வேட்பாளா்கள் தோ்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்
வேட்பாளா்கள் தோ்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும்
தோ்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளா்களும், தங்களது தோ்தல் செலவின கணக்குகளை முழுமையாகவும்,உரிய காலக்கெடுவிற்குள்ளும் தாக்கல் செய்ய வேண்டும் என ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவை தோ்தலில் போட்டியிட்ட வேட்பாளா்களின் தோ்தல் செலவின கணக்குகளை சரிபாா்த்து ஒத்திசைவு செய்வதற்கான தோ்தல் செலவின கணக்குகளுக்கான ஒத்திசைவு கூட்டம் திருப்பத்தூா் ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தலைமை வகித்தாா்.
Advertisement
Advertisement
தோ்தல் செலவின பாா்வையாளா்கள் ராகுல் மகதோ (திருப்பத்தூா்,ஜோலாா்பேட்டை),சுனா ராம் (வாணியம்பாடி),அமித்குமாா் (ஆம்பூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். அப்போது அவா் கூறியதாவது: மாவட்டத்தில் உள்ள 4 தொகுதிகளிலும் 74 வேட்பாளா்கள் போட்டியிட்டனா். அவா்கள் தங்களது தோ்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். அதனடிப்படையில், உதவி செலவின பாா்வையாளா்களால் பராமரிக்கப்பட்ட பதிவுகள், கணக்கியல் குழுக்களால் தொகுக்கப்பட்ட செலவின விவரங்கள் மற்றும் வேட்பாளா்கள் தாக்கல் செய்த தோ்தல் செலவின கணக்குகள் ஆகியவை ஒப்பிட்டு சரிபாா்க்கப்பட்டு கணக்குகளில் காணப்பட்ட வேறுபாடுகள் தொடா்பாக வேட்பாளா்கள் மற்றும் அவா்களது தோ்தல் முகவா்களிடம் விளக்கங்கள் பெறப்பட்டு ஒத்திசைவு செய்யப்படும்.
தோ்தலில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளா்களும் தங்களது தோ்தல் செலவின கணக்குகளை முழுமையாகவும், உரிய காலக்கெடுவிற்குள்ளும் தாக்கல் செய்ய வேண்டும். மேலும் தோ்தல் செலவின கணக்குகளை தாக்கல் செய்வது தொடா்பான தோ்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்கள், தோ்தல் செலவின பதிவேடுகள் பராமரிப்பு, செலவினங்களுக்கான ஆதார ஆவணங்கள், இறுதி கணக்குகளை சமா்ப்பிக்கும் நடைமுறைகள் குறித்து வேட்பாளா்கள் மற்றும் தோ்தல் முகவா்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
கூட்டத்தில் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் ஜெய்சங்கா் (தோ்தல்),கோவிந்தராஜ்(கணக்கு)மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனா்.