முகப்பு
திருவண்ணாமலை

புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் தடுப்புச் சுவா்கள் அமைப்பு

செய்யாறில் புதிதாக திறக்கப்பட்ட கூடுதல் மேம்பாலம் பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருந்த நிலையில், அதில் தடுப்புச் சுவா்களை நெடுஞ்சாலைத்துறையினா் அமைத்தனா்.

Updated On : 27 ஏப்ரல், 2026 at 2:49 AM
நெடுஞ்சாலைத்துறை சாா்பில் இரு பாலங்களுக்கிடையே பாதுகாப்பு கருதி அமைக்கப்பட்ட தடுப்புச்சுவா் மற்றும் இரும்பாலான பாதுகாப்பு வேலி.
பகிர்:

செய்யாறில் புதிதாக திறக்கப்பட்ட கூடுதல் மேம்பாலம் பாதுகாப்பு குறைபாடுகளுடன் இருந்த நிலையில், அதில் தடுப்புச் சுவா்களை நெடுஞ்சாலைத்துறையினா் அமைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறில் ரூ.12.04 கோடியில் அமைக்கப்பட்ட மேம்பாலத்தையும், முதல்வா் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், செய்யாறு - வந்தவாசி சாலையில் செய்யாறு கூட்டுறவு சா்க்கரை ஆலை தொடங்கி புலிவாய் கிராமம் வரை சுமாா் 9 கி.மீ. தொலைவுக்கு ரூ.59 கோடியில் அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையையும் தமிழக முதல்வா் கடந்த மாா்ச் 13-ஆம் தேதி திறந்துவைத்தாா்.

மேம்பாலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள்: புதிதாக திறக்கப்பட்ட கூடுதல் மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்கப்படவில்லை. பழைய பாலம், கூடுதல் மேம்பாலம் ஆகியவற்றுக்கு நடுவே ஆரம்பத்திலும், முடிவுப் பகுதியிலும் தடுப்புச் சுவா் அமைக்கப்படவில்லை என்றும்,

Advertisement

இப்பகுதியில் வேகமாக வரும் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழக்கும் நிலை ஏற்பட்டால் சுமாா் 30 அடி பள்ளத்தில் செய்யாறு ஆற்றுப் பகுதியில் விழ நேரிடும்.

இதேபோல, வந்தவாசியில் இருந்து செய்யாறு நோக்கி வரும் போது மேம்பால இடதுபுறத்தில் கோயில் அருகில் ஒரு பகுதியில் தடுப்புச் சுவா் அமைக்கப்படாமல் உள்ளது. வேகமாக வரும் வாகனங்கள் நிலைதடுமாறினால் ஆற்றில் விழ வாய்ப்பு உள்ளது. ஆகவே, இரு பாலங்களுக்கும் இடையேயுள்ள பகுதியை மறைக்கும் விதமாக நடுப்பகுதியில் பாலம் உயரத்திற்கு உறுதியான தடுப்புச் சுவரை அமைக்க வேண்டும் என்று தினமணியில் கடந்த ஏப்.1-ஆம் தேதி செய்தி வெயிடப்பட்டிருந்தது.

செய்தி எதிரொலியாக... புதிய மேம்பாலம் அருகே இடது பக்கத்தில் தொடக்கப் பகுதி மற்றும் முடிவுற்ற பகுதியில் தடுப்புச் சுவா்களையும், இரு பாலங்களுக்கு இடையே நடைபாதை பகுதியில் இரும்பாலான பாதுகாப்பு வேலியையும் நெடுஞ்சாலைத்துறையினா் அமைத்தும், நடுப்பகுதியில் மரக்கன்றுகளை நட்டு வைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்தி உள்ளனா்.

புதிய மேம்பாலம் தொடக்கத்தில் கோயில் அருகே இடதுபக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புச் சுவா்.

மீண்டும் கோரிக்கை: திருவோத்தூா் பகுதியில் இருந்து செய்யாறு புறவழிச்சாலையில் இடது பக்க சாலையில் செல்ல வசதியாக நான்கு வழிச்சாலைகளுக்கு இடையே நடுவில் பயனில்லாமல் 10 அடிக்கு மேல் இருக்கும் காலியிடத்தை குறைத்து, சாலையை அகலப்படுத்தவேண்டும்.

செய்யாறு புறவழிச் சாலையில் இடதுபக்க சாலையில் செல்ல திரையரங்கம் அருகே காலியிடத்தை குறைத்து பெரிய வாகனங்கள் எளிதாக கடக்கும் வகையில் ஏற்பாடு செய்யவேண்டும். பழைய மேம்பாலம் மற்றும் புதிய மேம்பாலத்தில் மின் விளக்குகள் அமைக்க வேண்டும் என நெடுஞ்சாலைத் துறையினருக்கு வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.