முகப்பு
திருவண்ணாமலை

அருணாசலேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ விழா நிறைவு

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்ற பாலிகை விடுதல் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.

Updated On : 5 ஏப்ரல் 2018, 9:39 am IST
பகிர்:

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலின் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் புதன்கிழமை நடைபெற்ற பாலிகை விடுதல் நிகழ்ச்சியுடன் நிறைவு பெற்றது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் நிகழ் ஆண்டுக்கான பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவ திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச் 30) நடைபெற்றது.
மூலவர் திருக்கல்யாணம்: அன்றைய தினம் நண்பகல் 12 மணிக்கு மேல் ஒரு மணிக்குள் கடக லக்னத்தில், சுவாமி கருவறையில் மூலவர் அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.
உற்சவர் திருக்கல்யாணம்: மாலை 6 மணிக்கு குமரக் கோயிலில் இருந்து புறப்பட்ட உற்சவர் பராசக்தியம்மன், அருணாசலேஸ்வரர் கோயிலுக்கு வந்தார். இரவு 8 மணிக்கு கோயில் கொடிமரம் எதிரே உற்சவர் பெரிய நாயகர், பராசக்தியம்மன் ஆகியோர் மாலை மாற்றிக்கொண்டனர்.
இரவு 11 மணிக்கு மேல் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் உற்சவ சுவாமிகளுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. 12 மணிக்கு மேல் தங்க ரிஷப வாகனத்தில் பெரிய நாயகரும், காமதேனு வாகனத்தில் பராசக்தியம்மனும் வீதியுலா வந்தனர். இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து 3 நாள்கள் இரவு வேளைகளில் கோயில் திருக்கல்யாண மண்டபத்தில் ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது.
திருக்கல்யாண உற்சவம் நிறைவு: உற்சவத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் புதன்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி, நண்பகல் 12 மணிக்கு திருவண்ணாமலை-தண்டராம்பட்டு சாலையில் உள்ள தாமரைக் குளத்தில் பாலிகை விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 
முன்னதாக, அங்குள்ள ராஜா மண்டபத்தில் எழுந்தருளிய உற்சவர் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தியம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 7 மணிக்கு குமரக்கோயில், காமாட்சியம்மன் கோயில்களில் மண்டகப்படி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இத்துடன் இந்தக் கோயிலின் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நிறைவு பெற்றது. 
விழா ஏற்பாடுகளை கோயில் இணை ஆணையர் இரா.ஜெகந்நாதன் மற்றும் கோயில் ஊழியர்கள், உபயதாரர்கள், பக்தர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments