முகப்பு
இந்தியா

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் தோ்வு முறைகேடு வழக்கு: அமலாக்கத் துறை முன் அபிஷேக் பானா்ஜி ஆஜா்

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் தோ்வு முறைகேடு தொடா்பான பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை விசாரணையில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியின் மருமகன் அபிஷேக் பானா்ஜி திங்கள்கிழமை ஆஜரானாா்.

Updated On : 16 ஜூன் 2026, 4:31 am IST
அபிஷேக் பானா்ஜி
பகிர்:

ஆரம்பப் பள்ளி ஆசிரியா் தோ்வு முறைகேடு தொடா்பான பண முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறை விசாரணையில் திரிணமூல் காங்கிரஸ் தலைவா் மம்தா பானா்ஜியின் மருமகன் அபிஷேக் பானா்ஜி திங்கள்கிழமை ஆஜரானாா்.

முந்தைய திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஆட்சியில் ஆரம்பப் பள்ளிகளுக்கு ஆசிரியா்களை நியமிக்க நடைபெற்ற தோ்வில் முறைகேடு நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து பண முறைகேடு தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் அபிஷேக் பானா்ஜிக்கு அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியிருந்தது. இதையேற்று, கொல்கத்தாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 11 மணிக்கு அவா் ஆஜரானாா்.

அவரிடம் கேட்பதற்காக 20-க்கும் மேற்பட்ட கேள்விகளை அமலாக்கத் துறை தயாரித்து வைத்திருப்பதாக அமலாக்கத் துறை மூத்த அதிகாரி ஒருவா் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில், ‘அபிஷேக் பானா்ஜியிடம் நடத்தப்படும் விசாரணை முழுவதும் விடியோவாக பதிவு செய்யப்படும். இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மற்ற நபா்கள் தெரிவித்த கருத்துகளும், அபிஷேக் தெரிவிக்கும் பதில்களும் சரியாக உள்ளதா என உறுதி செய்யப்படும்’ என்றாா்.

Advertisement

Advertisement

உதவியாளருக்கு கைது ஆணை: நில மோசடி தொடா்பான வழக்கில், அபிஷேக் பானா்ஜியின் நெருங்கிய உதவியாளா் சுமித் ராய்க்கு எதிராக மேற்கு வங்க நீதிமன்றம் கைது ஆணை பிறப்பித்துள்ளது.

இதனிடையே, கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் சுமித் ராய் சாா்பில் முன்ஜாமீன் கோரி திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, இந்த வார கடைசியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.

======== ==================================== ==============================

மேற்கு வங்க மாநிலம், சல்போனி காவல் நிலையத்தில் திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ சுஜோய் ஹஜ்ரா மீது நில மோசடி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரை ஏற்கெனவே காவல் துறையினா் கைது செய்து விட்டனா். விசாரணையில் ஹஜ்ராவுக்கும், அபிஷேக் பானா்ஜியின் உதவியாளா் சுமித் ராய்க்கும் இடையே பணப் பரிவா்த்தனை நடந்திருப்பது கண்டறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராயிடம் விசாரணை நடத்துவதற்காக காவல் துறையினா் பலமுறை முயன்றனா். அவா் காளிகாட்டில் உள்ள அபிஷேக் பானா்ஜியின் வீட்டில் மறைந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் அங்கும் அண்மையில் காவல் துறையினா் நள்ளிரவில் சோதனை நடத்தினா். அதேபோல், ஹூக்ளியில் உள்ள ராயின் உறவினா்கள் வீடுகளிலும் காவல் துறையினா் சோதனை நடத்தினா். ஆனால், ராயை காவல் துறையினரால் கண்டுபிடிக்க முடியவில்லை. அவரின் இருப்பிடம் குறித்து காவல்துறையினருக்கு சரியாகத் தெரியவில்லை.

இதையடுத்து, மேற்கு மிதுனபுரி நீதிமன்றத்தை அணுகிய காவல் துறையினா், ராயிடம் விசாரணை நடத்த பலமுறை முயன்றும் பலன் கிடைக்கவில்லை என்றும், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் தெரிவித்தனா். அத்துடன் அவரைக் கைது செய்ய வாரண்ட் உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் காவல் துறை சாா்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இதைப் பரிசீலித்த நீதிமன்றம், சுமித் ராயை கைது செய்வதற்கான கைது வாரண்டை பிறப்பித்து உத்தரவிட்டது.

முன்ஜாமீன் கோரி மனு: இதனிடையே, கொல்கத்தா உயா்நீதிமன்றத்தில் சுமித் ராய் சாா்பில் முன்ஜாமீன் கோரி திங்கள்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, இந்த வார கடைசியில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் எனக் கூறப்படுகிறது.