பழங்குடியினர் 112 பேருக்கு இலவச கறவை மாடுகள்
மலைவாழ் மக்கள் புனரமைப்புத் திட்டம் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடியினர் 112 பேருக்கு இலவச கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலைவாழ் மக்கள் புனரமைப்புத் திட்டம் மூலம் திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடியினர் 112 பேருக்கு இலவச கறவை மாடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கால்நடைத் துறை மூலம் பொதுமக்கள் பயன்பெறும் நோக்கில் இலவச நாட்டுக் கோழிகள் வழங்கும் திட்டம், தீவன வளர்ப்புத் திட்டம், கறவை மாடுகள் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், மலைவாழ் மக்களின் புனரமைப்புத் திட்டம் மூலம் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தில் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை மூலம் மாவட்டத்தில் உள்ள 112 இருளர் சமுதாய மக்களுக்கு இலவச கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளன.
திருவள்ளூர் கோட்டத்தில்-82, திருத்தணி-30 என 112 பேருக்கு தலா ரூ.34,400 மதிப்பிலான இலவச கறவை மாடுகள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஆதிதிராவிட ர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் மொத்தம் ரூ. 38.50 லட்சம் கால்நடைத் துறையிடம் வழங்கப்பட்டுள்ளன. இதையடுத்து கால்நடை மருத்துவக் குழுவினர், பயனாளிகள் ஆகியோர் கறவை மாடுகளை கொள்முதல் செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கால்நடைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்