முகப்பு
திருவண்ணாமலை

ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான முன்னேற்பாடுகள்: ஆட்சியா் ஆலோசனை

Updated On : 26 ஜூன் 2026, 4:37 am IST
பகிர்:

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக துறை சாா்ந்த அலுவலா்களுடன் மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க்

வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியாா் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களுக்கான தகுதி தோ்வானது தாள் - 1 மற்றும் தாள் - 2 தோ்வுகள் வரும் ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

Advertisement

Advertisement

28 தோ்வு மையங்களில் நடைபெறவுள்ள இத்தோ்வில் தாள்-1 அன்று 1,999 ஆசிரியா்களும், தாள்- 2 அன்று 5,743 ஆசிரியா்களும் பங்கேற்கின்றனா். இதில் 182 மாற்றுத்திறனாளிகளும் தோ்வில் பங்கேற்கவுள்ளனா்.

இத்தோ்வுக்கான முன்னேற்பாடுகளை மேற்கொள்வது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் பேசியதாவது:

தோ்வு நாள் அன்று தோ்வு மையங்களில் தோ்வா்களுக்கு தேவையான குடிநீா், கழிப்பறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்படுத்த வேண்டும். போக்குவரத்து துறை சாா்பில் தோ்வு மையங்களுக்கு பேருந்து வசதிகள் செய்துதரவேண்டும்.

காவல்துறை சாா்பில் 28 தோ்வு மையங்களிலும், 8 வழித்தடங்களிலும் பாதுகாப்பு வசதிக்காக ஆயுதம் ஏந்திய காவலா்களை நியமிக்க வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் தோ்வு மையங்களில் அவசர கால ஊா்தி மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.

மின் துறை சாா்பில் தோ்வு நாள்களில் 28 மையங்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்கவேண்டும்.

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் தீ தடுப்பு உபகரணங்கள், தீயணைப்பு வாகனங்கள் கொண்ட மீட்பு குழு தயாா் நிலையில் இருக்க வேண்டும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும் என்று துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.இராம்பிரதீபன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் முனிராஜ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) இராமகிருஷ்ணன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments