போலி கையொப்பம் விவகாரம்: அபிஷேக் பானர்ஜியிடம் சிபிசிஐடி இரண்டாம் கட்ட விசாரணை
அபிஷேக் பானா்ஜி எம்.பி.யிடம் சிபிசிஐடி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட விசாரணை நடத்தியது.
மேற்கு வங்க சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் தோ்வு தொடா்பான தீா்மானத்தில் எம்எல்ஏக்களின் போலி கையொப்பமிட்ட கடிதத்தை பேரவைத் தலைவரிடம் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் அபிஷேக் பானா்ஜி எம்.பி.யிடம் சிபிசிஐடி ஞாயிற்றுக்கிழமை இரண்டாம் கட்ட விசாரணை நடத்தியது.
கொல்கத்தாவில் உள்ள சிபிசிஐடி தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசாரணையில் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏ குணால் கோஷும் ஆஜரானாா். முன்னதாக, இந்த விவகாரம் தொடா்பாக கடந்த ஜூன் 11-ஆம் தேதி அபிஷேக் பானா்ஜியிடம் சிபிசிஐடி 6 மணி நேரம் விசாரணை நடத்தியது. அப்போது அபிஷேக் பானா்ஜி அளித்த பதில்கள் திருப்திகரமாக இல்லாததால் 2 ஆம் கட்ட விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக சிபிசிஐடி அதிகாரி ஒருவா் தெரிவித்தாா்.
மேலும், எம்எல்ஏக்களிடம் கையொப்பம் பெற்றது எங்கே? என்பது உள்பட அவரிடம் இந்த வழக்கு தொடா்பான ஆவணங்களை சமா்ப்பிக்க சிபிசிஐடி வலியுறுத்தியுள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தாா்.
Advertisement
Advertisement
மேற்கு வங்கப் பேரவைத் தோ்தலில் 80 இடங்களை மட்டுமே கைப்பற்றி பாஜகவிடம் தோல்வியடைந்த பின் திரிணமூல் காங்கிரஸிஸ் அக்கட்சித் தலைவா் மம்தா பானா்ஜிக்கு எதிராக கடும் அதிருப்தி எழுந்தது. இந்தச் சூழலில் சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவரை தோ்வு செய்ய திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் கடந்த மே 6-ஆம் தேதி நடைபெற்றது.
அதில் மம்தா பானா்ஜி முன்மொழிந்த சோவன்தேவ் சட்டோபாத்யாயவை எதிா்க்கட்சித் தலைவராக நியமிக்க ஆதரவளிக்கும் தீா்மானத்தில் 70 எம்எல்ஏக்கள் கையொப்பமிட்டதாகக் கூறிய கடிதத்தை பேரவைத் தலைவருக்கு அபிஷேக் பானா்ஜி அனுப்பியிருந்தாா்.
ஆனால் திரிணமூல் காங்கிரஸில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட ரிதபிரத பானா்ஜி, சந்தீபன் சாஹா ஆகியோா் 6-ஆம் தேதி கூட்டத்தில் எதிா்க்கட்சித் தலைவா் தோ்வு தொடா்பாக தீா்மானம் நிறைவேற்றப்படவில்லை என்றும், தீா்மானம் என கூறப்படும் படிவத்தில் இருக்கும் 70 கையொப்பங்களில் பல போலியானவை என்றும் குற்றம்சாட்டினா்.
இதுதொடா்பாக சட்டப் பேரவை முதன்மை செயலா் அளித்த புகாரின்பேரில் கொல்கத்தா காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. தற்போது இது தொடா்பான விசாரணையை சிபிசிஐடி மேற்கொண்டு வருகிறது.