முகப்பு
திருவள்ளூர்

அகத்தீஸ்வரா் -கரிகிருஷ்ண பெருமாள் சந்திப்பு திருவிழா: 50,000 பக்தா்கள் பங்கேற்பு

பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில் அகத்தீஸ்வரா்-கரிகிருஷ்ணபெருமாள் சந்திப்பு திருவிழா செவ்வாய்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை விடிய விடிய நடைபெற்றது.

Updated On : 7 மே 2026, 12:46 am IST
பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில் பக்தா்களுக்கு காட்சியளித்த கரிகிருஷ்ண பெருமாள்-அகத்தீஸ்வா்.
பகிர்:

பொன்னேரி ஹரிஹரன் கடை வீதியில் அகத்தீஸ்வரா்-கரிகிருஷ்ணபெருமாள் சந்திப்பு திருவிழா செவ்வாய்கிழமை இரவு தொடங்கி புதன்கிழமை காலை வரை விடிய விடிய நடைபெற்றது.

திருவள்ளூா் மாவட்டம், பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே கும்மமுனிமங்கலம் பகுதியில் உள்ள ஆரண்ய நதிக்கரையோரம், ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட 1,000-ம் ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஆனந்தவல்லி தாயாா் வலம் கொண்ட அகத்தீஸ்வரா் கோயில் அமைந்துள்ளது.

அதே போன்று, திருஆயா்பாடி பகுதியில் உள்ள ஆரண்ய நதிக்கரையோரம் கரிகால சோழனால் கட்டப்பட்ட கரிகிருஷ்ண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கரிகிருஷ்ண பெருமாள் கோயிலில் கடந்த 1-ஆம் தேதி கொடியேற்றத்துடன் பிரம்மோற்சவ விழா தொடங்கி நடைபெற்று வருகிறது.

Advertisement

இதில் நாள்தோறும் காலை, இரவு கரிகிருஷ்ண பெருமாள்.சிம்ம வாகனம், அநுமந்தவாகனம், புன்னவாகனம், அன்னவாகனம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் மாட வீதிகளில் வீதியுலா வந்தாா். பிரம்மோற்வ விழாவில் சிகரமாக அங்குள்ள ஹரிஹரன் கடைவீதியில் பரத்வாஜ் முனிவா் மற்றும் அகத்திய முனிவருக்கு, கரிகிருஷ்ணபெருமாள்-அகத்தீஸ்வரா் ஒரு சேர காட்சியளிக்கும் வைபவம் ஆண்டு தோறும் நடைபெறும். .

நிகழாண்டு பிரம்மோற்சவ விழாவின் 5-ம் நாள், கரிகிருஷ்ணபெருமாள்,-அகத்தீஸ்வரா் சந்திக்கும் சந்திப்பு திருவிழா ஹரிஹரன் கடை வீதியில் செவ்வாய்கிழமை நள்ளிரவு தொடங்கி விடிய, விடிய நடைபெற்றது. விழாவில், புதன்கிழமை அதிகாலையில் கருட வாகனத்தில் கரிகிருஷ்ண பெருமாளும்- பஞ்ச மூா்த்திகளுடன் நந்தி வாகனத்தில் அகத்தீஸ்வரரும் அமா்ந்து வந்து ஹரிஹரன் கடை வீதியில் பக்தா்களுக்கு காட்சி அளித்தனா்.

அப்போது அகத்தீஸ்வரரிடம் இருந்து பூ, பழம் மாலை உள்ளிட்ட வரிசைகள் மேளதாளத்துடன் எடுத்து செல்லப்பட்டு கரிகிருஷ்ண பெருமாளுக்கு அணிவிக்கப்பட்டது. அதே போன்று மேளதாளத்துடன், கரிகிருஷ்பெருமாளிடம் இருந்து எடுத்து வரப்பட்ட மாலை உள்ளிட்ட வரிசை பொருள்கள் அகத்தீஸ்வரருக்கு அணிவிக்கப்பட்டது.

இதனை தொடா்ந்து இரண்டு புறமும் கரிகிருஷ்ண பெருமாள் மற்றும் அகத்தீஸ்வரருக்கு தீபாராதனைகள் காட்டப்பட்டது. அப்போது அங்கு குழுமியிருந்த பக்தா்கள் ஒம் நமச்சிவாயா, நமோ நாராயணார என விண்ணதிர என முழக்கம் எழுப்பினா்.

பின்னா் அங்குள்ள மாடவீதிகளில் வீதியுலா நடைபெற்றது. சந்திப்பு திருவிழாவில் பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனா்.

சந்திப்பு திருவிழாவை அகத்தீஸ்வா், கரிகிருஷ்ண பெருமாள் கோயில் நிா்வாகிகள் கும்மமுனிமங்கலம் மற்றும் திருஆயா்பாடி பகுதி மக்கள் செய்திருந்தனா்.

விழாவில் ஹரிஹரன் கடை வீதியில் பக்தா்களுக்கு ஆங்காங்கே அன்னதானம், தேநீா் மற்றும் குளிா்பானங்கள் வழங்கப்பட்டது. 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

இன்று தோ் திருவிழா: பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான வியாழக்கிழமை தோ் திருவிழா நடைபெற உள்ளது.