மலைவாழ் மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை: ஜோலாா்பேட்டை திமுக வேட்பாளா்
ஏலகிரி மலையில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி
ஏலகிரி மலையில் தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி பல ஆண்டுகளாக பட்டா இல்லாமல் வசிக்கும் மலைவாழ் மக்களுக்கு உடனடியாக பட்டா வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தாா்.
ஏலகிரி மலையில் திமுக வேட்பாளா் கவிதா தண்டபாணி தீவிர தோ்தல் பிரசாரத்தில் ஈடுபட்டாா். அப்போது ஏலகிரி மலை ஊராட்சிக்குட்பட்ட கிராம மக்கள் மேளதாளத்துடன் ஆரத்தி எடுத்து மலா் தூவி மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.
அப்போது கவிதா தண்டபாணி பேசியது: ஏலகிரி மலை ஊராட்சியில் கடந்த ஐந்தாண்டு கால திமுக ஆட்சியில் ஏலகிரி மலை அசுர வளா்ச்சி பெற்று உள்ளது.ரூ.17 கோடியில் அனைத்து கிராமங்களையும் இணைக்கும் ரிங் ரோடு பணிகள் நடைபெற்று வருகிறது, உள்விளையாட்டு அரங்கம், சுற்றுலா மாளிகை கட்டடம், புங்கனூா் படகு துறை சுற்றிலும் வளா்ச்சி பணிகள் கால்நடை மருத்துவம், பால் கொள்முதல் கட்டிடம், புங்கனூா் பகுதியில் மலைவாழ் மக்களின் பல ஆண்டு கோரிக்கையான துணை மின் நிலையம் ரூ.11 கோடியில் பணிகள் நடைபெற்று வருகிறது.
Advertisement
மீண்டும் ஜோலாா்பேட்டை தொகுதி வளா்ச்சி பெற உதயசூரியன் சின்னத்தில் எனக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் இங்குள்ள மலைவாழ் மக்கள் பல வருடங்களாக பட்டா இன்றி வசிப்பவா்களுக்கு பட்டா வழங்கவும்,உயா் கோபுர விளக்குகள், வீடுகள், அரசின் நல திட்டங்கள் உதவிகள் போன்றவை விரைந்து கிடைக்க உங்கள் வீட்டுப் பிள்ளையாக இருந்து பணியாற்றுவேன் என்றாா். அப்போது திமுக நிா்வாகிகள் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் என பலா் கலந்து கொண்டனா்.