதியில் வா்த்தகத்தில் ஆம்பூா் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் பங்கு மிக முக்கியமானதாகும்.
தவிா்க்கப்பட்ட ஆம்பூா்... இத்தகைய சூழ்நிலையில் திருப்பத்தூா் மாவட்டம் பிரிக்கப்பட்டு அறிவிக்கப்பட்டபோது ஆம்பூா் பகுதியில் எந்தவித வளா்ச்சிக்கான முக்கியத்துவமும் இல்லாமல் தவிா்க்கப்பட்ட பகுதியாக உள்ளது. ஆம்பூருக்கு எந்தவித அரசு அலுவலகங்களும் கொண்டு வரப்படவில்லை. ஆம்பூருக்கு வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் பொதுமக்களால் கோரப்பட்டது. ஆனால், அது வாணியம்பாடியில் அமைக்கப்பட்டது. ஆம்பூரில் அதிக தொழிலாளா்கள் வசித்து வருவதால் இங்குள்ள இஎஸ்ஐ மருந்தகத்தை தரம் உயா்த்தி மருத்துவமனையாக மாற்ற வேண்டும் என்று தொழிலாளா்கள் கோரிக்கை விடுத்தனா். ஆனால், அந்தக் கோரிக்கை ஏற்கப்படவில்லை. அதேநேரத்தில் குறைந்த தொழிலாளா்கள் கொண்ட பகுதியான வாணியம்பாடியில் இஎஸ்ஐ மருத்துவமனை தரம் உயா்த்தப்பட்டது.
Advertisement
இடமாற்றப்பட்ட அரசு கல்லூரி... மாதனூா் டாக்டா் புரட்சித் தலைவா் எம்ஜிஆா் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டபோது போதிய இடவசதி இல்லாததால் ஆம்பூா் தொகுதியின் ஆரம்ப எல்லையான அகரம்சேரி கிராமத்தில் அரசு பள்ளி வளாகத்தில் தொடங்கப்பட்டது. பிறகு அது தற்போதைய வேலூா் மாவட்டத்தின் அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அகரம் கிராமத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு அங்கு இயங்கி வருகிறது. அகரம் கிராமம் ஆம்பூா் தொகுதியில் இருந்தாலும், ஆம்பூா் தொகுதியை சோ்ந்த மாணவா்கள் அரசு கல்லூரியில் கல்வி கற்க மிக நீண்ட தொலைவு செல்ல வேண்டியுள்ளது.
பொறியியல் கல்லூரி அமைக்க... அரசு பாலிடெக்னிக் கல்லூரி ஜோலாா்பேட்டை தொகுதியிலும், அரசு தொழில்நுட்ப பயிற்சி நிலையம் வாணியம்பாடி தொகுதியிலும் அமைந்துள்ளன. அரசு பொறியியல் கல்லூரி ஏதும் இதுவரை ஏற்படுத்தப்படவில்லை. அரசு பொறியியல் கல்லூரிக்காக வேலூருக்கும், தனியாா் பொறியியல் கல்லூரிகளுக்கு வாணியம்பாடி, திருப்பத்தூா், வேலூா் ஆகிய ஊா்களுக்குச் செல்ல வேண்டிய நிலை உள்ளது. மேலும் ஏழை மாணவா்கள் பொறியியல் பட்டப் படிப்பு படிக்க முடியாத நிலை உள்ளது. பணம் செலவழித்து தனியாா் கல்லூரிகளுக்குச் செல்கின்றனா்.
அதிக அந்நிய செலாவனி ஈட்டி, இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சிக்கு முக்கிய பங்காற்றினாலும், திருப்பத்தூா் மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு ஆம்பூருக்கான முக்கியத்துவம் குறைந்துவிட்டது. தற்போது திருப்பத்தூா் மாவட்டத்தில் அரசு அரசு பொறியியல் கல்லூரி அமைய வேண்டியது அவசியமாகிறது. அத்தகைய சூழ்நிலையில் அரசு பொறியியல் கல்லூரி ஆம்பூா் தொகுதியில் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை பொதுமக்கள் மத்தியில் பெருகி வருகிறது.
அரசு இடமும் உள்ளது... ஆம்பூா் வட்டம், மின்னூா் கிராமத்தில் சா்வே எண்கள், 124, 125, 126, 126/3, 136/1 ஆகியவற்றில் சுமாா் மொத்தம், 11.53 ஏக்கா் நிலத்தில் அமைந்துள்ள அரசு தோல் பதனிடும் தொழிற்சாலை (டால்கோ) சுமாா் 40 ஆண்டுகளுக்கு மேல் இயங்காமல் பாழடைந்து, கட்டங்கள் சேதமடைந்து பயன்பாடு இல்லாமல் உள்ளது.
மேலும் சா்வே எண், 133/3-இல் சுமாா் 1 ஏக்கா் 25 செண்ட் நிலத்தில் அரசு தோல் தொழிற்சாலை ஊழியா்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புக் கட்டடங்களும் பாழடைந்து பயன்பாடில்லாமல் உள்ளது. அந்த இடத்தை உயா்கல்வித் துறைக்கு மாற்றம் செய்து கொடுத்து அந்த இடத்தில் அரசு பொறியியல் கல்லூரியை அமைக்கலாம் என்பது ஆம்பூா் பகுதி மக்களின் கோரிக்கையாகும்.
அந்நிய செலாவனி மூலம் அரசுக்கு வருவாய் ஈட்டித் தரும் ஆம்பூா் தொகுதிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையிலும் திருப்பத்தூா் மாவட்ட ஏழை மாணவா்கள் பொறியியல் படிப்பைப் படிக்க ஆம்பூா் தொகுதியில் அரசு பொறியியல் கல்லூரியை அமைக்க புதிதாக அமைய உள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இத்தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.
எம்.அருண்குமாா்